நவராத்திரி கவிதைகள்…….1

என்ன வேண்டுவதோ…..?

நீலக் கருங்குயில் பாட்டினொலி- வந்து
நேர்படக் கேட்டிடும் மாலையிலே
வாலைச் சிறுமியின் வடிவெடுத்தே-அவள்
வந்துநின்றாளென் எதிரினிலே
தூல வடிவினில் ஓளிந்துகொண்டால்-இது
தாயென்று சேய்மனம் அறியாதோ
ஜாலங்கள் காட்டிடும் சக்தியவள்-முக
ஜாடை நமக்கென்ன தெரியாதோ?

எந்த வடிவையும் எடுத்திடுவாள்- அன்னை
எதிர்ப்பட நினைத்தால் எதிர்ப்படுவாள்
முந்திப் பறக்கிற முகில்வடிவாய்-அவள்
முத்துக்கள் ஆயிரம் உதிர்த்திடுவாள்
சிந்தை வலிமிகும் வேளையிலே-அவள்
சின்னக் குழந்தையாய் விரல்தொடுவாள்
வந்த சுவடே தெரியாமல்-வந்த
வேலை முடித்துக் கிளம்பிடுவாள்

காட்சி கொடுப்பது அவளெனவே-நம்
கண்கள் உணருமுன் மறைந்திடுவாள்
மீட்டொரு முறைவரக் கெஞ்சுகையில் -அந்த
மாதங்கி எங்கெங்கும் நிறைந்திடுவாள்
நீட்டிய பிறவிகள் நீள்வதனை-அந்த
நிர்மலை பார்த்துக் குறைத்திடுவாள்
ஏட்டில் ஓமென எழுதுகையில்-அந்த
ஏகாக்ஷரமாய் ஒளிர்ந்திடுவாள்

அன்னை இருக்கையில் என்னகுறை-இங்கு
ஆடவும் பாடவும் ஏதுதடை
என்னையும் உன்னையும் கைகளிலே-வந்து
ஏந்திக் கொள்வாளினி ஏன்கவலை
மின்னை நிகர்த்திடும் பேரழகி-சிவ
மோகம் வளர்த்திடும் மோகினியாள்
தன்னை நினைத்தவர் நெஞ்சிலெல்லாம்-வந்து
தாண்டவம் ஆடிடும் வேளையிது

மொத்தப் பிரபஞ்சமும் அவள்வடிவம்-இதில்
மூடனும் மேதையும் அவள்படைத்தாள்
சித்தம் குழைந்தவள் இரங்கிவிட்டால்-முழு
மூடனை மேதையாய் ஆக்கிடுவாள்
அத்தனின்சாபங்கள் நமக்கிருந்தால்-இவள்
அத்தனையும் ரத்து செய்திடுவாள்
வித்தகி சக்தியின் பார்வைக்குள்ளே-நாம்
வந்தபின்னே என்ன வேண்டுவதோ!!

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *