எது சுதந்திரம்…..எது நிர்ப்பந்தம்?

“தெற்கிலிருந்து சில கவிதைகள்”என்னும் நூலில் என் கல்லூரிப்பருவத்தில் ஒரு கவிதை படித்தேன். எத்தனையோ முறை மேற்கோள் காட்டியும் அந்த வரிகளின் தாக்கம் மாறவேயில்லை.

“பறவையான பிறகுதான்
தெரிந்தது…
பறத்தல் என்பது

சுதந்திரம் அல்ல…
நிர்ப்பந்தம் என்று”

இதை எழுதியவர் கவிஞர் சமயவேல் என்று ஞாபகம். சரியாகத் தெரியவில்லை. வீட்டிலிருந்து பத்து நிமிட நடைத்தூரத்தில் இருக்கிறது, பந்தயச்சாலை. நடைப்பயிற்சிக்கு மிகவும் உகந்த இடம். பந்தயச்சாலைக்கு நடந்துபோய் அங்கே நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். காலைப்பொழுதில் கால்வீசி நடந்து பந்தயச்சலையின் இரண்டரை கிலோமீட்டர் சுற்றையும் நடக்கும் நிமிஷங்கள் புத்துணர்வும் சுதந்திரமும் ததும்பும் விதத்தில் இருக்கும். ஆனால் திரும்ப வீடு நோக்கி நடக்கும்போது சிலசமயம் அலுப்பாக இருக்கும். விரும்பி நடப்பது சுதந்திரமாகவும் கடந்தே தீர வேண்டிய தூரம் நிர்ப்பந்தமாகவும் தோன்றுகிறது போலும்!!

இந்தச் சிந்தனையுடன் நடக்கிறபோது இராமனின் வாழ்க்கை நினைவுக்கு வந்தது. இராமன் வனத்துக்குப் போனது விரும்பி ஏற்ற விஷயமா, நிர்ப்பந்தமா என்றொரு கேள்வி எழுகிறது. இராமன் விரும்பித்தான் வனம் சென்றான் என்று தொடக்கம் முதலே அடித்துச் சொல்கிறான் கம்பன். ஆனால் கம்பன் வரிகளிலேயே வெளிப்படும் இராமனின் வாக்குமூலம் வேறொரு நிலைப்பாட்டையும் சொல்கிறது.

இராமன் விரும்பித்தான் வனம் போனான் என்று கம்பன் நிறுவுகிற இடங்கள் மிகவும் சுவாரசியமானவை. “பரதன் உலகை ஆளட்டும். நீ நீண்ட சடாமுடி தாங்கி, செயற்கரிய தவம் செய்ய புழுதி பறக்கும் வெங்காட்டுக்குப் போய் பதினான்கு ஆண்டுகள் கழித்து வா என அரசன் சொன்னான்” என்கிறாள் கைகேயி. இது பலரும் அறிந்த பாடல்தான்.

“ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனே ஆள நீபோய்
தாழிருஞ் சடைகள் தாங்கி தாங்கரும் தவம் மேற்கொண்டு

பூழிவெங் கானம் நண்ணி புண்ணிய நதிகள் ஆடி
ஏழிரண்டாண்டில் வா என்று இயம்பினன் அரசன் என்றாள்.”

நீண்ட சடை வளர்த்துக் கொள். கடுமையான தவம் செய். புழுதி பறக்கும் காட்டில் வசி என்கிற வரிகளில் வன்மமும் வெறுப்பும் தெரிகிறது. இதைச் சொன்னவன் உன் தந்தை என்று சொன்னால்

அப்பாவிடம் இராமன் சலுகை பெறுவான் என்று நினைத்தாளோ என்னவோ, “இயம்பினன் அரசன்” என்றாள்.

ஆனால் இராமனின் எதிர்வினை வேறுமாதிரி இருக்கிறது. அரசன் இதைச் சொல்ல வேண்டும் என்று அவசியமா என்ன? நீங்களே சொல்லியிருந்தாலும் அதைத் தட்டப் போகிறேனா என்ன? என் தம்பி அரசாள்வது நான் செய்த பாக்கியமல்லவா? மின்னல்களின் வெளிச்சம் படரும் வனம் நோக்கி இப்போதே போகிறேன்” என்கிறான்.

“மன்னவன் பணி அன்றாகில் நும்பணி மறுப்பனோ?என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்ற பேறு
மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்” என்கிறான்.

வனத்தை பூழிவெங்கானம் என்று சொல்லி “அரச கட்டளையை ஏற்று நீ போகத்தான் வேண்டும்” என்பது கைகேயி விதிக்கிற நிர்ப்பந்தம். நீங்கள் சொன்னாலே போதுமே, மின்னல்கள் ஒளிரும் அழகிய வனத்துக்கு இப்போதே போகிறேன் என்பது இராமனின் சுதந்திரம். ஒரு நிர்ப்பந்தத்தை சுதந்திரமாகப் பார்த்தான் இராமன் என்று நமக்குத் தெரிகிறது.

இதே எண்ணத்தை மீண்டும் நினைவுபடுத்துவான் கம்பன். அசோகவனத்தில் இருக்கும் சீதையின் நினைவில் மின்னுகிறது இராமனின் ஆசைமுகம். நீதான் அரசன் என்ற போதும், ஆட்சி இல்லை காட்டுக்குப் போ என்ற போதும் வரைந்து வைத்த செந்தாமரையை ஒத்து மலர்ந்திருந்த திருமுகம்.

“மெய்த்திருப்பதம் மேவு எனும் போதிலும்
இத்திறத்தை விட்டு ஏகு எனும் போதிலும்
சித்திரத்து அலர்ந்த செந்தாமரையினை
ஒத்திருக்கும் முகத்தை உன்னுவாள்”

என்கிறான் கம்பன்

வனத்துக்குப் போவதை மகிழ்ச்சியாக ஏற்றது இராமனின் சுதந்திரம் என்கிற கருத்துருவாக்கம் வேறோர் இடத்தில் கேள்விக்குரியதாகிறது. சுக்ரீவனின் மனைவியைக் கவர்ந்து கொண்ட வாலியை வதம் செய்து கிஷ்கிந்தைக்கு மன்னனாக சுக்ரீவனுக்கு முடிசூட்டினான் இராமன். அப்போது சுக்ரீவனுக்கு உபதேசம் செய்து கொண்டே வருகிறபோது, “பெண்களால் மனிதர்களுக்கு மரணம் வரும். வாலியின் வாழ்க்கை இதைத்தான் சொல்கிறது. வாலியை விடு. பெண்களால்தான் துன்பமும் அழிவும் வரும் என்பது எங்கள் வாழ்விலிருந்தே தெரிகிறதே!இதைவிடவா ஆதாரம் வேண்டும்” என்கிறான்.

மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம் என்றல்
சங்கையின்றி உணர்தி; வாலி செய்கையால் சாலும்;இன்னும்
அங்கவர் திறத்தினானே,அல்லலும் அழிவும் ஆதல்
எங்களில் காண்டியன்றே; இதனின் வேறுறுதி உண்டோ?

என்கிறான்.

கைகேயியிடம் நீங்கள் சொன்னாலே வனத்துக்கு மகிழ்ச்சியாகப் போவேனே.என்று உற்சாகமாகப் போகிறான் இராமன். நடைப்பயிற்சிக்குக் கிளம்புவதுபோல. ஆனால் நடக்க நடக்க ஒரு கட்டத்தில் சோர்வு வருகிற போது உள்ளத்தில் இருந்த உண்மையான அபிப்பிராயம் வெளிப்பட்டு விடுகிறது.

ஓர் எல்லைக்குப் பிறகு தான் விரும்பி ஏற்றுக் கொண்டதே பாரமாய் அழுத்துவதை தன்னையும் மீறி இராமன் வெளிப்படுத்துகிறான். நிர்ப்பந்தம் என்பதும் சுதந்திரம் என்பதும் சூழல்களிலும் இல்லை, சம்பவங்களிலும் இல்லை. மனதில்தான் இருக்கிறது

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *