https://www.youtube.com/watch?v=ys7U27Xn_EA

 

அந்தாதியில்  அம்பிகையின் திருமுலைகள் பற்றிய குறிப்புகள் ஏராளமான  இடங்களில் தென்படுகின்றன. அவை பிரபஞ்சத்  தாய்மையின் பெருஞ் சின்னங்கள். பரஞானம் அபரஞானம் ஆகியவற்றின் அடையாளங்கள். அம்பிகையின் அளப்பரிய கருணைப் பெருக்கத்தின் குறியீடுகள். அதன் பேரருட்தன்மையைத் தாங்கும் திறன் யாருக்கும் இல்லாததால் அவள் உண்ணாமுலையம்மை என்று குறிக்கப்படுகிறாள்.

 

அன்னையின் திருமுலைப்பாலை அவளே குழைத்து ஊட்டி ஞானக் குழந்தைகளை உய்விக்கிறாள். அன்னையின் திருமுலைகள் கருத்திருக்கின்றன. சிவபெருமானின் திருவிழிகள் ஒத்திருக்கின்றன. இங்கொரு கேள்வி எழலாம். சிவபெருமானுக்கு மூன்று திருவிழிகளாயிற்றே! அதிலும் ஒரு பொருத்தம் இருக்கத்தான் செய்கிறது.

 

மதுரையில், பாண்டியனின் திருமகளாய் தடாதகைப்பிராட்டி என்னும் திருநாமத்துடன் அம்பிகை தோன்றியபோது அவளுக்கு மூன்று திருமுலைகள். சோமசுந்தரக் கடவுளை நேருக்கு நேராக பார்த்ததில் மூன்றாம் திருமுலை மறைந்தது.

 

குறும்புக்காராகிய காளமேகம் இந்தக் கதையைச் சொல்ல வரும்போது தென்னம்பிள்ளைக்கு ஒருகுலை மூன்று குரும்பி என்கிறார். தென்னவனின் பிள்ளையாகிய தோன்றிய அம்பிகை என்று பொருள். சிவபெருமான் திருநோக்கில் ஒருமுலை குறைந்தது என்று சொன்னால் அவர் காளமேகம் அல்லவே.

 

கொள்ளிக் கண்ணன் திருட்டியினால்  ஒன்று குறைந்ததுவே என்கிறார்.

 

“கருத்தனஎந்தை தம் கண்ணைவண்ணக் கனகவெற்பில்

பெருத்தனபால், அழும்பிள்ளைக்கு நல்கின

 

அழுகிற பிள்ளைக்கு அளவான, அறிவான, ஞானப்பாலை நல்கும் பரிவும் பக்குவமும் அம்பிக்கைக்குத்தான் உண்டு. உடமன்பு என்ற குழந்தை பாலுக்கழுதபோது சிவபெருமான் ஒரு பாற்கடலையே கொடுத்துவிட்டார். பாலுக்கழுத பிள்ளைக்குப் பாற்கடல் ஈந்தபிரான் என்று இதில் பெருமை வேறு!! திருமுலைப்பாலில் திருஞானத்தையும் குழைத்துத் தருபவள் அம்பிகைதான். சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலாயத்தைவிடவும் பெருமை மிக்கதாகிய அம்பிகையின் திருமுலைகள், அவள் சூடியிருந்த முத்தாரம், மயில்தோகையின் குருத்துபோல் வரிசையான அவளது பற்கள் ஒளிர்கின்ற புன்னகை இவற்றை மனதில் நினைத்து தியானிக்கிறபோது, அம்பிகையே நேரிலும் வரவேண்டும் என்று விண்ணப்பிக்கிறார் அபிராமி பட்டர்.

 

கருத்தனஎந்தை தன் கண்ணைவண்ணக் கனகவெற்பில்

பெருத்தனபால் அழும்பிள்ளைக்கு நல்கினபேரருள் கூர்

திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்

முருந்தன மூரலும் அம்மே நீயும் வந்து என்முன்னிற்கவே!

 

நண்பர் ஒருவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம் வாயில்மணி ஒலிக்கிறது. கதவைத் திறந்தால் அதே நண்பர் நிற்கிறார். உங்களைப் பற்றிதான் யோசித்துக் கொண்டிருந்தேன். நீங்களே வந்துவிட்டீர்கள் என்று வியப்போடு வரவேற்கிறோம். விழிப்புணர்வில்லாத நிலையிலும் அவரின் வருகையை உள்ளுணர்வு முந்திக்கொண்டு முன்மொழிகிறது.

 

ஆனால் சதாசர்வ காலமும் தங்கள் இஷ்ட தெய்வத்தின் தியானத்திலேயே இருப்பவர்கள் அந்த அபூர்வ தரிசனத்திற்காக எப்போதும் தயாராகத்தான் காத்திருப்பார்கள்.

 

நீலச்சிகண்டியில் ஏறும் பிரான் எந்த நேரத்திலும்

கோலக் குறத்தியுடன் வருவான் என்பார் அருணகிரிநாதர்.

 

உன்திருத் தோற்றத்தை மனதில் நிறுத்தி நான் தியானிக்கும் போதே அம்மா நீயும் வந்து நில்  என்கிறார் அபிராமிபட்டர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *