அபிராமி பட்டர் -நாட்டிய நாடகம் -பாகம் 1

விநாயகர் வாழ்த்து
(தொகையறா)
தொடரும் துணையாய் துலங்கும் பூரணம்
இடர்கள் களையும் ஏக நாயகம்
கடலின் அமுதம் கவரும் சாகசம்
கடவூர் வாழும் கள்ள வாரணம்-திருக்
கடவூர் வாழும் கள்ள வாரணம்
கள்ள வாரணம்….

பல்லவி
காக்கும் விநாயகன் கழலிணை சரணம்
ஆக்கும் பனுவலில் அவன் பதம் பதியும்
நோக்கும் வேளையில் நம்வினை அகலும்
ஏக்கம்..போக்கும்…. இணையடி சரணம்……
சரணம்
ஆதிகடவூர் அமர்ந்தவனாம்-எங்கள்
அமுதகடேசன் திருமைந்தன்
நீதி நிலைபெற வருபவனாம்-எங்கள்
நெஞ்சில் நிறையும் கணநாதன்
ஜோதி வடிவாம் அபிராமி-அவள்
சுடர்முகம் நகைதரும் விகடேசன்
நீதி வடிவாய் நின்றிருப்பான் -எங்கள்
நிர்மல நாதன் விக்னேசன்

தத்துவ நாயகன் திருவடி சரணம்
வித்தக விநாயகன் விரைகழல் சரணம்
கள்ள விநாயகன் கணபதி சரணம்
கள்ள விநாயகன் கணபதி சரணம்
————————————————————-
(விருத்தம்)
தேவார மூவர் தேன்தமிழ் பாடும்
திவ்ய ஷேத்திரம் திருக்கடவூர்
பூவாரம் கொண்டு பக்தர்கள் வந்து
பணிந்திடும் திருத்தலம் திருக்கடவூர்
பூபாளம் பாடும் புள்ளினம் எல்லாம்
புனிதம் அடைந்திடும் திருக்கடவூர்
ஆலாலம் உண்டவன் அமுத கடேசனாய்
அருள்செய்யும் ஆலயம் திருக்கடவூர்….

(பாடல்)
காலகாலனும் கோயில் கொண்டது
கடவூர் திருத்தலமே
மார்க்கண்டேயனின் அச்சம் தீர்த்ததில்
மகிழ்ந்தது வானகமே
காலனைக் காலால் கடிந்தவன் ஆலயம்
காலத்தின் சாட்சியன்றோ
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் அங்கு
பரமனின் ஆட்சியன்றோ!

அழகிய கடவூர் ஆள்கிற அம்பிகை
அன்னை அபிராமி
ஆலமுண்டவனை நீலகண்டனாய்
ஆக்கிய அபிராமி
மெழுகென இதயம் உருகிடும் விதமாய்
அருள்பவள் அபிராமி
மின்னல் கொடியாய் கன்னல் பிடித்த
அழகி அபிராமி..
.பேரழகி அபிராமி

மகுடங்கள் ஆயிரம் அரியணை ஏறிடும்!
மானுடம் தழைத்திருக்கும்
யுகங்களும் மாறிடும்… தலைமுறை ஆயிரம்
தோன்றி மறைந்திருக்கும்
மகராஷ்டிரர்கள் தஞ்சையை ஆண்டனர்
முன்னொரு காலத்திலே
முந்நூறாண்டுகள் முன்னே அவர்களின்
ராஜ்ஜியம் நடக்கையிலே…….
ராஜ்ஜியம் நடக்கையிலே……?

பக்தியின் மகத்துவம் என்னென்று காட்டிய
பரவசச் சம்பவமே
சக்தியின் லீலையில் உயிர்கள் சிலிர்க்கும்
அற்புதம் அற்புதமே
வித்தகி எங்கள் நாயகி செய்த
விந்தையைக் கேளுங்கள்
சத்தியமாய் இந்த சம்பவம் நடந்தது
அதிசயம் பாருங்கள்…
என்ன அதிசயம் பாருங்கள்!!

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *