உதிக்கின்ற செங்கதிர்…

2009 அக்டோபர் 15. திருக்கடையூரை நெருங்க நெருங்க அதிகாலை வேளையில் செந்நிலவாய் எழுந்தது சூரியன்.அங்கேயே நிகழ்ந்தது அபிராமி தரிசனம்

புதிரின் விடைபோலப் புலரும் இளங்காலை….
கதிரை நிலவாக்கினாள்
அதிரும் மனம் ஓய அருளும் அபிராமி
அகிலம் எனதாக்கினாள்
பதங்கள் அசைந்தாட பட்டர் தமிழ்பாட
இருளை ஒளியாக்கினாள்
இதயம் அவள்கோயில் எதுவும் அவள்பூசை
எனையும் களியாக்கினாள்

அகலின் முனையோடு ஒளிரும் சுடரோடு
அழகு நகைகூட்டினாள்
இகமும் இனியேது பரமும் இனியேது
எல்லை அவள்காட்டினாள்
சுகங்கள் இவன்வாழ்வில்-சுமைகள் அவள்தாளில்
நொடியில் இடம்மாற்றினாள்
தகுதி அறியாத சிறுவன் இவன்வாழ்வை
சிவிகை தனில் ஏற்றினாள்

குழந்தைப் பருவத்தில் கோயில் முன்பாகக்
குதித்து விளையாடினேன்
மழலைக் குரலாலே அவளின் அந்தாதி
மகிழ்ந்து தினம்பாடினேன்
உழலும் வினையோடு வளர்ந்து வாழ்வோடு
உலர்ந்து தினம் ஏங்கினேன்
தழலின் வீச்சோடு தகிக்கும் மூச்சோடு
திரும்ப நிழல்தேடினேன்

காலம் பலசென்று கோயில் நுழைந்தேனே
கைகள் அவள்நீட்டினாள்
“பாலன் இவன்பாலன்” பாவம் என அன்னை
பரிந்து அமுதூட்டினாள்
நீல நயனங்கள் மூன்றில் ஒளிபொங்க
நயந்து கதைபேசினாள்
காலம் எனதென்றும் காவல் அவளென்றும்
காதில் அவள்கூறினாள்

வந்து தொழுமன்பர் சென்ற பிறகென்னை
வாஞ்சையுடன் பார்க்கிறாள்
அந்தம் அறியாத அன்பின் சுடராக
அமுதம் தனை வார்க்கிறாள்
எந்தன் நிலையென்ன? யாவும் அறிந்தாலும்
எனது கதை கேட்கிறாள்
கந்த மலர்ப்பாதம் கமழும் அருள்தந்து
குறைகள் அவள்தீர்க்கிறாள்.

தூரந் தொலைவாகப் போகும் எனைக்கூடத்
தொடர்ந்து வருகின்றவள்
ஈரம் கசியாத பாறை தனில்கூட
இறங்கி இதம்செய்பவள்
ஆரம் அசைந்தாட ஆடும் சிறுபிள்ளை
அசைவில் தெரிகின்றவள்
தாரில் நறுங்கொன்றை வாசம் வரக்கண்டு
தன்னை மறக்கின்றவள்

காலன் அவன்வீழ காலில் கடிகின்ற
கோபம் அவள்கோபமே
பாலில் குளிக்கின்ற பாவை அவள்பார்வை
பாவம்தனைப் போக்குமே
மூலம் நடுஈறு மூன்றும் அவளாக
மூளும் வினை ஓயுமே
கோலம் திருக்கோலம் காணும் விழியோடு
கங்கை நதி தோன்றுமே

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *