IMG_20160216_172458தன்னுடைய தலைமையில் ஓர் இயக்கமே உருவான பிறகு கூட சின்னஞ்சிறிய இல்லமொன்றில் அச்சுக் கோர்த்துக் கொண்டிருந்த ஒரு தலைவரைக் காண ஒரு தொண்டர் கோவையிலிருந்து செல்கிறார். தனக்கு நன்கு அறிமுகமான அந்தத் தொண்டரை,உள்ளே அழைத்து அமரவைத்துப் பேசுகிறார்.

அந்தத் தலைவர்,ம.பொ.சி.கோவையில் கழகப் பணிகள் எப்படி நடக்கின்றன என்று கேட்கிறார். “குடந்தை பாலுவைஅழைத்து ரெண்டு கூட்டம் நடத்துனோங்கையா,ரெண்டு கிளைகளும் தொடங்கினோம்” என்கிறார் தொண்டர்.

அடுத்து ம.பொ.சி. கேட்கிறார்,”ஆமாம்,புவியரசு எப்படியிருக்கிறார்?” வந்த தொண்டர் அதிர்ச்சியுடன் “அய்யா” என்றதும்,ம.பொ.சி. அதிர்ச்சியாகி, ” என்னாச்சு அவருக்கு” என்றார். தொண்டர் அவரிடம்” அய்யா! நாந்தாங்க புவியரசு!” என்றார். அடுத்த சில விநாடிகள் மௌனமாக இருந்து,அதிர்ந்து சிரித்த ம.பொ.சி. தான் பெயரையும் ஆளையும் பொருத்தி அறிந்திராமையில் அவருக்கு வருத்தமா என விசாரித்தறிந்து கொண்டார்.

இந்த சம்பவத்தோடு தொடங்குகிறது, கவிஞர் புவியரசு,ம.பொ.சி. பற்றி எழுதியுள்ள புத்தகம்.

” சில உண்மைகளைச் சொல்லக் கூச்சமாக இருக்கிறது.அவர் இன்று இல்லையென்பதால் சொல்லத் துணிகிறேன்.அவரது வறுமை,நாடறிந்த உண்மை.ஆனால் எதையுமே கொடுக்கவும் முடியாது.
கழகத் தோழர்கள் ஏதாவது கொண்டு வந்தால் அவர் கண்களில் படாமல் உள்ளே இரகசியமாக ஓரிடத்தில் வைத்து விடுவார்கள்.
பார்வையாலே பற்றி எரியச் செய்யும் பட்டினிச் சித்தர் அவர்”

இந்த வரிகள் ம.பொ.சி. வாழ்வு குறித்த முழுமையான சித்திரத்தை தீட்டிக் காட்டுகின்றன.

சுவாரசிய சம்பவங்களால் இந்நூல் நிரம்பி வழிகிறது. அரசியல் வாழ்வில் சில அவசிய முடிவுகளை அவர் ஏனெடுத்தார் என்பதையும் ஒரு வாசகன் யூகிக்கும் விதமாக சில சம்பவங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.ஒரு தலைவர் தன் தொண்டர்களிடம் எவ்விதப் பூடகமுமின்றி எப்படி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் என்பதற்கு மேற்குறித்த உரையாடலின் தொடர்ச்சியே சாட்சி. கோவையில் தமிழரசுக் கழகத்தை முன்னெடுத்துச் செல்பவர்கள் பற்றிக் கேட்கிறார் ம.பொ.சி.

அவர்களில்,தன்னை உட்பட பத்துக்கும் அதிகமானவர்கள் தெலுங்கர்கள்,இரண்டு மூன்று பேர்களே தமிழர்கள் என்கிறார் புவியரசு.

“ஏம்ப்பா! தமிழக் காப்பாத்த தமிழாளே அங்கே இல்லையா?-இது ம.பொ.சி.
‘தேவையில்லீங்கய்யா! நாங்களே பாத்துக்குவம்”-இது புவியரசு.

” நல்ல வேடிக்கைப்பா-இதுபத்தி நான் ஒரு முடிவெடுக்கணும்”-இது ம.பொ.சி.

எவ்வளவு அற்புதமான தலைவர்-தொண்டர் உறவு!!

கட்சியில் ம.பொ.சிக்கு ஏற்பட்ட பின்னடைவுகளின் காரணங்கள், அரசியலில் ஏற்பட்ட நிலைமாற்றங்கள் உட்படபல அம்சங்கள் இந்நூலில் பேசப்பட்டுள்ளன.

விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூலின் விலை ரூ.90/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *