முதன்முதலாய் காசி போன போது…….

(சத்குரு அவர்களுடன் காசியில் நிகழ்ந்த உரையாடலின் ஒளிப்பதிவு தற்போதுஸ்டார் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வருகிறது. அது நான்காவது முறையாய் காசி சென்றபோது கிட்டிய பெரும்பேறு.2009ல் முதன்முதலாய் காசி சென்ற அனுபவங்களை அப்போது இணையக் குழுமம் ஒன்றில் எழுதியிருந்தேன்.அவை இப்போது உங்களுக்காக..)
 
கல்கத்தாவின் அவ்வளவு பெரிய விமான நிலையத்தில் என் கண்கள் வேறெதையும் தேடவில்லை. என் பெயர் எங்கே தட்டுப்படுகிறது என்றுதான் தேடினேன்.தேடுங்கள் கண்டடைவீர்கள் என்பதற்கேற்ப,என் பெயரையும்,உடன் வந்த நண்பர் மாரியப்பனின் பெயரையும்துவாலைச்சீட்டு ஒன்றில் (துண்டுச்சீட்டை விட சற்றே பெரிது)எழுதிப் பிடித்தபடி பான் மணக்கும் வாயோடும்,தூக்கக் கலக்கம் மிதக்கும் கண்களோடும் நின்றிருந்தார் ஒருவர்.விமானத்தில் இருந்து இறங்கிய கையோடு அவசரம் அவசரமாய் பாரதீய பாஷா பவன் போய் சேர்வதற்குள் கவிஞர் வைரமுத்துவிற்கு சரஸ்வதி சம்மான் விருது கொடுத்து முடித்திருந்தார்கள். விருது பெற்ற சக எழுத்தாளர்கள் அவரவர் மொழியில் ஏற்புரை வாசிக்க கொஞ்சமும் புரியாததால் கரம் சாயா குடிக்கப் போய்விட்டேன்.திரும்ப வந்து இருக்கையில் அமரவும் கவிஞர் வைரமுத்து ஏற்புரை தொடங்கவும் சரியாக இருந்தது.
“சங்கம் வளர்த்த மண்ணிலிருந்து வங்க மண்ணுக்கு வந்திருக்கிறேன். மீசை வைத்த பாரதி மண்ணிலிருந்து தாடி வைத்த தாகூர் மண்ணுக்கு வந்திருக்கிறேன்” என்று அவர் தொடங்கிய போது தமிழகத்திலிருந்து போயிருந்த 54 சொச்சம் பேர்களும் கல்கத்தா தமிழ்ச்சங்கத்தினரும் எழுப்பிய கரவொலியில் அரங்கம் அதிர்ந்தது என்றால் நீங்கள் நம்பத்தான் வேண்டும்.ஏனென்றால் அரங்கத்தின் அறுதிப் பெரும்பான்மை இந்தக்கூட்டம்தான்.எப்போதும் போல் இயல்பாக தேநீர் பருகிக் கொண்டு விழாவை நடத்தி முடித்து விடலாம் என்று நினைத்த பாஷா பரிஷத்தின் பாச்சா எங்களிடம் பலிக்கவில்லை.தென்மாவட்டங்களிலிருந்தும் தஞ்சை திருச்சியிலிருந்தும்  கிளம்பி வந்திருந்த எங்கள் பேரவை நண்பர்களின் ஆர்வ அலையில் அரண்டு போனார்கள் பாவம்.விழா முடிந்தது..புகைப்படப் படலம் தொடர்ந்தது
பாரதீய பாஷா பவன் நிர்வாகம் வருந்தி அழைத்த விருந்தைப் புறக்கணித்து விட்டு நல்ல வங்காள உணவு எங்கே கிடைக்கும் என்று விசாரித்தோம்.ஜமுனா சினிமா எதிரில் உள்ள கஸ்தூரி உணவகத்தை உள்ளூர்க்காரர்கள் பரிந்துரைத்தார்கள்.கொழுத்த மீன்களும்,நெய்மணக்கும் சோறும்கமகமத்தன.கடல்மீன்களின் கலம்பகம் மேசையெங்கும்.ஓரிரு நாட்களுக்கு முன் திறந்த வாயோடு நீந்திய மீன்கள் நீங்காத் துயிலில் கிடக்க, நாங்கள் பிளந்த வாய்களுடன் சாப்பிடவும் மறந்து சிலையானோம்.அப்புறம் மீனோடு மீனாகிய என்னை நண்பர்கள் கரைசேர்த்தனர்.
மயூரி ஹோட்டலில் எங்களைக் கொண்டு வந்து சேர்த்த அந்த ஓட்டுநரை அப்போதுதான் இன்னும் சரியாகக் கவனித்தேன்.அழுக்குப் படிந்த அலட்சிய வெள்ளையில் குர்தா-பைஜாமா.கல்கத்தாவிலேயே கிடந்துழன்றும்,கல்கத்தா வீதிகள் குறித்து அறியாமை,வங்கால மொழி தெரியாத எங்களைப் பார்த்து அவ்வப்போது சிநேகமாய் சிரிக்கும் கண்கள்.தட்சிணேஸ்வரம் போய் வந்த பிறகு அவர் விடைபெற,சமீபத்தில் திறக்கப்பட்ட தென்னிந்திய உணவகம் தேடிக் கிளம்பினார்கள் நண்பர்கள். எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊரின் உணவு ரகங்களுக்குமுதலிடம் தருவதென் வழக்கம்.ஆனாலும் கூட்டணி தர்மத்தைக் கைவிடாமல் அவர்களுடன் கிளம்பினேன்.அப்புறம்தான் தெரிந்தது,அடுத்த வீதிகூடத் தெரியாமல் இருப்பதுதான் கல்கத்தாவில் டாக்ஸி ஓட்ட அடிப்படைத் தகுதி என்று.
நாங்கள் ஐந்து பேர். முன்னிருக்கையில் ஒருவர்தான் அமர வேண்டும் என்று ஒட்டுநர்கள் பதறுகிறார்கள்.மீறி ஏறிவிட்டால்,சிரித்துக் கொண்டே தலையில் அடித்துக் கொண்டு வண்டியைக் கிளப்பி விடுகிறார்கள்.நாங்கள் சொன்ன வழியும் புரியாமல்,போகும் திசையும் தெரியாமல் அந்த ஓட்டுநர் பத்து நிமிடங்களுக்குள் ஏழு முறை தலையில் அடித்துக் கொண்டார். உழைப்பாளர்களின் உரிமையை உரக்கப் பேசும் வங்க மாநிலத்தில் இன்னும் கைரிக்ஷாக்கள் புழக்கத்தில் இருப்பதுதான் பெரிய வியப்பும் வலியும் .கொளுத்தும் வெய்யிலில் கால்செருப்புக்கூட இல்லாமல் அவர்கள் ரிக்ஷா இழுக்க, பேன்ட்போட்ட-சுடிதார் அணிந்த புளிமூட்டைகள் குடைபிடித்து உட்கார்ந்தபடி கின்லே தண்ணீர் குடிக்கின்றன.
போக்குவரத்து குறித்த எந்தப் பிரக்ஞையும் இல்லாத கல்கத்தா வீதிகளில் காலாற நடந்து காயம் படாமல் கின்னஸ் சாதனை புரிந்தோம். திடீர் திடீரென்று பிரசன்னமான டிராம்களும்
விற்பனையாளர்களின் தொந்தரவும் கலந்து கலகலத்தது கல்கத்தா.மேல்பாக்கெட்டில் பணமோ செல்போனோ வைக்காமல் போனால் கல்கத்தா காளியை தரிசிக்கலாம் என்றார்கள். தட்சிணேஸ்வரத்தில் பரமஹம்ஸர் கும்பிட்ட காளியைப் பார்த்த நிறைவில் அங்கு செல்லவில்லை
மறுநாள் காலை சொன்ன நேரத்திற்கு வந்து சேர்ந்தார் அதே ஓட்டுநர். விக்டோரியா மஹாலுக்கு அழைத்துச் சென்றார். நம் தேசியத் தலைவர்களின் அபூர்வமான கறுப்பு வெள்ளைப்படங்களையும் ஒவியங்களையும் தவிர    பெரிதாக ஒன்றுமில்லை.கட்டிடம்தான் பிரம்மாண்டம்.ஒட்டுநரின் பெயரை அப்போதுதான் கேட்டுக் கொண்டேன்.  டி.பண்டிட் என்று கனகம்பீரமாய் உச்சரித்தார்..மதியம் காசிக்கு ரயிலில் கிளம்ப வேண்டும். ரயில் நிலையத்தில் எங்கள் பெட்டிக்குப் பக்கத்திலேயே காரைக் கொண்டு வந்து நிறுத்தும்படி வாய்த்தது பண்டிட்டிற்கு.
அவர் கணக்கைத்தீர்த்துவிட்டு,காரிலேயே பெட்டிகளை வைத்துவிட்டு மதிய உணவை முடித்துக் கொண்டோம் .வெய்யிலின் வீச்சு தங்காமல் எங்கள் குளிர்பதனப் பெட்டிகளைத் தேடி பெட்டிகளுடன் விரைந்தோம்.ஏறப்போன எங்களைத் தடுத்தர் பண்டிட். டிப்ஸ் தான்கொடுத்து விட்டோமே என்று குழப்பமாகப் பார்த்த போது,பைஜாமா பாக்கெட்டில் கைவிட்டார். வெளியே எடுத்தவையோ வேலைப்பாடுகளுடன் அமைந்த செயற்கைப்பூக்கள்.கூடவே,திரவியங்களில் நனைக்கப்பட்ட டிஷ்யூ பேப்பர்.முகம் முழுக்க நெகிழ்வும் சிரிப்புமாய் ஆளுக்கொன்றைத் தந்துவிட்டு கண்களில் வெளிச்சம் மின்ன கைகுலுக்கி விடைபெற்றார் பண்டிட்ஜீ!!அதுவரை எங்களை அமர வைத்துக் கார் ஒட்டிய பண்டிட், எங்கள் உள்ளங்களில் வசதியாய்ச் சாய்ந்து உட்கார்ந்து கொள்ள ,குலுங்கிக் கிளம்பியது ரயில்…….காசி நோக்கி!
(தொடரும்)
0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *