பொன்னூஞ்சல்
 
 
வீசி யாடுது பொன்னூஞ்சல்-அதில்
விசிறிப் பறக்குது செம்பட்டு
பேசி முடியாப் பேரழகி-அவள்
பாதம் திரும்புது விண்தொட்டு
ஓசை கொடுத்த நாயகிதான்- அங்கே
ஓங்கி அதிர்ந்து ஆடுகிறாள்
கூசிச் சிணுங்கும் வெண்ணிலவை-தன்
கார்குழல் கொண்டே மூடுகிறாள்

பிஞ்சுத் தாரகை கண்திறக்கும்-அவள்
பாதத்தின் கொலுசொலி கேட்டபடி
கொஞ்சும் மின்னல் கண்திகைக்கும்-அவள்
கொடியிடை அசைவதைப் பார்த்தபடி
தஞ்சம் தருகிற தாள்களையே-எட்டுத்
திசைகளும் சூடும்  தொழுதபடி
“அஞ்சேல்” என்றவள் குரல்கேட்க-என்
அகம்மிக உருகும் அழுதபடி

அல்லைப் பழிக்கும் அடர்நிறத்தாள்-என்
அல்லல்கள் தீர்க்கும் அபிராமி
தில்லைக் கரசனின் தாண்டவத்தில்-நல்ல
தாளமென்றானவள் சிவகாமி
சொல்லைக் கள்ளாய் மாற்றித்தரும்-அருள்
சொக்கன் மகிழ்கிற மாதங்கி
தொல்லை வினைகள் தொலைத்தெறிந்தே-உயிர்
துடைத்துக் கொடுக்கும் சாமுண்டி

விண்வரை அசைகிற பொன்னூஞ்சல்-அந்த
விதியை உதைக்கும் அதிசயமாம்
மண்வரை வந்த உயிர்களுக்கோ-அவள்
மலரடி நிழலே பெரும்சுகமாம்
கண்வரை வந்த துளிகளையே- அவள்
கங்கை தீர்த்தமாய் ஏற்றிருப்பாள்
பெண்வடிவாய் நின்ற பெருஞ்சக்தி-இந்தப்
பிரபஞ்சம் முழுவதும் காத்திருப்பாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *