உருகும் பக்குவம்

அம்பிகையினுடைய திருவடிகளில் ஈடுபட்டதனாலே தனக்கு என்ன நிகழ்ந்தது என்பதை இந்த இடத்தில் அபிராமி பட்டர் சொல்கிறார்.

பதத்தே உருகி என்றால் தாய்மார்களுக்கு நன்றாகத் தெரியும். சமைக்கிறபோது ஒரு பதம் வந்துவிட்டதா என்று நாம் பார்ப்போம்.

நீங்கள் வீட்டில் மைசூர்பாகு செய்தால் பதத்தில் அது இறுகும். ஆனால் இந்த மனம் பதத்தில் உருகும். அதுதான் வித்தியாசம்.

பக்குவம் வந்தபிறகு உள்ளம் உருகிக் கொண்டே இருக்கும். எதைப் பார்த்தாலும் உள்ளம் உருகும். எதையும் ஏற்காமல் இறுக்கமாக இருந்தால் அதற்கு பதம் என்று பெயரில்லை. இறைவனுடைய திருவடிகளுக்கு பதம் என்று பெயர். நம்மைப் பார்க்க எப்போதும் உருகிக் கொண்டே இருக்கிறான் இறைவன். உயிரின் நிலையைப் பார்த்து உருக்கத்திலேயே இருப்பதால் அவனுடைய பாதங்களுக்கு பதம் என்று பெயர் வந்தது.

“நீ என்ன வரையறை செய்தாயோ அதன்படி என் வாழ்க்கை என்று உனக்கு முழு அடிமை தரக்கூடிய நிலையிலே நீ என்னைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறாய். இனிமேல் வேறு மதத்தில் இருக்கக்கூடிய ஈடுபாட்டிலே இறங்கிப் போகமாட்டேன்” என்கிறார் அபிராமி பட்டர்.

முந்நூறு வருடங்களுக்கு முன்னால் அபிராமி பட்டர் திருக்கடவூரில் வாழ்ந்த காலத்திலேதான் தரங்கம்பாடியில் டச்சு நாட்டவர்கள் வந்து இறங்கி மதமாற்றம் தொடங்கிய காலம். அந்த இந்தப் பாடலில் வெளிப்படுத்துகிறார்.

ஒரே பாதையில் போய்க் கொண்டு வருபவர்களுக்கு வழியில் வேறு ஒரு கிளைப்பாதையில் போகத் தோன்றாது. அது வேறு எங்காவது சுற்றிவிடும் என்பது தெரியும்.

சிலர் தவறாக பாதையில் போகிறார்கள் என்பதற்காக வழி தெரிந்தவன் தவறான வழியில் போகமாட்டான். அம்பிகையின் வழிபாடுதான் என்னை முக்திக்குக் கொண்டு சேர்க்கும் என்ற தெளிவு யாருக்கு இருக்கிறதோ அவர்கள் அந்தப் பாதையில் போவார்களே தவிர திசை மாறிய பாதையில் போகமாட்டார்கள்.

அம்பிகைக்கு இங்கே புதிதாக ஒரு வார்த்தை கொடுக்கிறார், முகிழ்நகை. சிவபெருமானுடைய சிரிப்பு எத்தகையது என்பதை திருநாவுக்கரசர் சொன்னதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அது குமிழ் நகை. பொங்கிப் பொங்கி வரும் சிரிப்பு அது. முகிழ்த்தல் என்றால் அப்போது அரும்புகிற நகை.

சிலர் செயற்கை சிரிப்போடு இருப்பார்கள். எதிரே வந்தவுடன் பளிச்சென்று ஒரு புன்னகை வரும், நாம் அவர்களைத் தாண்டிக்கூட போயிருக்க மாட்டோம். அந்தப் புன்னகை அப்படியே காணமல் போய்விடும்.

ஆனால் அம்பிகை ஒவ்வோர் அடியாரைப் பார்க்கிற போதும் அவர்களுக்கென்று பிரத்தியேகமாக ஒரு சிரிப்பைத் தருகிறாள்.

முகிழ் நகை என்றால் அப்போது தோன்றுகிற நகை என்று அதற்குப் பொருள். யாருடைய உள்ளம் பக்குவம் அடைந்துவிட்டதோ, யார் அம்பிகையினுடய திருவடிகளே சதம் என்று பதற்றுகிறார்களோ, அவர்கள் வேறு மதத்திலே ஈடுபட மாட்டார்கள். வேறு வழியிலே போகமாட்டார்கள் என்பதை உறுதிப்பிரமாணமாக அம்பிகைக்குச் சொல்கிறார். மூவர், முக்கோடி தேவர், அடியார்கள் என்று எத்தனை பேர் வந்தாலும் அனைவருக்கும் புன்னகை பூக்கிறாள் அம்பிகை.

பதத்தே உருகிநின் பாதத்திலேமனம் பற்றிஉன்றன்
இதத்தே ஒழுக அடிமைகொண்டாய்இனி யான் ஒருவர்
மதத்தே மதியங் கேண்அவர்போனவழியும் செல்லேன்
முதத்தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *