அபிராமி அந்தாதி 3

3. விரலருகாய்….. வெகு தொலைவாய்….

அம்பிகைமீது அன்புச் சதோதரர் இசைக்கவி ரமணன் எழுதிப்பாடும் பாடல்களில் ஒரு வரி…
“விரலருகாய் வெகுதொலைவாய்
இருக்கின்றாய்.. உன்னை
வென்றோம் என்றவர் நெஞ்சில் அமர்ந்து
விழுந்து விழுந்து சிரிக்கின்றாய்.”

சென்றடையாச் செல்வம் என்று நாயன்மார்கள் இறைவனைக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு அதே இறைவன் தொடரும் துணையாய் வந்து கொண்டேயிருக்கிறான். முந்தைய அந்தாதிப் பாடல் அம்பிகையை விழுத்துணை என்கிறது. வழித்துணை, இல்லறத்தைப் பகிர்ந்து கொள்ளும் வாழ்க்கைத்துணை, செய்யும் தொழிலில் உதவும் வணிகத்துணை, இவற்றில் பல வழியிலேயே போகும். சில வந்தவுடன் போகும். சிலவோ போகவென்றே வரும்.

ஆனால் அம்பிகை நிலையான துணையாய் நிரந்தரப் பற்றுக்கோடாய் பக்கத்திலேயே இருக்கிறாள். “துணையும்” என்கிறார் அபிராமிபட்டர். பெரும்பாலும் பக்கத்திலேயே இருக்கும் ஒன்றின் அருமை அநேகருக்குத் தெரியாது. அளப்பருங்கருணையால்தான் அம்பிகை அருகில் இருக்கிறாளே யன்றி அவள் பென்னம் பெரியவள் என்ற பிரக்ஞையும் நமக்கு வேண்டும். எனவே , “தொழும் தெய்வமும்” என்கிறார் பட்டர்.

தொழும் தெய்வமாக இருக்கும் அபிராமி பெற்ற தாயாகவும் பரிவு காட்டுகிறாள். ஒன்றின் பிரம்மாண்டம் நமக்குப் புரிந்தவுடனே அந்தப் பெருஞ் சக்திக்கு நாமெல்லாம் ஒரு பொருட்டா என்கிற கேள்வியும் கூட வரும்.

உலக வாழ்வில்கூட ஒருவரை எவ்வளவுதான் நெருக்கமாய் உணர்ந்தாலும் அவரது பெருமை புரியப் புரிய மனதுக்குள்ளொரு சிறு நெருடல், ஏக்கம், விலகல் ஏற்படும்.

மனிதர்களிடையிலேயே இப்படியென்றால் தெய்வத்துடனான உறவில் கேட்கவே வேண்டாம். ஆனால் அபிராமி துணையாகவும் தொழும் தெய்வமாகவும் மட்டுமின்றி பெற்ற தாயாகவும் இருக்கிறாள். மூவுலகங்களையும் ஆளும்போதே பிள்ளையின் அழுகுரல் கேட்டால் ஓடோடி வரும் பேரன்பு வடிவம் அவள்.

“பிரபஞ்சங்கள் கருப்பையில் பெற்றெடுத்து வளர்ப்பாள்
பிரியத்தில் ஒருமகனைப் பெற்றவள் போல் இருப்பாள்
நகரத்தில் நான்வீழத் தாங்காதவள் – இங்கு
நான்பிறந்த காரணத்தால் தூங்காதவள்”
என அம்பிகை பற்றி முன்னர் ஒருமுறை எழுதியிருந்தேன்.

தனிமனித நிலையில் துணையாய் தொழும் தெய்வமாய் பெற்ற தாயாய் இருக்கும் அபிராமி, வேதம் என்கிற விருட்சத்தின் நடுவாகவும் உச்சியாகவும் வேராகவும் இருக்கிறாள். இதில் வேர் என்பது பிரணவம். பணை என்பது நால்வேதங்கள். கொழுந்து, வேதத்தின் உச்சியில் விரியும் மலர்க்கொத்தான உபநிடதங்கள் அத்தனையுமே அம்பிகைதான்.

உணர்வின் தேடலில் உறவுகளின் உச்சமான அன்னையாய், தெய்வமாய், நிலையான துணையாய் இருக்கும் அம்பிகை, அறிவினை தேடலிலோ பிரணவமாய் பிரணவத்தின் விரிவான வேதமாய், வேதத்தின் சாரமாய் விளங்குகிறாள்.

பொதுவாக தெய்வங்கள் கைகளில் சிலவற்றை வைத்திருக்கும். அபிராமியின் கைகளில் இருப்பவையோ அவளைத் தாமாகத் தேடிவந்தவைதான். பனி படர்ந்த மலர்க்கணைகள் கரும்புவில் பாசம் அங்குசம்.
“பனிமலர்பூங்
கணையும் கருப்புச் சிலையும் மென்பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரியாவது அறிந்தனமே”

மலர்க்கணையும் கரும்புவில்லும் மன்மதனின் ஆயுதங்கள். உயிர்கள் பிறக்கக் காரணமானவை. பாசமும் அங்குசமும் எமனின் ஆயுதங்கள். உயிர்கள் இறக்கக் காரணமானவை.

தங்கள் வாழ்வில் தெய்வ சாநித்யம் மலரும் வாய்ப்பை மறுப்பவர்கள்தான் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட சுழற்சியில் சிக்குகிறார்கள். அம்பிகையின் கருணை வளையத்துக்குள் தங்களை ஒப்புக் கொடுத்தவர்களோ இந்த வட்டத்திலிருந்து வெளியேறுகிறார்கள்.
எனவே அம்பிகையின் பக்தர்கள் தங்கள் அதிகார எல்லைக்குள் வரமாட்டார்கள் என்பதை உணர்த்தும் விதமாக தங்கள் அதிகார அடையாளங்களாகிய ஆயுதங்களை மன்மதனும் எமதர்மனும் அபிராமியின் திருக்கரங்களில் ஒப்படைத்துவிட்டனர். அவையும் அம்பிகையின் மலர்க்கரங்களை அபயமென அணைந்தன.

அம்பிகைக்கு ஆட்பட்டவர்கள் பிறப்புக்கும் இறப்புக்கும் அப்பாற்பட்டவர்கள் என்று சொல்வதன் தாத்பர்யம் அபிராமி அந்தாதியில் போகப்போக மிக நன்றாக புரியும். இப்போதைக்கு அம்பிகையின் கைகளை வந்தடைந்த ஆயுதங்களைப் பாருங்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட மலர்க்கணைகள் பழையவை அன்று. பனி படர்ந்திருக்கும் புத்தம் புதிய மலர்கள். அவள் ஏற்படுத்தும் உறவுகள் பந்தங்களையோ நிர்ப்பந்தங்களையோ ஏற்படுத்தாமல் வையத்துள் வாழ் வாங்கு வாழ்ந்து உய்கதிக்கு உதவுபவை.

எமனின் கரங்களில் கொடூரமான ஆயுதிமாகக் காணப்படும் பாசாங்குசமோ அபிராமவல்லியின் கரங்களில் மென்பாசாங்குசமாகக் திகழ்கின்றது. ஏனெனில் இங்கே அது மரணத்தின் ஆயுதமல்ல முக்தியின் ஆயுதம்.

பெரும்பேராற்றலால் எட்ட முடியாத தொலைவிலும் பெருங்கருணைப் பெருக்கால் உயிருக்கும் மிக அருகிலும் இருக்கும் அபிராமியை அறிந்து கொள்வதிலும் அறிவிப்பதிலும்தான் அபிராமிபட்டருக்கு எத்தனை ஆனந்தம்!!

துணையும் தொழுந்தெய்வ மும்பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங்
கணையும் கருப்புச் சிலையும்மென் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரியாவது அறிந்தனமே.

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *