அபிராமி அந்தாதி – 6

கடலைக் கடைந்ததே வேண்டாத வேலை!

திரிபுரங்களை ஆள்பவள் திரிபுரசுந்தரி. மனிதனின் உடல் மனம் உயிர் ஆகிய முப்புரங்களையும் அவளே ஆள்கிறாள். இந்த முப்புரங்களிலும் உள்ளும் புறமுமாய்ப் பொருந்துகிற அபிராம வல்லியின் திருமுலைகள் செப்புக் கலசங்களைப் போன்றவை. தனபாரங்களால் அம்பிகையின் இடைகள் வருந்துகின்றன.

சைவ சித்தாந்தத்தில் அம்பிகைக்குத் தரப்பட்டிருக்கும் மிக முக்கியமான திருநாமம் மனோன்மணி. நெற்றிப் புருவங்கள் நடுவிலான பீடம் அவளுடையது. மனவுறுதிக்கும் மேம்பட்ட ஆத்மசாதனைக்கும் அவளே அதிபதி. கடலின் அலைகள் சலசலக்கின்றன; நடுக்கடல் சலனமில்லாமல் இருக்கிறது. சலனம் கடந்த மனவுறுதியை தியானத்தினாலோ ஞானத்தினாலோ அருள்பவள், மனோன்மணி. அவள் ஆற்றிய காரியம் ஒன்று இருக்கிறது.

தேவர்களும், அசுரர்களும் கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம் எழுந்தது. அதனை சிவபெருமான் அருந்தினார். அம்பிகை தன் திருக்கரத்தை பெருமானின் கண்டத்தில் வைக்க நஞ்சு அங்கேயே தங்கியது. அது நீல கண்டமானது. இப்படித்தான் இதுவரை கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால் அபிராமிபட்டர் சொல்வது கொஞ்சம் புதுமையாய் இருக்கிறது. சிவபெருமான் அருந்திய நஞ்சு, அம்பிகை கைபட்டு அமுதமாகிவிட்டதாம். இத்தனைக்கும் அந்த நஞ்சைக்கூட அவள் நேரடியாய்த் தொடவில்லை. பெருமான் நஞ்சை அருந்தியபின் வெளியே கழுத்தில்தான் அவள் கைபட்டது. அதற்கே நஞ்சு அமுதமாகிவிட்டது. அதாவது அமுதம் வேண்டுமென்று தேவர்களும், அசுரர்களும் கடலைக் கடைந்ததே வேண்டாத வேலை என்கிறார் அபிராமிபட்டர். ஒரு குடம் நஞ்சைக் கொண்டுவந்து அம்பிகையின் திருமுன்னர் வைத்திருந்தால் அவள் அதனைத் தொட்டு அடுத்த விநாடியே அமுதமாக்கித் தந்திருப்பாள்.

தாமரை மலர்மேல் அழகுற வீற்றிருக்கும் அம்பிகை என்னும் பொருளில் “அம்புயமேல் திருந்திய சுந்தரி” என்கிறார். தாமரையில் வீற்றிருப்பவர்கள் கலைமகளும் அலைமகளும்தான். ஆயிரம் இதழ்கள் கொண்ட சஹஸ்ர ஹாரத்தின் உச்சியில் வீற்றிருக்கும் பராசக்தி என்பது இங்கே கொள்ள வேண்டிய பொருள். அவர் சுந்தரி மட்டுமல்ல; அந்தரியும்கூட! ஆன்மாவின் அந்தரங்கமாய் நிற்கக்கூடியவள். ஆகாயமாகிய அந்தரமெங்கும் நிறைந்திருக்கக்கூடியவள். அவளுடைய திருப்பாதங்கள் தன் சென்னியின் மேல் பதிந்திருப்பதை பிரத்யட்சமாக உணர்கிறார் அபிராமி பட்டர்.

“பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே.”

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *