திருக்கடவூர்-8

ஆமடா குகையொன்று உள்ளே போகும்
ஆயிரம்பேர் சித்தரப்பா அதிலிருப்பார்
வாமடா காலாங்கி ஐயர் நின்று
வல்லவொரு கற்பமெல்லாம் அங்கே தின்றார்
ஓமடா எந்தனுக்கும் கற்பம் ஈந்தார்
உயர்ந்தவொரு தயிலமெல்லாம் அங்கே ஈந்தார்!

-போகர் (போகர் ஜெனன சாகரம்)

ஆகாயத்திலிருந்து காணும்போது தாமரைபோல் தோன்றுவதால்
அந்த மலைக்குக் கஞ்சமலை என்று பெயர்.சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் உகப்பான திருத்தலம். நீராடப் போயிருந்த குருநாதருக்காக வேகவேகமாய் சோறு சமைத்துக் கொண்டிருந்தார்
அந்த சீடர். நடுத்தர வயதிருக்கும். நேரம் நெருங்கிவிட்டதென்ற
பதட்டம். அன்னையும் தந்தையும் ஆன குருவுக்கு சமைக்கும்
சோறு அடிபிடித்துவிடக் கூடாதே என்று பக்கத்திலிருந்த குச்சியால்
சோற்றைக் கிளறினார் சீடர். உடனே சோறு கருநிறமானது. இதனை எப்படி
குருநாதருக்குப் படைப்பதென்ற பதைப்போடு பருக்கைகூட மீதமுறாமல்
தானே விழுங்கினார் சீடர்.

சற்றுநேரத்தில் வந்து சேர்ந்தார் குரு. சோறு சமைத்து வைத்திருக்க வேண்டிய சீடனைக் காணவில்லை. பொன்மயமான மேனியுடன்
ஒளிவடிவாய் நின்றுகொண்டிருந்த இளைஞனைக் கண்டு, “இங்கிருந்த
என் சீடன் எங்கே?? என்றார் குருநாதர்.
பணிந்தெழுந்த இளைஞன் சொன்னான், “பெருமானே! நான்தான்
உங்கள் சீடன்.தங்களுக்காக வடித்த சோறு கருகக்கூடாதென்று கிளறினேன்.
முற்றுலும் கறுப்பாகிவிட்டது. அள்ளியுண்டேன். இத்தகு இளமையும் ஒளியும் கொண்டேன்”.

அந்த குருநாதர் திருமூலர். அந்த சீடர் காலாங்கி.மூலம் உணர்ந்த யாவருமே காலம் என்னும் கணக்கினைக் கடந்தவர்கள்.
காலத்தை ஓர் அங்கியாகக் கொண்ட காலாங்கி சித்தரோ,திருமூலர் மூலம்
தன் மூலத்தை உணர்ந்தவர். திருமூலருக்கு முதன்மைச் சீடராகவும்
போகரின் குருவாகவும் விளங்கும் காலாங்கிக்கு அந்த
சம்பவமே ஆன்ம ஞானத்தை விஞ்ஞானமாய் உணர வழி செய்தது..

அன்று தொடங்கி உள்நிலை நோக்கி சுவாசத்தையும் சிந்தனையையும்
திருப்பிவிடும் குளிகைகளை உருவாக்குவதில் கைதேர்ந்தவரானார்
காலாங்கி.தன் குருநாதரின் பூரண அருளும்வாலை வழிபாட்டில் காட்டிய டுபாடும் பல்வேறு சித்த புருஷர்களின்
தரிசனத்திற்கு வாய்ப்பேற்படுத்திக் கொடுத்தது காலாங்கிக்கு.
பயணம் செய்த வழியெங்கும் புலி வடிவிலும் மச்ச வடிவிலும் வராக வடிவிலும் கூட சித்தர்கள் வரும்பி வந்து காட்சி கொடுத்தனர்.

தன்னுடைய குருநாதரால் “அருந்தவப் பெண்பிள்ளை ” என்றும்
“சாதகப் பெண்பிள்ளை” என்னும் கொண்டாடப்பட்ட வாலை பரமேசுவரி
உபாசனையில் முழுமையாய் இடுபட்ட காலாங்கிக்கு அம்பிகையின் அருள் சித்தித்தது.

இடகலை,பிங்கலை,சுழுமுனை ஆகிய மூன்றின் நடுவில் உள்ளது
சித்ரணி நாடி. அந்த நாடியில் வந்து பொருந்தும் வாலைஎண்ணிலா
நலன்களைத் தருவதுடன் உள்ளமே கோயிலாகக் கொண்டுறைவாள்.
அவளின் சீறடிச்சிலம்பொலி சர்வ காலமும் உள்ளே கேட்க அவள்
நம் சிந்தையை சொந்த வீடு போல் கொண்டு குடியிருப்பாள் என்றார்
திருமூலர்.

நாடிகள் மூன்று நடுஎழு ஞானத்துக்
கூடி யிருந்த குமரி குலக்கன்னி
பாடகச் சீறடிப் பைம்பொற் சிலம்பொலி
ஊடக மேவி உறங்குகின் றாளே.

குருநாதர் சித்தரித்த இந்நன்னிலையைத் தன்னுள் உணர்ந்த காலாங்கி
தான் திருமூலரின் பிள்ளையென்றும் உலகீன்ற அன்னையின் பிள்ளையென்றும் அகமகிழ்ந்தார்.அதேநேரம் யாரெல்லாம்
தங்கள் குருவை உணர்கிறார்களோ அவர்களெல்லாம் தனக்குப்
பிள்ளையென்றும் பெற்ற அன்னையைப் பேணுபவர்களும் தனக்குப் பிள்ளையென்றும் அருளிச் செய்தார் காலாங்கி.
காலாங்கி சித்தருக்கு பிள்ளையெனும் பெரியநிலை பெறுபவர்கள் யாரோ
அவர்களுடைய கால்களைப் பெரியவர்கள் பலரும் பற்றுவார்களாம்!!.

“பெற்றெடுத்த மூலகுரு தனக்குப் பிள்ளை
பேருலகை ஈன்றெடுத்த தாய்க்கும் பிள்ளை
உற்றகுரு அறிந்துகொள்வார் எனக்குப் பிள்ளை
ஒருபதிலே மனவடங்கி நின்றோன் பிள்ளை
பெற்றதொரு மாதாவை வணங்கிக் கொண்டு
பேரறிவாய் நின்றபிள்ளை எனது பிள்ளை
கற்றுணர்ந்த பெரியோர்கள் சித்தரெல்லாம்
காலாங்கி பிள்ளையென்றால் பிடிப்பார் காலை”

என்பது காலாங்கிநாதரின் இந்திரசால ஞானம். போகரின் குருவாக
விளங்கிய காலாங்கி சக்திமிக்க தலங்கள் அனைத்திலும் தவம் மேற்கொண்டவர்.

சதுரகிரியில் காலாங்கி தவம் செய்து கொண்டிருந்தபோது அவரைக்
காண வந்தான் வாமதேவன் என்றொரு பக்தன். வாலைபுரம் அவனுடைய ஊர். சிவாலயம் அமைக்கும் பேரார்வம் அவனுக்குள் பெருகியிருந்தாலும் பொருள்வளம் போதவில்லை.நீண்டநெடுங்காலம் தனக்குப் பணிவிடை புரிந்த வாமதேவனுக்கு சிவாலயம் எழுப்பும் சங்கல்பம் உறுதியாய் இருப்பதை உணர்ந்தார் காலாங்கி.சதுரகிரியிலிருந்த பற்பல மூலிகைகள்
கொண்டு வகாரத் தைலம் செய்தார் காலாங்கி.அதனைக் கொண்டு உலோகங்களைத் தங்கமாக்கி வாமதேவனுக்கு வழங்கினார்.

வணங்கி விடைபெற்ற வாமதேவனை வழியனுப்பிவிட்டு வந்து பார்த்தால்
வங்கக் கடல்போல் பொங்கிக் கொண்டிருந்தது வகாரத் தைலம்.”தெய்வப்
பணிக்காக சித்தியானதை தவறான புத்தியால் அள்ளிச்செல்ல ஆயிரம்
பேர் வருவார்களே! “கணநேரம் யோசித்தார் காலாங்கி. வகாரத் தைலத்தின் ஊற்றுக்கண்ணை மூடி,நான்கு திசைகளுக்கும் நநன்கு தெய்வங்களைக் காவலுக்கு நியமித்தார்.

காலாங்கிநாதரின் கண்டறியவொண்ணா ஞானத்தின் ஆழங்காட்டுவது
இந்திரசால ஞானம்,.ன்னிடம் வந்திருந்து கொங்கணவர் இந்நூலைக்
கற்றறிந்த செய்தியையும் காலாங்கியே சொல்கிறார்.

” முன்னூலாய்ச் சொன்னமொழி இந்நூலாகும்
மூலர்பிள்ளை காலாங்கி என்பேராகும்
என்னூலாய்ச் சொன்னமொழி அறிந்து கொண்டால்
இடையூறு தடையென்றும் இல்லையில்லை
இன்னூலைக் கொங்கணன்தான் அறியவென்று
என்னிடமாய் வந்திருந்து அறிந்து கொண்டார் ”

கஞ்சமலையில் இருந்ததால் கமலமுனியென்ற பேர்கொண்ட காலாங்கி
சித்தநிலையில் சிம்மாசனத்தில் இருந்தவர்களின் மெய்யன்பைப் பெற்றார்.தன் உபாசனைத் தெய்வமாகிய வாலை பரமேசுவரியை
ஊனுருக உயிருருக நெடுந்தவத்தில்நெஞ்சிருத்தி வழிபட்டவருக்கு
வாலை தரிசனம் வாய்த்தது.

வாய்கொள்ளாச் சிரிப்போடு வந்து நிற்கும் கன்னியாய்,
ஆயிரம் சூட்சுமங்கள் அறிவிக்கும் தேவியாய்
மனதின் மையத்தில் மலர்ந்து நிற்கும் மனோன்மணியாய்
குண்டலினி சக்தியாய் கண்கண்ட முக்தியாய் வந்து நின்ற
வாலை பரமேசுவரியால் மாசித்தன் என்று வாஞ்சையுடன்
வாழ்த்தினாள். யோக சூட்சுமங்களை உணர்த்தினாள்.விரிந்து கிடக்கும்
வெளியில் உயிரும் உணர்வும் அழுந்தியிருக்கும் அருந்தவத்தில்
ஆழ்த்தினாள்.

“தானென்ற கமலமுனியானேன் பாரு
சகலசித்தர் மெய்க்கவும் மெய்ச் சித்தனானேன்
மானென்ற வாலைசிறு பெண்ணாள் தேவி
மாசித்தன் என்றெனக்குப் பேரும் சொல்லி
தேனென்ற அமுதகளை ஊட்டிவைத்து
செகச்சால வித்தையெலாந் தெரியச் சொல்லி
வானென்ற வெளிகாட்டி வெளியிற்குள்ளே
மனதடங்கிச் செய்யென்றே வழுத்தினாளே”

என்பது அந்த அருளனுபவத்தில் காலாங்கிநாதர் வடித்த ஆனந்தக் கண்ணீர்.புலனடங்கி,மனமடங்கி,புத்தியதுவும் அடங்கி அமுதக்டேசர் சந்நிதியில் ஆழ்தவத்தில் லயித்திருந்தார் காலாங்கி நாதர் .

வாக்கிறந்த பூரணனின் வாசகங்கள் அன்னையின் செவிகளில்
அமுதமாய் விழுந்தன.”விஸ்வ சாக்ஷினி! வாழையின் அடியில்
வளரும் வாழை தாய்வாழையுடன் திருவடி சம்பந்தம் உடையது.
அதனாலேயே ஞானியர் மரபு வாழையடி வாழையென்று சொல்லப்
படுகிறது. நல்லகுருநாதரைத் தேர்ந்து தந்தை நிலையிலும் தெய்வ
நிலையிலும் வைத்து வணங்கும் சீடன் வேறேதும் பேறடையத்
தேவையில்லை.பார்வை,தொடுகை,திருவடி ஆகியவற்றின் வழி
ஆன்மகுரு அளிக்கும் தீக்கை ஏழுலகங்களையும் வழங்க வல்லது.

“யோகதா! காலாங்கியின் குரு திருமூலன் தில்லைப்பெருவெளியில்
கலந்தான்.காலத்தை அங்கியாகக் கொள்ள்ளும் தவத்திண்மை
கொண்ட காலாங்கியின் தியான அதிர்வுகள் காலசங்காரத்
திருத்தலத்தில் கலந்திருக்கும்”

நீண்டெழுந்த தீபச்சுடரும் நடுங்காமல் அசையாமல் ஞானதியானத்தில்
லயித்தது.

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *