முனைவர் த ராஜாராம்

 

 

 

 

 

 

மடி நிறைய தானியங்களுடன், விதைக்கும் விருப்பமுடன் கழனிக்கு வருபவர்கள் தான் எல்லோரும் .

 

அவர்கள் விரும்பிய விதமாய் விதை விதைத்து எண்ணம் போலவே பயிர் வளர்த்து விதமாய் மகசூல் காண்பவர்கள் எத்தனை பேர்? மேற்கொண்ட பணியை மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் செய்து முடித்தோம் என்னும் நிறைவு கொண்டவர்கள்  எத்தனை பேர்? இந்தக் கேள்விகளுடன்தான் கலைஞர்களும் இலக்கியவாதிகளும் தரும் பங்களிப்பை நாம் எடைபோட வேண்டியிருக்கிறது.

 

உயர்ந்த ரசனையும் தரமான வாசிப்பும் தார்மீக பொறுப்பும் ஒருங்கே வாய்ந்த பேச்சாளர்கள் தாங்கள் மனநிறைவு கொள்ளும் விதமாக மேடைகளை கையாண்டு வருகிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் முனைவர் ராஜாராம். நாகர்கோவில் காரர். எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர். நல்ல இசை கேட்டால் உருக்கமான ஒரு சம்பவத்தை செவிமடுத்தால் இருக்கும் இடம் பற்றிய பிரக்ஞை இல்லாமல் உடைந்து விசும்பி கண்ணீர் விடுகின்ற அளவு நெகிழ்வான மனம் கொண்டவர்.

 

அவருடைய பெரும்பாலான முன்னிரவுகள், வெகுமக்கள் விரும்பும் தலைப்புகளிலான பட்டிமன்ற மேடைகளிலேயே செலவாகிவிட்டன. அவர் வாசித்து கொள்முதல் செய்த அளவிற்கு விநியோகம் செய்வதற்கான வாசல்கள் திறந்திருந்தனவா என்பதில் எனக்குக் கேள்விகள் உண்டு. ஆனால் தான் விநியோகிக்கும் எதுவும் தரமானதாகவே இருக்க வேண்டும் என்பதில் தீராத பிடிவாதம் கொண்டவர் அவர். அந்த வகையில் தனித்தன்மை கொண்டவர்தான் .

 

வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற ராஜாராம் அவர்கள் தொடர்ந்து தமிழ் அறிஞர்களுடைய அரவணைப்பிலேயே உலா வந்தவர். குறிப்பாக பெரும்புலவர் பா.நமசிவாயம் அவர்களின் அணுக்கராகவே தன்னை வரித்துக் கொண்டவர். பன்னெடுங்காலம் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் அணியில் பேச்சாளராக இடம்பெற்றவர். தகுதி மிக்க அறிஞர்கள் எவராயினும் அவர்தம் தலைமையில் உரையாற்றவும் உடன் இருக்கவும் பெரும் விழைவு கொண்டிருக்கும் ராஜாராம், அவர்கள் நவீன இலக்கியத்திலும் நல்ல வாசிப்பு கொண்டவர் .

 

கல்யாண்ஜி, நாஞ்சில்நாடன், கலாப்ரியா, ஜெயமோகன் போன்ற சமகால படைப்பாளர்களை ஆர்வமுடன் கற்பது அவருடைய பழக்கங்களில் ஒன்று. ஒரு பேச்சாளராக, மிகவும் எளிய மனிதராக, அமைப்பாளர்கள் வட்டத்தில் அறியப் படுபவர். தன்னுடைய மெல்லிய இயல்புகளாலும் மேடை ஆளுமையாலும் நூற்றுக்கணக்கானவர்கள் நட்பையும் நன்மதிப்பையும் பெற்றிருக்கும் ராஜாராம் அவர்களுக்கு திருச்சி நகைச்சுவை மன்றம் பாராட்டுவிழா நடத்தி, ‘தேசிய தமிழ்மாமணி’ என்னும் விருது தருகிற நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருக்கிறது. மனசாட்சியின் குரலை கேட்பதாலேயே பல நிகழ்வுகளுக்கு மௌன சாட்சியாக மட்டும் இருக்கும் சூழல் அவருக்கு வாய்த்திருக்கிறது. அப்படி மௌனசாட்சியாக இருப்பதற்கும் ஒரு பக்குவம் வேண்டும்.   என்னால் அவரை புரிந்து கொள்ள முடிகிறது.

 

வாழ்வின் மீதும் வாசிப்பின் மீதும் வந்து போகிற மனிதர்கள் மீதும் தீரா வியப்பு கொண்டவர் திரு.த. ராஜாராம். வாழ்வை வியப்போடு காண்பது ஒரு ரசிகனுக்கு பலம். அந்த வியப்பிலிருந்து மீண்டு தன் அவதானிப்பை வெளிப்படுத்துவது ஒரு பேச்சாளனின் பலம்.  தன் தீரா வியப்புகளைத் தாண்டிவர முயலும்போதெல்லாம் தன்னிடம்தானே தோற்கும்  அளவு ரசனையிலும் மெல்லுணர்வுகளிலும் தோய்ந்தவர் திரு.த.ராஜாராம்.

 

 

பேச்சுலகில் நான் அண்ணன் என்று உறவும் உரிமையும் பற்றி அழைக்கும் வெகுசிலரில் அவரும் ஒருவர்.

 

இந்த இனிய வேளையில் அவருக்கென் வாழ்த்துகள்!

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *