நமது வீட்டின் முகவரி – 12

“நண்பர்களோடு சேர்ந்து கெட்டுப்போய்விட்டேன்” – இது வாலிபர்கள் பலர் வழங்கும் வாக்குமூலம். பொதுவாகப் பார்த்தால் வாழ்வில் நன்மையோ, தீமையோ நம் மூலமாக மட்டும்தான் வரும். “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்று கணித்துச் சொல்கிறார் கணியன் பூங்குன்றன்.

வெற்றிகளெல்லாம் நம் மூலமாக வந்ததாகவும், தோல்விகளெல்லாம் பிறர் தந்ததாகவும் கருதிக் கொள்கிறோம். நாம் இத்தகைய மனப்பான்மையில் நம் சுட்டுவிரல் முதல் முதலில் நீள்வதென்னவோ நண்பர்களை நோக்கித்தான்!

நண்பர்களால் கெட்டவர்கள் இரண்டு வகை. சில தீய பழக்கங்களைப் பழகிக்கொண்டு, பழக்கிவிட்டவர் மீண்டாலும் தான் மீண்டுவராமல், தொலைதூரம் போய் நின்று பிறகு புலம்புகிறவர்கள் முதல் வகை. நண்பர்களுக்கு அளவுக்கதிகமாக இடம் கொடுத்துவிட்டு, அவர்கள் பயனை அனுபவித்துப் பிரிந்தபின்னே துரோகிகள் என்று தூற்றுபவர்கள் இரண்டாம் வகை.

பொதுவாகவே, நமது பலவீனங்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதென்பது இயல்பு. அதனை அங்கீகரித்து, ஆதரித்து, அந்தப் பலவீனங்கள் நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வளர யாராவது துணை போவார்கள் என்றால், அவர்கள் நண்பர்களல்லர். நமது பலவீனங்களைக் கொழுந்து விட்டெரியச் செய்து அதில் குளிர்காய நினைப்பவர்கள்.

மாறாக, அந்தப் பலவீனங்களிலிருந்து நம்மை விடுவிக்க நினைப்பவர்கள், நம்மை வாழ்விக்க நினைப்பவர்கள், இவர்கள்தான் நண்பர்கள். எனவே, யாரையோ நண்பர்கள் என்று தவறாகக் கருதிக் கொண்டு அவர்களால் கெட்டுப் போய்விட்டதாக அறிக்கை விடுவது நமது தவறே தவிர, நண்பர்கள் தவறல்ல. இவர்களை நண்பர்கள் என்று சொல்வதன்மூலம், நமக்கிருக்கும் உண்மையான நண்பர்களையும் சேர்த்து அவமானப் படுத்துகிறோம்.

எல்லாருக்குமே “தான்” என்கிற பாதுகாப்புணர்வு அதிகம். உற்ற நண்பர்களுக்கும் இது பொருந்தும். நமது நிர்வாகத்தில், வணிகத்தில் அல்லது வாழ்க்கையில் நண்பர்களுககு அளவுக்கதிகமான இடம் கொடுத்தோம் என்றால், ஏதாவதொரு கட்டத்தில் யாராவது ஒருவர் தவறு செய்ய முற்படலாம். அது அவராகச் செய்த தவறல்ல. நாமாகத் தருகிற வாய்ப்பு. என்னை ஏமாற்று என்று நாம் விடுக்கும் மறைமுக அழைப்பு.

சரியான எல்லைக்குள் நட்பு, சரியான அளவு உறவுகள், உரிமைகள், சரியானவர்களை நட்புக்கு தேர்ந்தெடுதுதல், அவர்கள் சரியாக இல்லையென்று தெரிந்தால் அங்கேயே அவர்களை அகற்றிவிட்டு, நம் வழியில் சோர்வில்லாமல் பயணம் தொடருதல் – இவையெல்லாம் நட்பை பசுமையானதாக, பரிவு நிறைந்ததாக, வாழ்க்கை முழுவதும் உடன் வரக்கூடியதாக வைத்திருக்கும்.

நட்பு என்பது நம் பாதுகாப்புக்காக வைத்திருக்கும் கத்தி. வாழ்க்கையில் நமக்குத் துணை புரிய வேண்டிய கருவி. தவறாகக் கையாண்டால் நம்மைக் காயப்படுத்தும். மீண்டும் சொல்கிறேன். அது கத்தியின் குறையல்ல; கையாள்பவர்கள் குறை.

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *