பூமிப்பந்துடன் கொண்டாடு

பூமிப்பந்துடன் கொண்டாடு

வயல்களில் முளைவிடும் பயிர்களுக்கு
வான்தரும் மழைத்துளி விருதாகும்!
வியர்வை விதைக்கும் உழவருக்கு
விளைச்சல் முழுவதும் விருதாகும்!
முயற்சியை நம்பி உழைப்பவர்க்கு
முன்னேற்றங்கள் விருதாகும்!
துயரங்கள் துடைத்து எழுபவர்க்கு
தொடரும் இன்பங்கள் விருதாகும்!

அழுத்திடும் சோம்பலை அகற்றிவிடு
அடுத்தவர் சோகம் துடைத்துவிடு
எழுத்தினில் பேச்சினில் கனிவுகொடு
ஏங்கும் யாருக்கும் துணிவுகொடு
நிகழ்த்திய வெற்றிகள் கையளவு
நீதொட இலக்குகள் வானளவு
கழுத்தினில் விழுகிற பதக்கம்பெறக்
குனிகிற பணிவே கடலளவு!

விருதுகள் எல்லாம் முன்னோட்டம்
வருகிற வெற்றிக்கு வெள்ளோட்டம்
கருதிய இலக்கைத் தொடுவதென்று
கிளம்பும் நேரத்தின் கொண்டாட்டம்
ஒருதனி மனிதன் ஜெயிப்பதில்லை
உலகே ஜெயிக்கும் அவனோடு!
பெருமைகள் உனக்கென வரும்போது
பூமிப்பந்துடன் கொண்டாடு!

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *