அன்புள்ள ஆசிரியர்களே – 8

கல்வி நிலையங்களின் விழாக்களில் கலந்துகொள்ளும் போதெல்லாம், மாணவ மாணவியருக்குப் பரிசளிக்கச் சொல்வார்கள். பரிசு வாங்கும் பிள்ளைகள் வரிசையில் நிறுத்தப்பட்டிருப்பார்கள்.

அறிவிப்புகள் ஆரம்பமாகும். முதல் பரிசு – இரண்டாம் பரிசு – மூன்றாம் பரிசு. அப்புறம் “ஆறுதல் பரிசு.” முதல் மூன்று வெற்றியாளர்களை கண்டறிகிறீர்கள். அடுத்ததாகவும் ஒரு பரிசை அளிக்கிறீர்கள். ஏனென்றால், அந்தக் குழந்தையிடம் ஒரு தனித்தன்மை இருக்கிறது. முதல் மூன்று வெற்றியாளர்களுக்குப் பக்கமாக வந்திருக்கிறது. மேலும் முயன்றால், அதனால் இன்னும் சிறப்பாக செயல்படமுடியும் என்று உணர்கிறீர்கள். அதை அங்கீகரிக்கும் விதமாய் ஒரு பரிசு தருகிறீர்கள். மிகவும் நல்ல விஷயம். ஆனால், அதை ஏன் ஆறுதல் பரிசு என்கிறீர்கள்?

நான் பங்கேற்கும் விழாக்களில் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்துவது, அதனை, “ஊக்கப் பரிசு” என்று சொல்லுங்கள் என்பதுதான்.

ஏனெனில், ஒரு மாணவனுக்கோ மாணவிக்கே, வெற்றி என்பது அவர்கள் அளவிலான மேம்பாடு. தன்னைத்தானே மேம்படுத்துவதால் வளர்ச்சி வருகிறது.

சரியாகப் பார்த்தால், முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள்கூட நிகரற்ற வெற்றியை எட்டிவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. வெண்கலப் பதக்கம் வெல்பவர், வெள்ளிப் பதக்கமும் தங்கப் பதக்கமும் வென்றவரிடம் தோற்கிறார். வெள்ளிப்பதக்கம் வென்றவர், தங்கப் பதக்கம் வென்றவரிடம் தோற்கிறார். தங்கப் பதக்கம் வென்றவரோ, அந்தத் துறையில், இன்னும் முறியடிக்கப்படாத சாதனையை செய்தவரிடம் தோற்கிறார்.

அந்த சாதனையைச் செய்தவரோ, எதிர்காலத்தில் அதனை முறியடிக்கப் போகிறவரிடம் தோற்கப் போகிறார். எனவே ஒப்பீட்டளவில் எல்லோரும் தோற்பவர்கள். தனித்தனியாய்ப் பார்த்தால் ஒவ்வொரு வெற்றியிலும் மனிதர்கள் மேம்படுகிறார்கள். எனவே, பதக்கங்கள் வெல்லத் தூண்டுவதைப் போலவே, பங்கேற்பின்மூலம் திறமைகள் படிப்படியாய் முன்னேறி வருவதையும் மாணவ மாணவியரின் கவனத்திற்குள் கொண்டு வருவது ஆசிரியர்களின் கடமை.

தோட்டக்காரர், ஒவ்வொரு செடியையும் சீர்திருத்துகிறார். உதிர்ந்த இலைகளை அப்புறப்படுத்துகிறார். உரிய உரங்கள் இடுகிறார். நீர் வார்க்கிறார். பூக்கிற பூவை, காய்க்கிற காயை, கனிகிற கனியை உலகம் பயன்படுத்துகிறது. தோட்டக்காரர், தொடர்ந்து செடிகளைப் பராமரிக்கிறார்.

ஓர் ஆசிரியரின் பணிப்பயணம், இந்தத் தோட்டக்காரரைப் போன்றதுதான். வெய்யிலில் காய்ந்தாலும் பனியிலும் மழையிலும் குளிர்ந்தாலும் தாக்குப்பிடிக்கிற தாவரங்கள் மாதிரி, உறுதிமிக்க உள்ளம் வாய்ந்த குழந்தைகளை உருவாக்குவதில் ஆசிரியரின் பங்கு அற்புதமானது.
கை நிறைய இருக்கும் விதைகளுடன் செழிப்பான வனத்தை உருவாக்கும் சிறப்பான பணியில் இருக்கும் ஆசிரியர்கள், செடிகளை தனித்தனியே கண்காணிக்கும் தோட்டக்காரனைப் போல குழந்தைகள் மேல் தனித்தனியே கவனம் செலுத்துகையில் அருமையானதொரு பிணைப்பு உருவாகிறது.

கல்வி கற்கும் நிலையைக் கடந்து, வளர்ந்து பெரிதானபிறகும்கூட தங்கள் வழிகாட்டிகளாய் ஆசிரியர்களையே வகுத்துக் கொள்கிறார்கள். சின்னஞ்சிறு வயதிலிருந்து யார் ஒருவரை கவனித்தும் கண்காணித்தும் வருகிறார்களோ, அவர்கள் வாழ்வின் எந்தச் சூழலிலும் வழிகாட்ட முடியும்.

உதாரணமாக, ஒரு மாணவர் தன் தொடக்கப்பள்ளி ஆசியருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார். மாணவர் வளர்ந்து தொழிலதிபர் ஆகிறார். அவர் ஈடுபடும் தொழில் பற்றி அவருடைய ஆசிரியருக்குத் தெரியாமல் இருக்கலாம்.

ஆனால், அந்த மாணவர் தன்னைத்தானே எப்படி நடத்திக் கொள்ள வேண்டும், தொழிலில் மனித உறவுகளை எப்படிக் கையாள வேண்டும். பணியாளர்களின் குறைகளை எப்படி அனுசரித்துப் போக வேண்டும் என்றெல்லாம் வழிகாட்டுகிற வல்லமை அந்த ஆசிரியருக்கு நிச்சயமாக இருக்கும்.

ஏனெனில், அவருக்க தன் மாணவனின் மன இயல்பு தெரியும். தனிமையில் ஒருவரின் மன இயல்புகள் செயல்படும் விதமானது சமூகச் சூழலில் செயல்படும் நேரங்களில் எப்படி பிரதிபலிக்கும் என்கிற நுட்பமான அவதானிப்பு, ஆழமான கண்காணிப்பில் விளைகிறது.

பெற்றோர்களைப் போலவே ஆசிரியர்களும் இதில் தேர்ந்தவர்கள். சாணக்கியரின் வழிகாட்டுதலை சந்திரகுப்தன் பெரிதும் போற்றியதும் இதனால்தான்.

ஒரு மாணவன், தன்னில் இருக்கும் தடைகளைத் தாண்டி வருவதுதான் மிகப்பெரிய சவால். வாழ்வில் சாதனை என்பது பெரிய விஷயமென்று சொல்லித் தரப்பட்டுள்ளது. அது உண்மையும்கூட.

ஆனால் சாதனைக்கான தகுதிகள், இயல்புகள் ஆகியவை சின்னச் சின்ன நல்ல பண்புகளால் உருவாகிவருபவை.

ஒரு மாணவனிடம், நல்ல பண்புகளை, சீர்மைகளை உருவாக்கி வளர்ப்பதாகட்டும், ஏற்கனவே இருக்கும் பண்பை அடையாளம் கண்டு ஊக்கப்படுவதாகட்டும், இவைதான் ஓர் ஆசிரியர் செய்யக்கூடிய அதிகபட்ச நன்மை.

“இந்தக் குணங்களை வளர்த்துக் கொள்ளும் இயல்புதான் வாழ்நாள் முழுவதும் உன்னைக் காப்பாற்றப் போகிறது” என்று ஆசிரியர் சொல்கையில், மாணவனுக்கு அதுவே வேத வாக்காகிறது.

காரணம், தன்னால் சில விஷயங்கள் முடியும் என்பதை உலகம் கவனித்துச் சொல்லும்முன் ஆசிரியர் கவனித்துச் சொல்கிறார். அந்த கணத்தில் ஆசிரியரே அந்த மாணவனின் உலகமாக இருக்கிறார்.

தாவரங்களிடம் தோட்டக்காரர் காட்டும் தாய்மையும் தோழமையும் ஆசிரியர்களிடமிருந்து மாணவர்களுக்கும் கிடைத்தால் அந்த மாணவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

மரபின் மைந்தன் முத்தையா

                                                                                                                                       (தொடர்வோம்)

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *