பலரும் தங்களின் தனிப்பட்ட குறிப்புகள் இணையத்தால் பறிபோகிறதென்றும் அனைவரின் அந்தரங்கத்திற்கும் ஆபத்தென்றும் சொல்லி வருகிறார்கள். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
கே.லோகநாதன், கோவை.

ஒரு மனிதர் தன் அந்தரங்கம் என எதனை நினைக்கிறார் என்பதே கேள்விக்குரியது. இணையத்தில் நீங்கள் நுழைந்த நொடியிலிருந்தே உங்கள் நடவடிக்கைகள் பதிவாகின்றன. உங்களைப் பற்றிய அடிப்படைத் தரவுகள் அளிக்கப்படுகின்றன.
இணையம் என்ற ஒன்று தோன்றும் முன்னரே உங்களைப் பற்றிய தரவுகளைப் பதியத் தான் செய்கிறீர்கள். நீங்கள் பிறந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் சேர்க்கப்படுகையில் தரப்படும்

பிறப்புச் சான்றிதழ் தொடங்கி, பற்பல சேகரங்களால் உங்களைப் பற்றிய தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. தொழில்நுட்பம் மிக நுண்மையான நிலையில் பொதுப்பயன் பாட்டுக்கு வந்த பிறகு ஒவ்வொரு மனிதனைப் பற்றியுமான தரவுக் கோப்பு தானாகவே உருவாகிறது.

உதாரணமாக நீங்கள் இணையத்துக்குள் ஏதோ ஓர் அடையாளத்துடன் நுழைகிறீர்கள். அது உங்கள் மின்னஞ்சல் முகவரியாக இருக்கலாம், முகநூல் கணக்காக இருக்கலாம். நீங்கள் எந்த எந்தத் தளத்தில் எல்லாம் நுழைகிறீர்கள், பார்வையிடுகிறீர்கள் என்பதெல்லாம் இயல்பாகவே பதிவாகின்றன.
இதன் மூலம் உங்கள் விருப்பங்களை தொழில்நுட்பம் கணித்து சில பரிந்துரைகளைத் தருகிறது. எல்லா நாடுகளிலும் அதன் குடிமக்கள் எண்களால் அறியப்படுகிறார்கள். நம் நாட்டைப் பொறுத்தவரை ரேஷன் அட்டை, வருமான வரி அட்டை, ஆதார் அட்டை போன்ற எண்கள் உங்களுக்கான அடையாளங்கள். அவை உங்கள் உரிமைகளையும், சமூகத்தில் உங்கள் பாதுகாப்பையும், உங்களிடமிருந்து சமூகத்துக்கான பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான அடிப்படை ஏற்பாடுகள்.

உதாரணமாக, உங்கள் வாகனத்தை ஓரிடத்தில் பாதுகாப்பாக நிறுத்தி கட்டணம் செலுத்துகிறீர்கள். உங்களுக்குத் தரப்படும் ரசீதில் உங்கள் வாகன எண் குறிக்கப்படுகிறது.
இது எதற்கெனில் வாகனத்தைக் கொண்டு செல்லும்போது உங்கள் ரசீதில் உள்ள எண்ணையும் வாகன எண்ணையும் சரிபார்த்துக் கொள்ள முடியும். அவ்வளவுதான்.
ஆனால் வாகன எண்ணை வைத்துக் கொண்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வீட்டு முகவரியை வாங்கிவிட முடியும். எனவே பொது வெளியில் அந்தரங்கம் என்ற ஒன்று தனியாய் இல்லை.

உங்கள் அந்தரங்க விஷயங்களை நீங்கள் அந்தரங்கமாக வைத்துக்கொள்ளும் வரை உங்களுக்குப் பிரச்சினை இல்லை.
ஆனால் இதில் சுவாரசியமான அம்சமொன்று உண்டு. விஞ்ஞானத்தின் இந்த நுட்பமான முகத்துக்கும் விதிக்கொள்கைக்கும் நெருக்கமான ஒற்றுமை உண்டு. கர்மவினை என்பதென்ன? உங்கள் மனதில் எழும் ஒவ்வோர் எண்ணமும் உங்கள் சக்தி உடலில் பதிவாகிறது.
ஒவ்வோர் எண்ணம்,ஒவ்வொரு தொடுகை, ஒவ்வொரு சொல் ஒவ்வொரு செயல் எல்லாமே பதிவாகி வினைத்தொகுதிகளாக உருப்பெறுகின்றன. இதைத்தான் கர்மவினை என ஆன்மீகம் சொல்கிறது. இதைத்தான் இணையமும் தரவுகள் என்கிறது.
இணையத்திலும் சரி ஆன்மீகத்திலும் சரி உங்கள் விதியை நீங்களே எழுதுகிறீர்கள். யாரோ சதி செய்வதாய் அலறுகிறீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *