ராமுவும் குமாரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள். அடிமட்ட ஊழியர்களாய் இளமையிலேயே பணியைத் தொடங்கி, ஒன்றாகவே தொழில் கற்று, பின்னர் இருவரும் சேர்ந்து தனியாக தொழில் தொடங்கினார்கள். சிறிய முதலீடு அளவில்லாத ஆர்வம். குமாருக்கு எச்சரிக்கை உணர்வு அதிகம். ராமுவுக்கு கனவுகள் அதிகம். குமாருக்கு கேள்விகள் அதிகம்.

நிறுவனம் வளரும்போதே முப்பதுகளின் இறுதியில் இருந்தனர் இருவரும். சொந்த வீடு கட்டிக் கொள்வது, இருவருக்குமான கனவு, தன் சின்னஞ்சிறிய குடும்பம் நாளை வளரும்போது, எவ்வளவு அறைகள் தேவைப்படும்? எந்தெந்த அறைகளுக்கு என்னென்ன வண்ணங்கள், என்னென்ன வசதிகள் என்றெல்லாம் தன் டைரியில் அவ்வப்போது எழுதிக் கொள்வார் ராமு, சொந்த வீடு கட்டினால் செலவுகளை சமாளிக்க முடியுமா என்ற கேள்வியைத் தாண்டி குமார் நகர்வதேயில்லை. “பின்னால் பார்க்கலாம்” என்கிற வரியுடன் அந்த விருப்பத்துக்கு ஒவ்வொரு தடவையும் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வருவார் குமார்.

இருவருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை முறை. சமமான வருமானம். சரிவிகித சம்பாத்தியம். ஆனால் முதலில் கிரகப் பிரவேச பத்திரிகை தயார் செய்ததென்னவோ ராமு தான். காரணம், ராமுவிடம் இருந்த கூடுதல் பலம், கணவுகளும் கற்பனைகளும்தான். கற்பனைகளின் பலம்தான் பல கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும்.

விற்பனைத் துறையில் வெற்றிகள் குவிப்பதாய் நீங்கள் மனதுக்குள் உருவாக்கும் காட்சிகள் நிü வாழ்வில் அவை நிறைவேற பெரிதும் உதவும். ஒரு வாடிக்கையாளர் என்ன விதமாகவெல்லாம் கேள்விகள் கேட்பார் என்ற கற்பனைதான், அதற்கான பதில்களைத் தயார் செய்யும் உத்வேகத்தைத் தருகிறது. அந்த பதில்கள் உங்கள் மனதில் உருவாகும்போதே அவருடைய மனநிறைவான புன்னகையும் உங்கள் மனக் கண்களில் தோன்றிவிடுகிறது.

தங்கள் விற்பனை வெற்றியைக் கற்பனையில் பலமுறை காண்பவர்கள் உண்மையாகவே அந்த வெற்றிகளை எட்டிப் பிடிக்கிறார்கள். ஏன் தெரியுமா? வெற்றி பற்றிய அவர்களின் கற்பனையே அந்த மனோபலத்தை அவர்களுக்கு ஆக்கித் தருகிறது. சாதனையாளர்கள், செயலூக்கம் மிக்க ஒவ்வொரு நாளையும் மானசீகமாக முன்கூட்டியே வாழ்ந்து பார்க்கிறார்கள். வெற்றியும் காண்கிறார்கள்.

ஒரு தயாரிப்பின் எதிர்காலம் குறித்த கணிப்புகளும் இந்தக் கற்பனையில் அடங்கும். கால மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் விதமாக ஒரு தயாரிப்பின் தன்மையில் மாற்றங்கள் செய்வது ஒருவகை. கால மாற்றங்களை முன்பே கணித்து எதிர் காலத் தேவைக்கான வசதிகளை இப்போதே ஏற்படுத்தி வைப்பது இன்னொரு வகை.

குவார்ட்ஸ் கடிகாரங்களின் வருகை ஸ்விஸ் கடிகாரங்களின் விற்பனையில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று 1970லேயே கணித்தவர் ஜோயல் பார்கர். இந்தத் தொலை நோக்குதான் கற்பனையின் சாராம்சம். ஒரு காலத்தில் டைப்பிங் என்பது தனியான தகுதியாகப் பார்க்கப்பட்டது. ஓர் அலுவலகத்தில் பணிபுரிகிற மற்றவர்கள் தட்டச்சு எந்திரத்தைத் தொட்டுக்கூடப் பார்க்க வேண்டிய தேவையில்லாமல் இருந்தது.

ஆனால் கணினிமயமான பிறகு, ஒவ்வோர் ஊழியரும் கணினி பயன்பாட்டை அறிந்திருப்பது அடிப்படைத் தேவை ஆகிவிட்டது. ஒரு தயாரிப்பை மார்க்கெட்டிங் செய்யும் யாரும் அந்தத் தயாரிப்பின் சந்தை நிலையை அவ்வப்போது அறிந்து கொள்வது அவசியம். ஒரு தயாரிப்பின் சந்தை மதிப்பு என்பதும் சந்தை அபிமானம் என்பதும் அடிப்படையில் வெவ்வேறு விஷயங்கள். உள்ளூர் கலர்சோடா தயாரிப்பின் சந்தை மதிப்பு, பன்னாட்டு குளிர் பானங்களுடன் ஒப்பிடும்போது மதிப்பீட்டில் என்னவோ குறைவாக இருக்கும். ஆனால் அவற்றின் சந்தை அபிமானம் அசைக்க முடியாததாக இருக்கும்.

உள்ளூர் நிறுவனத்தின் சிறிய முதலீட்டளவைப் பொறுத்த வரை உள்ளூர் கலர் சோடா தயாரிப்பு கொழுத்த லாபம் தரக்கூடியதாக இருக்கும். இந்த சந்தை அபிமானம்தான் கால மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும்போது தன்னைத்தானே அவ்வப்போது அழகாக மாற்றிக் கொள்கிறது.

மாரி பிஸ்கெட் ஒரு மகத்தான உதாரணம். நோயளிகளுக்கான அனுதாபச்சின்னமாக இருந்த அதன் சோக முகத்தை மாற்றி “மாரி லைட்” என்ற ஆரோக்கிய முத்திரையை அதற்கு அளித்திருக்கிறார்கள்.

கற்பனைகளை வளர்த்திடுங்கள்!! விற்பனையில் வென்றிடுங்கள்!!

ஒரு தயாரிப்பை மார்க்கெட்டிங் செய்யப் போகும்போது மாறும் தேவைகளுக்கேற்ற மாற்றங்கள் அதில் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது என்ற எண்ணத்தை பலவிதங்களிலும் ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். வடிவமைக்கும் நிலையில், புதிய கற்பனைகளால் ஒரு தயாரிப்பு மக்கள் கவனத்தை ஈர்க்கிறது. விற்பனை நிலையில் புதிய கற்பனைகளால் அந்த கவனம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையாக வடிவம் பெறுகிறது. தனிமனித நிலையில் விற்பனையாளருக்குள் மலரும் நம்பிக்கை அவரை ஒரு வெற்றியாளராக வார்த்தெடுக்கிறது.

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய மார்க்கெட்டிங் மந்திரங்கள் என்னும் புத்தகத்தில் இருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *