இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-19

சுந்தரமூர்த்தி நாயனார் புராணத்தில் ஆலாலசுந்தரர் வழிவழியே தனக்கு அடிமை என்று எழுதப்பட்ட ஓலையினை இறைவன் சிவனடியார் வேடம் தரித்து கொண்டு வருகிறார்.

அதை நம்பாத சுந்தரமூர்த்தி நாயனார் கையிலே அந்த ஓலையை வாங்கிப் பார்க்கிறார். அது உண்மை என்று தோன்றுகிறது. உடனே, தன் திருமணத்திற்கு வளர்க்கப்பட்ட வேள்வி நெருப்பில், அந்த ஓலையினை சுந்தரர் போடுகிறார்.

ஊரார் முன்னிலையில் இந்த வழக்கு கொண்டு செல்லப்படுகிறது. மூத்த சிவனடியாராக வந்த சிவபெருமான் தன் மடியில் இருந்து ஓர் ஓலையை எடுத்து, இது மூல ஓலை. ஆலாலசுந்தரன் கிழித்து நெருப்பில் எறிந்தது படி ஓலை என்று சொல்கிறார்.

இன்று நகல், மூல ஆவணம் என்றெல்லாம் பத்திரப்பதிவுகளில்கூட பரபரப்பாக பேசப்படுகின்றன. மூலத்தைப்போலவே நகல் செய்வது அந்த நகலே மூலம் என்று மோசடி செய்வது. போலி ஆவணங்கள் தயார் செய்வது என்றெல்லாம் இருக்கக் கூடிய விஷயங்கள் குறித்து சேக்கிழார் முன்பே பாடியிருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் ஒரு வழக்கு வருகிறது அல்லது ஒரு வாதம் வருகிறதென்றால் ஒன்று அதற்கென்று சில உதாரணங்கள் இருக்கவேண்டும். அல்லது அந்த வழக்கம் நடைமுறையில் இருக்க வேண்டும். இப்படி இதற்கு முன் நடந்ததாக யாராவது தகவல் தர வேண்டும். இந்த மூன்று அம்சங்களில் ஏதாவது ஒன்று இருந்தால்தான் புதிதாகக் கொண்டுவரப்படுகின்ற விஷயம் ஏற்றுக் கொள்ளப்படும்.

ஓர் அந்தணருடைய குடும்பம் அடிமைப்பட்டிருப்பது தனக்குத்தான் என்று சிவனடியார் சொல்ல அது சாத்தியமில்லை என்று சுந்தரர் தரப்பு வாதிடுகிறது.

அந்தணர் ஒருவர் இன்னொருவருக்கு அடியவராகப் போவது என்பது நடைமுறையில் இருக்கிறதா? இதற்கென்று பத்திரப் பதிவுகள் இருக்கின்றனவா? அதற்கு வேறு யாராவது சாட்சி சொல்வார்களா என்பது போன்ற சட்ட ரீதியான கேள்விகள் எழுகின்றன.

இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றை எனக்கு காட்டுக என்று கேட்கப்படுவதன் மூலம்,
“ஆட்சியில் ஆவணத்தில் அன்றைமற்று அயலார்தங்கள்
காட்சியில் மூன்றில் ஒன்றைக் காட்டுதி”
என்று சொல்லப்படுவதன் மூலம் ஒரு விஷயத்தைச் சரிபார்ப்பதற்கு நிர்வாகத்தில் எத்தனை பணிநிலைகள் இருந்திருக்கின்றன என்பதும் நமக்குப் புரிய வருகிறது.

நவீன நிர்வாக முறையில் இருக்கக்கூடிய முதல் தகவல் அறிக்கை, பத்திரம் சரிபார்த்தல், அதற்கு முன்னுதாரணம் தேடுதல் போன்ற நுட்பமான அம்சங்களை எல்லாம் போகிற போக்கில் சேக்கிழார் நமக்கு விரித்துச் சொல்கிற பாங்கு வியப்பைத் தருகிறது.

மரபின் மைந்தன் ம.முத்தையா

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *