முதன்முதலாய் காசி போன போது…….2

பாலத்தின் மேல் தடதடத்த ரயிலிலிருந்து பார்த்த போது, கம்பீரமான பிரவாகத்தில் இருந்தாள் கங்காமாதா.வாரணாசி ரயில்நிலையத்தில்காலை எட்டரை மணிக்கு இறங்கும்போதே வெறித்தனமான பக்தியுடன் வெய்யில் காசியை வலம்வரத் தொடங்கியிருந்தது.நாட்டுக்கோட்டை நகரத்தார் காசி விசுவநாதரின் நித்திய பூஜைக்குப் பொறுப்பேற்றிருந்ததால் தஞ்சை நகரத்தார் சங்கத்திலிருந்து கடிதம் பெற்று வந்திருந்தார் நண்பர் செழியன்.நகரத்தார் சங்கம் என்றால்
யாருக்கும் தெரிவதில்லை.”நாட்கோட் சத்ரம்” என்றால் வீதியில் வெறுமனே நிற்கும் மாடுகள் கூட வாலைச் சுழற்றி வழிகாட்டுகின்றன.எண்பது ரூபாய் கேட்டார் ஆட்டோக்காரர்.அவர் கடந்த தொலைவுக்கு நம்மூரில் நிச்சயம் இருநூறு ரூபாய் கேட்டிருப்பார்கள்.ஒற்றையடிப்பாதைதான் எல்லா வீதிகளும்.சென்னை மவுண்ட் ரோடினும் சந்தடி அதிகம்.வழிமறிக்கும் தாதாக்களாய் வழியெங்கும் கோமாதாக்கள்.இருமுறை நின்ற ஆட்டோவை ஆசுவாசப்படுத்தி “நாட்கோட் சத்ரம்” வாசலில் விட்ட ஆட்டோக்கிழவருக்கு 100 ரூபாய் தந்து மீதி வேண்டாம் என்றதும்,கணக்கை நேர் செய்வது போல் இருபது முறை கும்பிட்டார்.
தமிழ்க்குரல்களால்  நிரம்பி வழிந்தது நாட்டுக்கோட்டை சத்திரம்.150க்கும் அதிகமான அறைகள்.ஏசி அறைகள் ஏதுமில்லை என்றாலும் கிகக் குறைந்த கட்டணத்தில் வசதியான விசாலமான அறைகள் தருகிறார்கள். காலைப் “பலகாரம்” இருபது ரூபாய். மதியம் அருமையான தென்னிந்திய உணவு-30 ரூபாய்.இரவுப்பலகாரமும் 20 ரூபாய்.
அவசரம் அவசரமாய்த் தயாராகி வரும்போது சிற்றுண்டிக்கான நேரம் கடந்திருந்தது. வாடகைக்கார் பிடித்து உள்ளூர்க் கோயில்கள் சிலவற்றுக்குப் போனோம். துர்கா கோவில் அனுமார் கோவில், காலபைரவர் கோவில்.கோவில் மாதிரியே இல்லை.பளிங்கு பங்களாக்களில் கடவுள்கள் காட்சி தருகிறார்கள்.காலபைரவர் பிரசித்தி பெற்றவர்.ஒரே சங்கடம் அங்குள்ள ஆன்மீக அடியாட்கள். இருபது ரூபாய் கொடுத்து இறைவனுக்கு நீங்கள் வாங்கிச் சென்ற மாலையை
உங்கள் கண்முன்பே அடுத்தவருக்கு மாட்டிவிட்டு ஐம்பது ரூபாய் வாங்கிவிடுவார்கள்.
அவர்கள் கண்களைப்பாராமல் கடந்து போனால் எந்தப் பிரச்சினையும் இல்லை. பார்த்து விட்டால் உங்களின் எந்தக் கெஞ்சலும் எடுபடாது.”தண்டம்” என்று அதட்டுவார்கள்.அவர்களுக்கெப்படி தெரியும் என்று ஆச்சரியம் வேண்டாம். “தண்டம்” என்றால் குனிய வேண்டும் என்று அர்த்தமாம். உங்கள் முதுகுத்தண்டில் ஒங்கி அறைந்து,திட்டுவதுபோல் மந்திரம் சொல்லிவிட்டு, ஐம்பது நூறு என்று தண்டம் அழ வைக்கிறார்கள்.”கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல’ என்றெழுதிய வள்ளுவர் காலத்திலேயே காசி காலபைரவர் கோவில் வந்திருக்க வேண்டும்.சந்நிதியில் இந்த சங்கடத்திலிருந்து தப்பி வந்தாலும் பிரகாரத்தில் அவர்களின் படைகள் படமெடுத்து ஆடுகின்றன. மயிலிறகும் கையுமாய் உட்கார்ந்திருப்பவர்கள் வருந்தி அழைத்து உடம்பை மயிலிறகால் வருடி தட்சிணை வாங்கி விடுகிறார்கள்.
அவர்களில் ஒரு சிறுவன். அதிகம் போனால் வயது 15 இருக்கும்.தென்னிந்தியர்கள் அனைவருமே ஆந்திரர்கள் என்பது அவன் அபிப்பிராயம்.”அண்ணா !தப்புலேது! ரண்டி” என்கிறான்.
இவர்கள் அத்தனை பேரிடமிருந்தும் பாக்கெட்டுக்கு சேதாரமில்லாமல் தப்பித்தவன் நான்மட்டும் என்பதை அதாரபூர்வமாய் அறிவிக்கிறேன்.  அங்கிருந்து போனது சாரநாத் . புத்தர் ஞானம் பெற்று வந்ததும் முதன்முதலாய் உபதேசம் செய்த இடம்.அங்கேயே அசோகர் நிறுவிய 1500 ஆண்டுகால ஸ்தூபி ஒன்றும் உள்ளது.
வெய்யிலிலும் அனற்காற்றிலும் ஏசி கார் புழுங்கித்தள்ளியது. சத்திரம் திரும்பி உண்வும் ஒய்வும் கொண்டபிறகு,சத்திர உதவியாளர் முத்து கதவைத்தட்டினார்.”ஒருவரை உடனனுப்புகிறேன்.கோவிலுக்குப் போய் வந்து விடுங்கள்”என்றார்.பாதுகாப்புக் காரணங்களுக்காக வாட்ச்,பேனா,செல்ஃபோன் அனுமதியில்லை.

கோவிலுக்கு மிக அருகில் சாட்சி விநாயகரைக் காட்டி வணங்கச் சொன்னார்கள். நாம் காசிக்கு வந்தோம் என்பதற்கு அவர்தான் சாட்சி சொல்வாராம். பலத்த பாதுகாப்பைக் கடந்து அன்னபூரணி முன்உருகி நின்று தள்ளும் கூட்டத்தின் இடிபாடுகளைச் சமாளித்து, வாசலில் வாங்கிய பால்கிண்ணத்தைக் குத்து மதிப்பாய்க் கவிழ்த்து, விரல்கள் விட்டுத் துழாவியபோது,நம் கைகளுக்குத் தட்டுப்படுகிறார் விசுவநாதர். அந்த சில விநாடிகளுக்கு விலைமதிப்பில்லை, அந்தத் தாக்கம் கலையாமல் விசாலாட்சி சந்நிதிக்கு வந்தால்  ஆற அமர தரிசனம்.
அதுவரை இருந்த சுற்றுலா மனப்பான்மை விசுவநாதரின் ஸ்பரிசத்துடன் விடைபெற்று உள்ளே சட்டென்று அமைதி பரவியது.கங்கைக் கரைநோக்கிக் கால்கள் நடக்க, ஒரு சுழல்போல உள்ளே உருக்கொண்டது பாடல்.
விநாடிநேரம் விரல்பிடித்த விஸ்வநாதம்-என்
வினைகளெல்லாம் அவன்மடியில் விழுந்த கோலம்
கனாவில் அவன்முகம் குலாவும் தினம் தினம்
வினாமலர்ந்த நேரமவன் விடைகள் சாஸ்வதம்

ஓமப்புகை வந்து உயிரினை வருடிட

ஈமப்புகை கங்கைக் கரையினில் எழுந்திட
நாமம் மொழிந்திடும் நாவில் கமழ்ந்திடும்
ஞானம் எனும் லயமே
மோகம் விளைந்திடும் தேகம் இதுஇனி
நாளும் சிவமயமே
ஹரஹர ஷிவஷிவ எனும்நதி அலைகளில்
அமிழ்ந்திட வினைவிழுமே
திருவடி சரணென உளமிக உருகிட
சிவனருள் துணைவருமே
 
 
வேர்விடும் அகந்தையும் விழுகிற தருணம்
நேர்வரும் விஷ்வேஷ்வரனே சரணம்
காரணி அன்ன பூரணி அன்னை
கண்முன் நின்றுவிடு
காட்சி தரும்விசா லாட்சியின் சந்நிதி
கதியென்று விழுந்துவிடு
அம்பிகை துணையென நம்பிடும் மனதினில்
நன்மைகள் நிரந்தரமே
செம்பினில் ஏந்திய கங்கையின் தீர்த்தமும்
சங்கரன் தரும்வரமே 
கங்கைக் கரையில் நின்ற போது அங்கே சித்தித்த வாகனப் பிராப்தி-படகு
(தொடரும்)
0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *