அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

காட்டுவித்தவள் அவளே

நம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சின்னச் சின்ன சம்பவங்கள் அவள் நமக்குத் துணையிருக்கிறாள் என்று காண்பிக்கும். அது போதுமா நமக்கு? அவள் எவ்விதத்தில் இருக்கிறாளோ அவளை அந்தவிதமாகவே காணவேண்டும் என்கிற ஆவல்தான் எல்லா பக்தர்களுக்கும் வரும். அதைக் காண்பதற்கான தகுதியையும் அவள்தான் தருகிறாள்.

மாமா மச்சான் என்று பழகிக்கொண்டிருந்த அர்ஜுனனுக்கு விஸ்வரூபம் காட்டுகிறபோது அதற்குரிய கண்களை அருளுகிறார் கிருஷ்ண பரமாத்மா. அம்பிகையை உள்ளவண்ணம் அறிந்து கொள்கிற தகுதியையும் அவளே தருகிறாள்.

அவளுடைய திருவுருவத்தை இதயத்திலே பதிப்பது, அதை உள்ளே காண்பது, உள்ளே காண்பதையே எல்லா இடங்களிலும் காண்பது, அபிராமி அந்தாதியின் சாரமே இதுதான்.

அம்பிகையின் வழிபாடு மிகவும் எளிமையானது. தன்னை உள்ளவண்ணம் காட்டிய பிறகு அந்தக் கண்களுக்கும், மனத்திற்கும் வருகிற மகிழ்ச்சி இருக்கிறதே, அந்த மகிழ்ச்சிக்கும் அபிராமி என்றுதான் பெயர் என்று பட்டர் கூறுகிறார். எல்லாம் அவளாக இருக்கிற போது என் கண்ணும் மனமும் மட்டும் வேறாக இருக்க முடியுமா?

“தன்னை உள்ள வண்ணம் காட்டியவா,
கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா”

அடுத்த வரியில்தான் இந்த சம்பவம் நடந்ததற்கான ஆதாரத்தை வைக்கிறார்.

இந்த நாடகத்தை நடத்தியவளே நீதானே. இந்த முழு நாடகத்தை நடத்தி வைத்தாய், தங்கம் போல் ஒளிவீசக் கூடிய தாமரை வடிவிலான என் தேகத்தில் இருக்கிற சக்கரங்களிலெல்லாம் எழுந்தருளியிருக்கிற பரா சக்தியே. தங்கம்போல் ஒளிவீசக்கூடிய சக்கரங்கள், அதில் அவள் வீற்றிருக்கிறாள். இது அகச்சான்று.

இதற்கு நெஞ்சோடு கிளத்தல் என்று பெயர். பரவசம் தாங்காமல் அபிராமி பட்டர் குதிபோடுகிற இடம் இந்தப் பாடல்.

(இந்தப் பாடல் முடிந்தவுடனே சரபோஜி மன்னர் ஓடிவந்து பாதங்களில் விழுந்து பட்டருக்கு நிறைய செல்வங்களைத் தர முன்வந்ததாகவும் அதை பட்டர் மறுத்தாகவும் அதனால் அங்கே அளக்கக்கூடிய நிலங்களிலிருந்து ஒரு குறுணி நெல் அவருக்கு வர வேண்டுமென்று விதித்ததாக வரலாறு கூறுகிறது.

பட்டருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்திருக்கிறார்கள். அபிராமியின் சாந்நித்தியத்தை வெளிப்படுத்தியதற்காக கிடைத்த பொருளை தான் வெளிப்படுத்தியதற்காக கிடைத்த பொருளை தான் அனுபவிக்கக்கூடாது என்பதற்காக எல்லாவற்றையும் அவர் கோவிலுக்கே கொடுத்துவிட்டு இரண்டு பெண்களையும் அழைத்துக் கொண்டு வெளியூருக்குப் போய்விட்டார் என்றும், அபிராமி பட்டருடைய பரம்பரை என்பதனாலே தேடி வந்து எந்த செலவும் இல்லாமல் பெண்களை திருமணம் செய்து கொண்டு போனார்கள் என்றும், அவர் வழியிலே வந்த மார்க்கண்டர் என்ற 90 வயது பெரியவர் இன்றும் இருக்கிறார் என்றும் கேள்விப்பட்டுள்ளேன்.)

கூட்டிய வாஎன்னைத் தன்னடியாரில் கொடியவினை
ஓட்டிய வாஎன் கண் ஓடிய வாதன்னை உள்ளவண்ணம்
காட்டிய வாகண்ட கண்ணும்மனமும் களிக்கின்றவா
ஆட்டிய வாநடம் ஆடகத்தாமரை ஆரணங்கே.

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *