இப்படித்தான் ஆரம்பம் – 20

திருமண வரவேற்பு மேடையில் மாலையும் கழுத்துமாய் நின்ற அந்த இளம்பெண்ணுக்குக் கண்கள் அடிக்கடி கலங்கின. அடிக்கடி வாசலைப் பார்த்துக் கொண்டாள். காதல் கணவன் கைகளை மெல்ல அழுத்தும் போதெல்லாம் பளிச் புன்னகை ஒட்டிக் கொள்ளும். பெற்றோரின் சம்மதமில்லாமல் செய்து கொண்ட திருமணம். பெற்றோர் காலையில் கோயிலில் நடந்த திருமணத்திற்கும் வரவில்லை. வரவேற்புக்கும் வரவில்லை. வீட்டுக்குத் தெரியாமல் வந்த பெரியப்பா மகளைப் பார்த்ததும் அழுகை பீறிட்டு வந்தது மணப்பெண்ணுக்கு.. பரிசுப் பொருளுடன் வரிசையில் அடுத்தாற்போல் நின்றிருந்த எனக்கு, அவளுடைய பெரியப்பா பெண் சொன்ன ஆறுதல் வார்த்தைகள் காதில் விழுந்தன. “உஷ்! அழக்கூடாது! ஒரு குட்டிப்பாப்பா பொறந்தா எல்லாம் சரியாயிடும்..என்ன??” எனக்கென்னவோ நம்பிக்கையில்லை.அழுகையை நிறுத்துவதற்காக சொல்லப்படும்  ஆறுதல் வார்த்தைகள் அவையென்று பட்டது. அந்தப் பெண்ணின் அப்பாவை எனக்குத் தெரியும்.வீம்புக்கார மனுஷர்.

இரண்டாண்டுகளுக்குப் பிறகு அந்தப் பெண்ணை சந்தித்தேன்.கைகளில் ஒருவயதுக் குழந்தை.என்னைப் பார்த்ததும் முகம் மலர்ந்தாள். வணக்கம் சொல்லி சிறிது நேரம் பேசிவிட்டு விடைபெறும்போது வெகு இயல்பாகச் சொன்னாள்..”அப்பா உங்களைப் பத்தி போனவாரம் கூட விசாரிச்சாங்க!” தாங்கள் சமாதானமாகி விட்டதை எனக்குத் தெரிவிக்க அவள் மேற்கொண்ட உத்தி அது. பெரியப்பா பெண்ணின் ஆரூடம் பலித்துவிட்டது.மாப்பிள்ளை மீது மட்டும் இன்னும் கோபம் ஆறவில்லை. மகள் பேரனைத் தூக்கிக் கொண்டு வாரம் ஒருமுறையாவது வந்துவிடவேண்டும். ஆடு பகை -குட்டி உறவு. கொஞ்ச நாட்களில் மாப்பிள்ளையும் அந்த  வீட்டுப்  படியை  மிதிக்கத்தான் போகிறார்.

அவர்களைப் பற்றி யோசித்துக் கொண்டே நகர்ந்தபோது கவிஞரின் பாடல்  நினைவுக்கு வந்தது . கர்ணன் படப்பாடல்.கர்ணனின் மனைவி, குழந்தையுடன் தாய்வீட்டிற்குத் தயங்கித் தயங்கிச் செல்வாள். தந்தையும் ஓர் அரசன் .தந்தையின் ஒப்புதலின்றி நடந்த திருமணம்.துரியோதனின் மனைவி ஆறுதல் சொல்லி ஆற்றுப்படுத்துவாள்

“போய்வா மகளே போய்வா
கண்களில் புன்னகை சுமந்து போய்வா மகளே போய்வா” என்பது பாடலின் பல்லவி. கையில் குழந்தையுடன் தாய்வீடு செல்லும் எந்தப்  பெண்ணையும் இந்த இடத்தில் நாம் வைத்துப் பார்க்க முடியும்

தாய்வீடென்பதும் நம்வீடே
தந்தையின் நாடும் நம்நாடே
சேயும் சேயும் வரக்கண்டால்
திறவாக் கதவும் திறவாதோ
ஒருநாள் கோபம் ஒருநாளே-அதிலும்
உற்றவர் கோபம் வளராதே
மணநாள் மன்னன் உனைக்கண்டு-மதி
மயங்குகிறான் நீதளராதே

உறவுகளின் இயல்பு பற்றியும் உளவியல் பற்றியும் பாடுகிற இந்தப் பாடலில், தந்தையின் வாயிலுக்குப் போனதும் என்ன நடக்கும் என்றும் சொல்லப்படுகிறது .மனைவிக்குப் பாதுகாப்பாக கர்ணன் சேனையை அனுப்புகிறான்.ஆனால் மகளுக்கு வரவேற்பு தடபுடலாக இருக்கப் போகிறது. பேச முடியாத பாசத்திற்குப் பார்வைதானே மொழி!!

காவலன் சேனை நின்றிருக்கும்-தந்தை 
கண்களும் உன்னைக் கண்டிருக்கும்
பாவலர் தோழியர் இசைகேட்கும்-அன்புப்
பார்வையெல்லாம் உன்னை வரவேற்கும்
என்று உற்சாகம் தந்து வழியனுப்புகிறாள் தோழி. இதில் வேடிக்கை என்னவென்றால், மகாபாரதத்தில் இப்படியொரு காட்சி கிடையாது. திரைப்படத்திற்காக சேர்க்கப்பட்ட கற்பனை இது. காவியங்களில் இல்லாத காட்சிகளைக் கற்பனையில் சேர்ப்பதில் கண்ணதாசன் கைதேர்ந்தவர்

ரோஜாவின் ராஜா என்றொரு படம்.சிவாஜியும் வாணிஸ்ரீயும்  காதலர்கள். சிவாஜியின் நண்பர் ஏவிஎம் ராஜன். பெண்பார்க்கப் போன இடத்தில் தன் காதலியையே நண்பனுக்குப் பெண்பார்க்க வந்திருப்பது நாயகனுக்குத் தெரிகிறது. பெண்ணைப் பாடச்சொல்லிக்கேட்பது அந்தக்காலத்துப் பழக்கம்.தன் நிலையையே பாடுகிறாள் நாயகி. சீதையின் சுயம்வரத்தையே உருவகித்துப் பாடுகிறாள்.

இராமனும் சீதையும் திருமணத்திற்கு முன்னரே ஒருவரையொருவர் பார்த்து இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர் என்பது வான்மீகியில் இல்லாத காட்சி. கம்பனின் கற்பனை. அதையே களமாக்கிப் பாடுகிறபோது கம்பன் கூட சொல்லாத ஒரு காட்சியைத் தன் கற்பனையில் உருவாக்கித்தருகிறார் கண்ணதாசன்.

ஜனகனின் மகளை மணமகளாக இராமன் நினைத்திருந்தான்-
ராஜாராமன் நினைத்திருந்தான்-அவள்
சுயம்வரம் காண மன்னவர் பலரும் 
மிதிலைக்கு வந்திருந்தார்….மிதிலைக்கு வந்திருந்தார் என்பது பல்லவி.

மணிமுத்து மாணிக்க மாடத்தில் இருந்து ஜானகி பார்த்திருந்தாள்-இரு
மைவிழி சிவக்க மலரடி கொதிக்க இராமனைத் தேடிநின்றாள்
நாணம் ஒருபுறம் ஆசை ஒருபுறம்
கவலை ஒருபுறம் அவள் நிலைமை திரிபுரம்
கொதிக்கின்ற மூச்சும் மாலையில் விழுந்து மணியும் கருகியதே-அவள்
கூந்தலில் இருந்த மலரும் ஜானகி நிலைமைக்கு உருகியதே
 இதுவரையில், பெண் இராமாயணத்தைப் பாடுவது போல்தான் தெரிகிறது. சுற்றியுள்ள மற்றவர்களுக்குத் தெரியாது.அடுத்த சரணம் ஆரம்பமாகிறது.

வந்திருப்பவனே மாப்பிள்ளை என்று பேசி முடிவுசெய்தால் என்ன செய்வது?  சபையில் தன் மனவோட்டத்தை அவள் மறைக்க முயல்கிறாள். முடிகிறதா??

நெஞ்சை நினைத்தாள் நினைவை மறைத்தாள் கண்களை மறைக்கவில்லை-அவள்

மஞ்சள் முகத்தில் ஓடிய கண்ணீர் மறைத்தும் மறையவில்லை
முனிவன் முன்புறம்-ஸ்ரீராமன் பின்புறம்
சீதை தனியிடம்-அவள் சிந்தை அவனிடம்
இதுவரை சீதையின் நிலையையும் நாயகியின் நிலையையும் சேர்த்தாற்போல் பாடுகிறார் கவிஞர்.. அடுத்து அவர் பாடுகிற கற்பனைதான் கம்பனில் கூட இல்லாதது.

மன்னவரெல்லாம் சுயம்வரம்நாடி மண்டபம் வந்துவிட்டார்-வேறு
மன்னவன் யாரோ வில்லை எடுத்தான் ஜானகி கலங்கிவிட்டாள் என்கிறார் கவிஞர்.

கம்பனைப் பொறுத்தவரை சுயம்வரத்திற்கு வந்தமற்றவர்களால் அந்த வில்லைஅசைக்கக்கூட முடியவில்லை. விசுவாமித்ரர்,இராமனை, சுயம்வரத்திற்கு வந்ததாகவே ஜனகனிடம் அறிமுகப்படுத்தவில்லை. இங்கு நடக்கும் விருந்தை வேடிக்கை பார்க்கத்தான் வந்தார்கள். உன் வில்லையும் ஒரு கை பார்ப்பார்கள் என்று கிண்டலாகச்சொல்கிறார் விசுவாமித்ரர்.
விருந்து காணிய வந்தார்-உன் வில்லும் காண்பார்” என்பது கம்பன் வாக்கு. ஆனால் காதலன் முன்னிலையிலேயே வேறொருவன் பெண்பார்க்க வந்ததை, “வேறு மன்னவன் யாரோ வில்லை எடுத்தான் ஜானகி கலங்கி விட்டாள்” என்று கவிஞர் பாடும் உத்தி காட்சிக்குப் புதிய கனத்தையே கூட்டி விடுகிறது.

இன்னொரு பாடல்..

இராமன் சீதை சந்திப்பு மிதிலை வீதிகளில் எதிர்பாராமல் நிகழ்ந்ததாகத்தான் கம்பன் கூடப் பாடுகிறான். இருவரும் எதேச்சையாக சந்தித்த பிறகுதான் பாற்கடலில் பிரிந்தவர்கள் மீண்டும் கூடினால் அங்கே பேசவும் வேண்டுமோ என்கிறான் கம்பன்
“கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப்போய்
 பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ” என்பது கம்பனின் செஞ்சொற்கவி. .
ஆனால் கண்ணதாசனோ,இராமன் வருகையை எதிர்நோக்கியே சீதை மாடத்தில் நின்றதாகப் பாடுகிறார்.கண்ணதாசன் கண்ட இராமன் முதல்சந்திப்பிலேகூட சீதைக்குப் புதியவனில்லை.அது எதிர்பாராத சந்திப்புமில்லை.

“அழகிய மிதிலை நகரினிலே
 யாருக்கு ஜானகி காத்திருந்தாள்?”
இது கவிஞர் எழுப்பும் கேள்வி.
“பழகும் இராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்”
இது அவரே சொல்லும் பதில்.

பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால்

பார்ப்பவர் மனதில் என்ன வரும்?
என்றொரு கேள்வியை எழுப்புகிற கவிஞர்,
இளையவர் என்றால் ஆசைவரும்
முதியவர் என்றால் பாசம்வரும்!”
 என்று தானே பதிலையும் சொல்கிறார்.
நெஞ்சிருக்கும் வரை படத்தில் கவிஞரின் பாடல் நினைவுக்கு வருகிறதல்லவா!  மணமகள் மேடைக்கு வரும்போது, கூடியிருந்த தாய்மார்கள்  எல்லாம் தங்கள் மகளே வருவதுபோல் மனமகிழ்ந்து பார்த்தார்களாம்

மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க

மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க
காதலாள் மெல்லக் கால்பார்த்து நடந்துவர
கன்னியவள் கைகளிலே கட்டிவைத்த மாலைதர..   என்ற பாடலுக்கு கவிஞருக்கு ஆதர்சமாக இருந்தவனும் கம்பன்தான்.

இராமனின் மணக்கோலத்தை வர்ணிக்கும்போது “மாதர்கள் வயதின்மிக்கார் கோசலை மனதை ஒத்தார்” என்பான் கம்பன்.

அக்காலம் அந்நாளில் அழகுவெண்ணெய்நல்லூரில் கம்பனது வீட்டில் கணக்கெழுதி வாழ்ந்தேனோ என்று தனிக்கவிதையில் எழுதினார் கவிஞர்.

கம்பன்மேல் அவருக்கு அவ்வளவு ஈடுபாடு!!

(தொடரும்..)
0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *