ஒரு வாசகர்-மூன்று கேள்விகள்

தினமும் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?கோபத்தை தவிர்ப்பது எப்படி? பணியாளர்களைக் கையாள்வது எப்படி?

கே.சுரேஷ்,வையாபுரிப் பட்டினம்,பண்ருட்டி

அன்புள்ள திரு.சுரேஷ்

ராஜா கூஜா, ராணி ஆணி, மந்திரி முந்திரி என்று கூச்சலிட்டபடி குழந்தைகள் ஓடுவார்கள். அந்த விளையாட்டின் முடிவில்,ராஜாவிடமிருந்து கூஜாவையும் ராணியிடமிருந்து ஆணியையும் மந்திரி வாங்குவார். பின்னர் ஆணியை சுவரில் அடித்து,
கூஜாவை மாட்டி அதில் தன்னிடம் உள்ள முந்திரியைப் போட்டு விடுவார்.(சுத்தியல் அநேகமாக கத்தி வைத்திருக்கும் தளபதியிடம் இருந்திருக்கும்)

அதுபோல உங்கள் மூன்று கேள்விகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை போல் தெரிகிறது.அதாவது,உங்களால் பணியாளர்களைக் கட்டுப்படுத்த முடிந்தால்,உங்கள் கோபம் கட்டுக்குள் இருக்கும். கோபம் கட்டுக்குள் இருந்தால் தினமும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் போல!!

ஆனால் இதில் உங்கள் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் இரண்டு விஷயங்கள் உங்களின் அன்றைய தினமும் உங்கள் மகிழ்ச்சியும்.
சரி,சற்றே விரிவாகப் பார்ப்போம்.

ஒரு நிறுவனத்தை நிர்வகிப்பது மனிதர்கள் என்ற நிலை இப்போது இல்லை.எவ்வளவு சிறிய நிறு வனமாக இருந்தாலும் பெரிய நிறுவனமாக இருந்தாலும் அதனை நிர்வகிக்க வேண்டியது, அந்த நிறுவனத்தின் விதிமுறைகளும் சீரொழுங்குகளும்தான். நிறுவனம் கடுமையாக நடைமுறைப்படுத்தும் சில ஒழுங்குகள் முதலாளி உட்பட அனைவராலும் கடைப்பிடிக்கப்படுவதில் கண்டிப்பாக இருந்தால் பல மாற்றங்களைக் கொண்டு வர முடியும்.

அதேபோல,கோபம் என்பது தவிர்க்கப்பட வேண்டிய விஷயமில்லை.
உடலில் ஏதோ ஒரு பகுதி சரியில்லை என்றால்,வலி வருகிறது. உடனே நீங்கள் வலி நிவாரணியைத் தேடிப் போவதில் அர்த்தமில்லை. அந்த வலியை ஏற்படுத்தும் நலக்குறைவு என்னவென்று கண்டறிந்து அதை சரிசெய்ய வேண்டும். எனவே கோபத்தை எது ஏற்படுத்துகிறது என்று பாருங்கள்ஆது உங்கள் எல்லைக்குள் இருந்தால் சரிசெய்யுங்கள்.உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத விஷயமென்றால் அதற்காக கோபப்பட்டு உங்கள் நலனையும் மன அமைதியையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள். இது, யாரோ செய்கிற தவறுக்கு உங்களுக்கு நீங்களே தண்டனை கொடுத்துக் கொள்வது போல.

எல்லா நாட்களும் மகிழ்ச்சியாக வாழ்வதுதான் மிகவும் எளிது. ஆனால் எல்லா நாட்களுக்குமான தீர்மானத்தை இன்றே எடுக்கக் கூடாது.ஒவ்வொரு நாளும் விடிந்த பிறகு நீங்கள் தயாராகி உங்கள் முக்கியக் கடமைகளை ஆற்றத் தொடங்கும் முன்னால் சில நிமிடங்கள் கண் மூடி அமர்ந்து ஆழமாக சுவாசத்தை உள்ளிழுத்து, மெதுவாக வெளியில் விட்டு உங்களுக்கு நீங்களே “இன்றைய நாளை மகிழ்ச்சியாக எதிர்கொள்வேன்” என்று உறுதி மேற்கொள்ளுங்கள். நாள் முழுவதும் ஒவ்வொரு செயலிலும் இதை கவனத்தில் கொள்ளுங்கள்.ஆனால் ஒன்று. ஒவ்வொரு நாளும் உங்கள் செயல்கள் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சி தரும் விதமாக இருந்தால் நீங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருந்தாக வேண்டும். முயன்று பாருங்கள்.
உங்களுக்கு என் வாழ்த்துகள்.

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *