நற்றுணையாவது நமச்சிவாயவே!-5

நான்காம் திருமுறை உரை

நகைச்சுவைக்கு இன்னொரு உதாரணம். சிவபெருமானுடைய பல்வேறு செயல்பாடுகள் நமக்கே தெரியும். கங்கையை தலையில் சூடி இருக்கிறார்; இது எல்லோருக்கும் தெரியும். மங்கைக்கு இடப்பாகம் கொடுத்து இருக்கிறார்; இது எல்லோருக்கும் தெரியும். அவர் சாமகானம் பாடுகிறார்; இது எல்லோருக்கும் தெரியும். நடனம் ஆடுகிறார்; இது எல்லோருக்கும் தெரியும். இவை நான்கும் தனிதனியான வேலையென்று நாம் நினைக்கிறோம். ஆனால் நாவுக்கரசர் சொல்கிறார் அப்படியெல்லாம் இல்லை. இது ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்கிறார். இது எப்படி ஒன்றுகொன்று தொடர்புடையது-? இது வேறு ஒன்றுமில்லை. சிவபெருமான் என்ன செய்தார்-? கங்கையைக் கொண்டான் என்று சடைக்குள் மறைத்து வைத்தார். கங்கையை மறைத்து வைத்தார் தெரிந்து உமாதேவிக்கு ஊடல் வந்துவிட்டது. உமாதேவிக்கு ஊடல் வந்ததும் அந்த ஊடலை மறைக்கச் செய்வதற்கு பாட்டுப் பாடினார்; சாமகானம் பாடினார். பாடினால் அம்மா ஊடல் தணியவில்லை என்று நடனமும் ஆடினார். கங்கையை தலையில் மறைக்கப் போய்தான் இவ்வளவு வேலையும் செய்தார்.

சூடினார் கங்கை யாளைச் சூடிய துழனி கேட்டங்
கூடினா ணங்கை யாளு மூடலை யழிக்க வேண்டிப்
பாடினார் சாம வேதம் பாடிய பாணி யாலே
ஆடினார் கெடில வேலி யதிகைவீ ரட்ட னாரே
என்றார்.

நான் பேசிவிட்டு வெளியில் வருகிறேன். எ.எல்.எஸ்-அவர்களோ, வாசுகி அம்மாவோ என்ன நினைக்கிறார் இன்று அவர் நன்றாகப் பேசியிருக்கிறார் என்று நினைத்து ஓடிப்போய் பக்கத்தில் இருக்கும் கிருஷ்ணா ஸ்வீட்ஸில் 2 கிலோ மைசூர்பா வாங்கி வருகிறார். ஒரு கற்பனைதான். இப்போது அவர்கள் இனிப்பு வாங்கிக்கொண்டு வருகிறார்கள் என்றால் நான் என்ன செய்ய வேண்டும்? அவர்கள் மேல் மிகுந்த மரியாதை காட்ட வேண்டும், அன்பு காட்ட வேண்டும். இதே சமயத்தில் ஒருவர் ஆயுதத்துடன் நிற்கிறார் என்றால் ‘படிக்காம அடுத்த வருடம் வந்து பேசுவ நீ?’ என்று கேட்டால் விலகிப்போய்விடவேண்டும்.

ஆனால் சிவபெருமானிடம் ஒருவர் கரும்போடு வந்தாராம்; அவனை காயப்பட வைத்தார். இன்னொருத்தர் இரும்போடு வந்தார்; அவருக்கு இன்பம் கொடுத்தார். கரும்போடு வந்தவன் மன்மதன். இரும்போடு வந்தவர் விசாகதர்மர். அவருக்கு சண்டிகாஷ பதம் கொடுத்தார். கரும்பைப் பிடித்தவர் காயப்பட்டார். அங்கொரு கோடலியால் இரும்பைப் பிடித்தவர் இன்பப்பட்டார். என்னவொரு அருமையான பாடல் பாருங்கள்.

இனிப்பு கொண்டு வந்தால் அவனுடைய நோக்கம் இவர் மேல் ஆசையை தூண்டுவது. இவர் கையில் ஆயுதம் எடுத்தார். ஏன் பெற்ற தந்தையாக இருந்தாலும் சிவபூஜைக்கு ஊறு விளைவித்தால் கால்களை வெட்டுவேன். கரும்பு பிடித்தவர் காயப்பட்டார். இரும்பு பிடித்தவர் இன்பப்பட்டார் என்று ஓர் அருமையான நயத்தோடு நம்முடைய பெருமான் பாடுவதை நாம் பார்க்கிறோம். இப்படி பல்வேறு அம்சங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.

இன்றைக்கு நான் ஒரு விஷயத்தை சொல்வதற்கு மிகவும் யோசித்தேன். அதை நம் சாரதா அக்கா அவர்கள் அடியெடுத்துக் கொடுத்தார்கள்.

அவர்கள் பேசியபோது, ஒரு திவ்விய பிரபந்த பாசுரத்தைச் சொன்னார்கள்-. பொதுவாக வைணவ மேடைகளில் திருமுறை சொல்லமாட்டார்கள். திருமுறை மேடையில் பிரபந்தம் பொதுவாக பேசமாட்டார்கள். ஆனால் ஒரு புதுமையைச் செய்ததில் எனக்கு மகிழ்ச்சி. என்ன காரணமென்றால் நாலாயிரம் திவ்வியபிரபந்தம். நாலாயிரம் என்பது வைணவர்களுக்கு மட்டும்தான் இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் சைவர்களுக்கும் ஒரு நாலாயிரம் உண்டு.

உங்களுக்கே தெரியும். அவ்வையாரிடம் போய் ஒரு நிமிடத்தில் நாலு கோடி பாட்டு பாடச் சொன்னால் ஒரு பாட்டு பாடினார். என்ன பாட்டு என்றால்

மதியாதார் முற்ற மதித்தொருகாற் சென்று
மிதியாமை கோடி யுறும்.
உண்ணீருண் ணீரென்றே யூட்டாதார் தம்மனையில்
உண்ணாமை கோடி யுறும்.

கோடி கொடுத்துங் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுவதே கோடி யுறும்.
கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி யுறும்.

அதேபோன்று, நாலாயிரம் பாட்டு திருமாலுக்கு இருக்கிறது. ஒரே ஒரு பாட்டில் நாலாயிரம் வைத்தார் நான்காம் திருமுறையில் திருநாவுக்கரசர். இந்தக் கடலில் அமுதம் வருகிறது இல்லையா? கடலில் எவ்வளவு நதிகள் வந்து மொய்க்கிறது. எண்ண முடியுமா? நம்மால் எண்ண முடியவில்லை என்றால் ஆயிரம் என்போம். அவன் ஆயிரம் சொல்வான் என்றால் நாம் அவன் சொன்னதை எண்ணிக்கொண்டா இருந்தோம். ஊர் ஆயிரம் பேசும். ஏன் 999 பேசாதா? 1002 பேசாதா? ஆயிரம் என்பது நிறைய என்று அர்த்தம். திருநாவுக்கரசர் சொல்கிறார், சிவபெருமான் என்னவெல்லாம் செய்தார் என்று.

ஆயிர நதிகண் மொய்த்த வலைகட லமுதம் வாங்கி
ஆயிர மசுரர் வாழு மணிமதின் மூன்றும் வேவ
ஆயிரந் தோளு மட்டித் தாடிய வசைவு தீர
ஆயிர மடியும் வைத்த வடிகளா ரூர னாரே.
இவை நான்கும் நாலாயிரமாயிற்று. சைவத்தினுடைய நாலாயிரம் இந்த பாட்டு.

-மரபின் மைந்தன் முத்தையா

                                                                                                                                                           (தொடரும்)

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *