ஓசை கொடுத்த நாயகி

ஆசை கெடுப்பவளாம்-அவள்
ஆட்டிப் படைப்பவளாம்
பேசிச் சிரிப்பவளாம்-நல்ல
பேரைக் கொடுப்பவளாம்
ஈசனின் பாகத்திலே-அவள்
என்றும் இருப்பவளாம்
ஓசை கொடுப்பவளாம்-நெஞ்சின்
உள்ளில் சிரிப்பவளாம்

பாலைக் குடித்த பிள்ளை-வந்து
பாடித் தொழுகையிலே
ஆலங் குடித்தவனே-தங்கத்
தாளங் கொடுத்தானாம்
நீல நிறத்தழகி-அங்கே
நேரில் சிரித்தாளாம்
தாளம் பிறந்திடவே-நல்ல
ஓசை கொடுத்தாளாம்

காலக் கணக்குகளும்-அவள்
கைவசம் உள்ளதடா
மூலக் கருவறையில்-அவள்
மோகம் சுடருதடா
வேலைக் கொடுத்தவளே-நல்ல
வார்த்தை கொடுப்பவளாம்
கோலக்கா கோயிலிலே-நல்ல
காட்சி கொடுப்பவளாம்

மின்னல் எழுந்ததுபோல்-நம்
முன்னவள் தோன்றிடுவாள்
ஜன்னல் திறந்ததுபோல்-பல
சூட்சுமம் காட்டிடுவாள்
தென்றல் வடிவினிலே-வந்து
தொட்டுச் சிரித்திடுவாள்
அன்னையின் கோயில்வந்தால்-நாவில்
அட்சரம் தோன்றுதடா

அட்டிகை மின்ன மின்ன -எங்கள்
அம்பிகை நிற்பதென்ன
சிட்டிகை நேரத்திலே-வினைச்
சீற்றம் தணிப்பதென்ன
பட்டு விசிறுதல்போல்-முகம்
பார்த்துச் சிரிப்பதென்ன
எட்டுக்கண் விட்டெரிக்க-அவள்
ஏதேதோ சொல்வதென்ன

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *