எட்டயபுரமும் ஓஷோபுரமும்

வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்லாமல், வாழ்க்கையைக் கொண்டாடி, வாழ்க்கைச் சமுத்திரத்தில் மூழ்கி ஞானத்தின் முத்தெடுக்கும் குருமார்களை ஓஷோவும் பாரதியும் போட்டி போட்டுக் கொண்டு நமக்கு அறிமுகம் செய்கிறார்கள். இனி அர்ச்சுனனுக்குக் கண்ணன் வழங்கிய ஞானப்பார்வை சில விநாடிகளுக்கு மட்டுமே விளங்கியதாக சொல்லப்படுவது ஏன் என்பது பற்றி ஓஷோ தரும் விளக்கமும் முக்கியமானது.

“நள்ளிரவு நேரத்தில், வனப்பகுதியில் நடந்து போகிற போது சுற்றிலும் என்ன இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. ஆனால், கண நேரத்தில் வெட்டுகிற மின்னல் கீற்று, இருளில் மறைந்திருக்கும் மலைகளையும் மலர்களையும் நமக்குக் காட்டுகிறது. மின்னல் மறைந்த பிறகு மலைகளும் மலர்களும் நம் கண்ணுக்கு மறுபடியும் தெரியாமல் போகலாம். ஆனால், அவை இருப்பதை நாம் இப்போது அறிந்து கொண்டிருக்கிறோம். அதுபோல் விசுவரூப தரிசனம் ஒருமுறை நிகழ்ந்தால் போதும். அது நம் விழிப்புணர்வில் பதிவாகி நம்மை மாற்றிவிடுகிறது” என்கிறார் ஓஷோ.

இதை, ‘கண்ணம்மா என் காதலி’ என்கிற பாரதி பாடலில் காண்கிறோம். காதலன், வானமும் கடலும் முத்தமிடுகிற காட்சியைக் கண்டு லயிக்கிறான். பின்புறத்திலிருந்து காதலியாகிய கண்ணம்மா வந்து கண்களைப் பொத்துகிறாள், ஓங்கி வரும் உலகை சுற்றிலும், ஒட்டும் இரண்டுள்ளத்தின் தட்டிலும், அது கண்ணம்மா என்பதை உணர்கிற காதலன், பெயர் சொல்கிறான். கைகளை விலக்கிய கண்ணம்மா, “திரைக்கடலில் என்ன கண்டாய்–? நுரைகளில், குமிழ்களில், விசும்பில் என்ன கண்டாய்?” என்று கேட்கிறாள்.

அதுவரை வானத்தையும் கடலையும் பார்த்திருந்த காதலன், பதில் சொல்கிறான்.

“தெரிந்த திரைக்கடலில் நின்முகம் கண்டேன்
நீல விசும்பினிடை நின்முகம் கண்டேன்
திரித்த நுரையினிடை நின்முகம் கண்டேன்
சின்னக் குமிழ்களில் நின்முகம் கண்டேன்
பிரித்துப் பிரித்து நிதம் மேகம் அளந்தே
பெற்றது உன் முகமன்றிப் பிறிதொன்றில்லை
சிரித்த ஒலியில் உன் கை விலக்கியே
திருமித் தழுவியதில் நின்முகம் கண்டேன்”

இந்தப் பாடலில் ஒரு நுட்பம் ஒளிந்திருக்கிறது.

கடலையும் வானத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிற காதலன், அந்த அழகைத்தான் ரசித்துக் கொண்டிருக்கிறான்.

“மாலைப் பொழுதில் ஒரு மேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்;
மூலைக் கடலின் அவ் வான வளையம்
முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்”

என்றுதான் பாடல் தொடங்குகிறது. கண்ணம்மா பின் நின்று கண் மறைக்கிறாள். அவன் கைகளை விலக்கியபிறகு, “என்ன தெரிந்தது” என்று கேட்கிறாள். “எங்கும் உன் முகம் கண்டேன்” என்று பதில் சொல்கிறான்.

கண்ணம்மா, அதுவரையில் அவன் கண்டு கொண்டிருந்த காட்சிகளை மறைக்கும் விதமாகக் கண்பொத்துகிறாள். கைகளை எடுத்ததும் எங்கும் அவள் தெரிகிறாள். மேலோட்டமாகப் பார்த்தால் இது வெறும் காதல் கவிதை.

ஆனால், கண்ணம்மாவாகிய கண்ணன், அர்ச்சுனனுக்குப் புதிய தரிசனத்தைத் தந்த செய்தியையும் இது குறிப்பதாகப் பொருள் கொள்ள முடியும்.

அதுவரையில் வானமும் கடலும் தெரிந்தது. கண் பொத்திக் கை விலக்கிய பிறகு, எங்கும் எதையும் செய்துவிடவில்லை. கண்ணம்மாவின் இருப்பு அப்படியரு தரிசனத்தைத் தருகிறது. இந்த மாற்றத்தை விளைவித்த கிரியாஊக்கியாகக் கண்ணம்மா இருப்பதைப் பார்த்தால், முற்றிலும் புதிய பரிமாணம் நோக்கி இந்தப் பாடல் சிறகு விரிக்கிறது.

பாரதியும் ஓஷோவும் நமக்குக் காட்டுகிற கண்ணனின் விசுவரூபம் இது.

 

மரபின் மைந்தன் ம.முத்தையா

(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *