எட்டயபுரமும் ஓஷோபுரமும்

இதற்குள், இன்னொரு காதல் பெண்ணின் மனநிலையை பாரதி காட்டுகிறான். சதா சர்வ காலமும் ஒன்றின் நினைப்பிலேயே மூழ்கியிருக்கும் போது, அந்த நினைவின் உணர்வு வெள்ளத்தில், உருவங்கள்கூட மனதிலிருந்து ஆசைவிடலாம். தன் ஆருயிர்க் கண்ணனின் மாபாதகம் என்று தவிக்கிறாள்.

“ஆசை முகம் மறந்து போச்சே – இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி-?
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் – எனில்
நினைவு முகம் மறக்கலாமே!
என்று தவிக்கிறாள்.

“பெண்களினத்தில் இது போலே – ஒரு
பேதையை முன்பு கண்டதுண்டோ!” என்று தன்னிரகம் கொள்கிறாள்.

“ஓய்வும் ஒழிதலும் இல்லாமல் – அவன்
உறவை நினைத்திருக்கும் உள்ளம்!
வாயும் உரைப்பதுண்டு கண்டாய் – அந்த
மாயன் புகழினை எப்போதும்!” என்ற நிலையில் ஏற்குகிற பெண்களைப் பார்க்கிறோம். ஆனால், கண்ணன் இப்படி ஏங்கியிருக்கிறானா-? இந்தக் கேள்வியை எடுத்துக் கொண்டு ஓஷோவிடம் வருகிறோம்.

முற்றிலும் புதுமையான கண்ணோட்டத்தில் இதற்கு பதில் சொல்கிறார் ஓஷோ.

“கண்ணன் போன்றவர்களுடன் கொள்கிற உறவு, ஒருவழிப் பாதைதான். ‘என்னுடைய அன்பைத் தருகிறேன், உன்னுடைய அன்பைக் கொடு’ என்று கேட்க முடியாது. ஏனெனில் கண்ணனே அன்பு மயமானவன். கண்ணன் அருகே இருக்கும் போது அவனுடைய அன்பின் மழையில் நனையலாம். ஆனால் அதனை ஓர் உறவாகக் கேட்டுப் பெற முடியாது. கண்ணனைத் தேடி வந்ததால், அர்ச்சுனனுக்கு அந்த அன்பை உணர முடிந்தது. கண்ணன் யாரையும் தேடிப் போய் தன் அன்பை செலுத்தவில்லை. கண்ணன், தன்னந்தனிமையில் ஒரு கானத்தில் அமர்ந்திருந்தாலும், அந்தக் கானகம் அன்பின் அதிர்வுகளில் நிரம்பியிருக்கும்” என்கிறார் ஓஷோ.

“From ypur side you can be in love with Krishna but from his side, Krishna is not going to be in a love relationship with you. He is love is available to everyone who seeks it”

கண்ணன் தன்னை விரும்புகிறானா இல்லையா என்கிற குழப்பம், சில பெண்களுக்கு ஏற்பட்டதற்குக் கூட இது காரணமாய் இருக்கலாம்.

ஆனால், ஆன்மீகத்தில் பெண்களுக்கு நிகரற்ற அங்கீகாரம் தந்ததில் கண்ணனுக்கு நிகர் கண்ணன்தான் என்பதை ஓஷோ அழுத்தமாகச் சொல்கிறார்.

 

மரபின் மைந்தன் ம.முத்தையா

(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *