“புழலேரி நீரிருக்க போகவர காரிருக்க
பொன்னுச்சாமி சோறிருக்க தங்கமே தங்கம் – நான்
போவேனோ சென்னையை விட்டு தங்கமே தங்கம்”

இன்றளவும் சென்னையில் செயல்படும் பொன்னுச்சாமி ஹோட்டல் சாப்பாட்டை சிலாகித்து பட்டுக்கோட்டையார் எழுதியகுறுங்கவிதை இது. அதே உணவகத்தில் காரசாரமாகக் காடை சாப்பிட்டதன் விளைவையும் அவர் கவிதையாக்கி இருக்கிறார்.
29 ஆண்டுகளுக்குள் ஏகப்பட்ட தொழில்கள் செய்து குறுகிய காலமே பாடல்களெழுதினாலும் பாட்டுக்கோட்டையாகவே நிலைநின்று புரட்சிகரமானபாடல்கலைஎழுதியபட்டுக்கோட்டையாரின் குறும்பு முகத்தின் அடையாளம் பொன்னுச்சாமி உணவகம் பற்றிய பாடல்கள்

இசைப்பாட்டுக்கு இயைபு மிகவும் முக்கியம். முன்னெதுகைபோலவே இயைபும் பாடலை நினைவில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்துகிறது.
பட்டுக்கோட்டையார் பாடல்களின் தனியழகு இந்த இயைபு.

மனிதனாக வாழ்ந்திட வேண்டும் மனதில் வையடா
வளர்ந்துவரும் உலகத்துக்கேநீ வலது கையடா
தனியுடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா
தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா- தம்பி
                                                                                     பழைய பொய்யடா

இதில் மனிதனாக – தனியுடைமை போன்ற முன்னெதுகைகளை பின்னெதுகைகள் தூக்கிச் சாப்பிட்டு விடுகின்றன.
இந்த உத்தியை உறுத்தாத நேர்த்தியில் அனாயசமாகக் கையாண்டவர் பட்டுக்கோட்டை.
(இதைஎரிச்சலூட்டும் வகையில் தொடார்ந்து கையாண்டு அதையே தன்பாணியாக்கிக் கொண்டவர்கள் திரையுலகில் உண்டு)

வலிந்து போடப்படும் எதுகைகள் நெளிந்து போனபித்தளைப் பாத்திரங்களாய் விகாரம் காட்டும். ஆனால் பட்டுக்கோட்டையாரின் கவிதை இலக்கணம் எளிமையில் பூத்தஎழில்மலர்கள்.
“சிந்திச்சுப் பார்த்து செய்கையை மாத்து சிறிசா இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாமநடந்திருந்தா…திரும்பவும் வராம பார்த்துக்கோ”

கண்டிப்பும் கனிவும் கலந்த இந்த வரிகளின் பரிவும்

கொடுக்கற காலம் நெருங்குவதால் இனி எடுக்கற அவசியம் இருக்காது
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா கவுக்கற வேலையும் இருக்காது”

என்ற வரிகளின் தெளிவும் தீர்வு நோக்கிய பயணமும் இந்தப் பாடலை தாக்கம்மிக்கதாய் ஆக்குகிறது.

ஆறேழு சொற்களுக்கே வாய்ப்பிருக்கும் குறுகலான சந்தத்தில் கூட

தெரிந்து நடந்து கொள்ளடா -இதயம்
திருந்த மருந்து கொள்ளடா

என்றுநிறைகர்ப்பச் சொற்களின் நர்த்தனத்தைக் காட்டுகிற அழகு, தனியழகு.

“தெள்ளுதமி ழுக்குதவு சீலன் -துதி
செப்பும் அண்ணாமலைக் கனுகூலன்
ஊர் செழியப் புகழ்விளைத்த கழுகுமலைவளத்தை
தேனே- சொல்லு- வேனே

இது சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து. இலக்கணம் கற்றவர்களுக்கே கூட இடக்கரடக்கலான
சந்தம் தான் இது.

இந்த சிந்து பட்டுக்கோட்டையார் வரிகளில் பாமரர்கள் நாவிலும் அனாயசமாய் புகுந்து புறப்படுகிறது

உப்புக் கல்லை வைரமென்று சொன்னால்- அதை
ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால்
நாம் உளறியென்ன கதறியென்ன ஒன்றுமே நடக்கவில்லை
தோழா- ரொம்ப- நாளா

கடைகோடி மனிதர்களுக்கும் கொள்கைகளைக் கொண்டு சேர்க்கும் அழுத்தமான எளிமை பட்டுக்கோட்டையாரின் புலமை.
எளிமையின் பிரமாண்டம் எத்தகையது என்பதை நித்தம் நித்தம் நிரூபிக்கிறது காற்றில் வருகிற பட்டுக்கோட்டையாரின் பாடல்கள்

-மரபின் மைந்தன் முத்தையா

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *