எட்டயபுரமும் ஓஷோபுரமும்

ஒரு பொருளையோ, ஒரு மனிதரையோ, ஒரு குருவையோ நாம் முழுமையாக ஏற்று, நம்மையே அர்ப்பணிக்கும்போது, ஓர் உள்வெளிப் பயணத்தைத் தொடங்குகிறோம். நம்மிடம் புதைந்து கிடக்கும் அன்பின் முழுமையை வெளிக்கொணர அந்தக் கருவி துணையாகிறது. கண்ணன் என்கிற கருவியை அர்ச்சுனனும் யசோதையும் கைக்கொண்டார்கள். அந்தக் கருவியும் கடவுட் தன்மையின் உச்சமாக விளங்கியதால் அவர்களுக்கு அந்த தரிசனம் கிடைத்தது.

அர்ச்சனுக்கும் யசோதைக்கும் மட்டுமல்ல! கண்ணனுக்கு எதிரணியிலேயே காலமெல்லாம் நின்ற கர்ணனுக்கும் விசுவரூப தரிசனம் கிடைத்ததே, இது எப்படி என்று சிந்திக்க வேண்டும்.

செஞ்சோற்றுக்கடன் என்ற ஒன்றை உறுதியாகப் பற்றி நின்றவன் கர்ணன். அர்ச்சுனனின் அம்புகள் துளைத்து உயிர் நீங்கும் நிலையில், அவனுக்குள் ஒரு வெளி பிறக்கிறது. புண்ணியங்களையும், தாரை வார்த்தாகிவிட்டது. தான் வாழ்ந்த வாழ்வு முழுமை பெற்றது என்ற நிறைவில் வாழ்க்கையோடு கடைசித் துளிவரை கணக்குத் தீர்த்தவனாகக் கர்ணன் நிற்கிறான். தன் வாழ்க்கை குறித்த எந்தப் புகாரும் இல்லை. கண்ணனே நேரில் வந்து தரிசனம் தருகிறான். அப்போது கர்ணன் சொல்வதாக வில்லுபுதூரார் இரண்டு அற்புதமான பாடல்களை எழுதுகிறார்.

தருமன் மகன் முதலாய அரிய காதல்
தம்பியரோடு அமர் மிலைந்தும் – தறுகண் ஆண்மைச்
செருவில் எனது உயிரனைய தோழற்காக
செஞ்சோற்றுக் கடன் கழித்தேன் – தேவர்கோவுக்கு
உரைபெறும் நற் கவசமும் குண்டலமும் ஈந்தேன்;
உற்ற நல் வினைப் பயன்கள் உனக்கே தந்தேன்
மருதிடைமுன் தவழ்ந்தருளும் செங்கண் மாலே;
மாதவத்தால் ஒருதமியன் வாழ்ந்தவாறே!

வான்பெற்ற நதிகமழ்த்தாள் வணங்கப் பெற்றேன்;
மதிபெற்ற திருவுளத்தால் மதிக்கப் பெற்றேன்;
தேன்பெற்ற துழாய்அலங்கல் களப மார்பும்
திருப்புயமும் தைவந்து தீண்டபெற்றேன்;
ஊன் பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும்
உணர்வோடு உன் திருநாமம் உரைக்கப்பெற்றேன்!
யான் பெற்ற தவப்பேறு என்னையல்லால்
இரு நிலத்தில் பிறந்தாரில் யார் பெற்றாரே”

இன்னவிதமாய் முழுமையில் துலங்கிய இந்த வாழ்க்கையில், எல்லாக் கடமைகளும் நிறைவுற்ற நிலையில் ஒருவெளி-ஒரு வெற்றிடம் கர்ணனுக்கு அனுபவமாகிறது. விருப்பு வெறுப்பு கடந்த அந்தக் கனிந்த நிலையில் கண்ணனுடைய விசுவரூப தரிசனம் கிடைக்கிறது.

அன்புமயமான ஆன்மாவின் பார்வைக்கு ஆண்டவன் வெளிப்படும் விதம் இது. கண்ணதாசன், ஒரு திரைப்படப்பாடலில், போகிற போக்கில் இதைப் பாடிவிட்டுப் போனார்.

“கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்” என்று.

“பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி” என்று தாயுமானவர் இதைத்தான் பாடுகிறார்

அந்த ஞானம், கண்ணன் என்கிற குருவால் சித்தித்ததா என்கிற கேள்விக்கு ஓஷோவின் பதில் மிகவும் நுட்பமானது.

 

மரபின் மைந்தன் ம.முத்தையா

(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *