அபிராமி அந்தாதி – 14

மூத்தவளா? ஏத்தவளா?

தென்காசியில் ரசிகமணி டி.கே.சி விழா. அவருடைய இல்லமாகிய பஞ்சவடியில் அவர்தம் பெயரர்கள் திரு.தீப.நடராஜன், திரு.தீப.குற்றால லிங்கம் ஆகிய பெருமக்களின் அன்பு விருந்தோம்பலில் திளைத்துக் கொண்டிருந்தோம். ராஜாஜி, ஜஸ்டிஸ் மஹராஜன், தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், வித்வான் ல.சண்முகசுந்தரம் போன்ற பெரியவர்கள் அமர்ந்து கலை இலக்கியங்களை அனுபவித்த சந்நிதானம் அது.

கலை இலக்கிய ரசனையில் டி.கே.சி என் ஆதர்சம். கம்பனில் பல மிகைப்பாடல்களை அடையாளம் கண்டதுடன் சில திருத்தங்களையும் செய்திருக்கிறார். அதனால் வாழுங்காலத்திலும் சரி, அதன்பின்பும் சரி, சில விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறார். கம்பனில் மட்டுமின்றி பல இலக்கியங்களிலும் அவருடைய கைவண்ணம் உண்டு.

இடைச்சொருகல், பாடபேதம் போன்ற சாபங்களால் கல்லாய்ப்போன பல கவிதை அகலிகைள் அவருடைய கைவண்ணத்தால் உயிர்பெற்றதுண்டு. அவரை ரஸஞ்ஞானி என்பது மிகப்பொருத்தம்.

அவர் வாழ்ந்த காலத்தில் அவருடன் நெருங்கிப் பழகியவர்களில் ஒருவரான தீட்சிதருடன் பேசிக் கொண்டிருந்தேன். “ரசிகமணி அபிராமி அந்தாதியிலும் ஒரு திருத்தம் செய்திருக்கிறார் தெரியுமா?” என்றார். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. முதலாவது அந்தாதியில் பாடபேதத்துக்கோ இடைச் செருகலுக்கோ இடமில்லாத வகையில் யாப்புச்செப்பம் மிகச்சரியாக உள்ளது. கட்டளைக் கலித்துறையாக மட்டுமின்றி அந்தாதி முறையிலும் அமைந்துள்ளதால் தவறுகளுக்கு வாய்ப்பில்லை.

“என்ன திருத்தம்” என்று ஆர்வமாகக் கேட்டேன். “பூத்தவளே! புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே!’ என்ற பாடல் இருக்கிறதல்லவா! அதில் ‘கறைக்கண்டனுக்கு மூத்தவளே’ என்று வருகிறது. கணவனைவிட மனைவி மூத்தவள் என்று சொல்வது பொருத்தமாக தோன்றவில்லை. எனவே ‘கறைக்கண்டனுக்கு மூத்தவளே’ என்பதை ‘கறைக்கண்டனுக்கு ஏத்தவளே’ என்று டி.கே.சி சொல்வார்” என்றார்.

நான் சிரித்துக் கொண்டே, “இந்தத் திருத்தம் நயமாக இருக்கிறதே தவிர நியாயமாக இல்லை. சக்தி தத்துவத்திலிருந்து சிவ தத்துவம் தோன்றியது என்ற கோட்பாட்டின்படி கறைக்கண்டனக்கு மூத்தவளே என்பதுதான் சரி” என்றேன். தீட்சிதர் சிரித்துக்கொண்டே, “அவாளுக்கு தத்துவ ஆராய்ச்சி யெல்லாம் முக்கியமில்லை” என்றார்.

இந்த உலகம் எப்படித் தோன்றியது?

“நீலமேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகம் முகிழ்த்தன முறையே”

என்று படித்திருக்கிறோம். மூவுலகங்களை மட்டுமல்ல. பதினான்கு உலகங்களையும் பூத்திடச் செய்தவள் பராசக்தி. சிலர் தங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லையென்பார்கள். ஆனால் ஏதோவொரு சக்தி இருக்கிறதென்றும் சொல்வார்கள். பிரபஞ்சத்தைப் பார்க்கையில் அப்படியொரு சக்தி இருப்பதை உணர முடிகிறது.

பராசக்தி பதினான்கு உலகங்களையும் பூத்திடச் செய்தவள் மட்டுல்ல. அந்தப் பதினான்கு உலகங்களாகவும் அவளே பூத்து நிற்கிறாள். பூத்ததுடன் நில்லாமல், சின்னஞ்சிறிய புல்பூண்டுகளில் இருந்து பெரிய பெரிய கோள்கள் வரை அவை எந்த நோக்கத்துக்காக உருவாயினவோ அந்த நோக்கம் குன்றாமல் இயங்கவும் அவளே அருள்கிறாள். உரிய காலத்தில் அனைத்தையும் மறைத்திடும் அருளாகவும் அவளே திகழ்கிறாள்.

“பூத்தவளே! புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே! பின் கரந்தவளே!”

என்கிறார் அபிராமி பட்டர்.

சிவஞானசித்தியார், “சக்திதான் சிவத்தையீனும்” என்கிறது. சிவத்தின் அருளே சக்திதான் என்றொரு கோட்பாடும் உண்டு. அருளும் தன்மைதான் இறைவனின் மூல இயல்பே தவிர இறைவனென்று ஆனபின் அருள்தன்மை தோன்றவில்லை. அருட்தன்மையே இறைத்தன்மையின் ஆதாரம். எனவே
“கறைகண்டனுக்கு மூத்தவளே” என்கிறவர், அதே கையோடு “மூவா முகுந்தற்கு இளையவளே!” என்கிறார். முதுமையே காணாத திருமாலின் தங்கையும் அவளே! கறைக்கண்டனுக்கு மூத்தவளும் அவளே!!

சிவத்தினை அடைய தவத்தினை மேற்கொண்டவர்களில் தலையாயவள் அம்பிகைதான். இமயமலையில் கடுந்தவம் ஆற்றியதிலிருந்து குமரி முனையில் அஞ்சு கனல் நடுவே நிகழ்த்திய நெடுந்தவம் உட்பட எத்தனையோ விதங்களில் அத்தனை நினைத்துத் தவமியற்றியவள் அன்னை. எனவே “மாத்தவளே! உனையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே!” என்கிறார். அபிராமி எவ்விதம் சிவனுக்கு மூத்தவள் என்பதற்கும் அவளையன்றி வேறு தெய்வங்களை ஏன் வணங்கத் தேவையில்லை என்பதற்கும் இனிவரும் பாடல்களிலும் நிறைய விளக்கங்களை நாம் பார்க்கப் போகிறோம்.

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *