நமது வீட்டின் முகவரி – 2

குழந்தை பிறந்துவிட்டது. நல்வாழ்த்துகள்! உங்கள் மகனோ, மகளோ, எதிர்கால டாக்டர் – என்ஜினியர் – என்று விதம்விதமாய்க் கனவுகளை வளர்த்துக் கொண்டிருப்பீர்கள்.

அது உங்கள் கனவில் மட்டும் சாத்தியமாகிற விஷயமில்லை. உங்கள் குழந்தை வளர்ந்த பிறகு, அதன் விருப்பம், கனவு ஆகியவற்றையும் சார்ந்தது. ஆனால் ஒன்று உங்கள் குழந்தை எந்தத் துறையைத் தேர்வு செய்தாலும் சரி, அதில் சிகரம் எட்டும் விதமாக உருவாக்குவது, உங்கள் கைகளில் இருக்கிறது.

ஒரு சாதாரணப் பணியைக் கூட சாதனைக்குரிய வாகனமாக ஆக்கிக் கொள்ளும் ஆற்றலை உங்கள் குழந்தைக்குக் கொடுங்கள். சத்தியம், சவால்களுக்கு அஞ்சாத சாமர்த்தியம், மனித நேயம், நம்பிக்கை ஆகிய பண்புகளைப் பிள்ளைகள் மனதில் பதியன் போட்டு விட்டால் போதும். அவை உரிய நேரத்தில் பூக்கவும், காய்க்கவும், கனியவும் செய்யும்.

குழந்தைகள் ஒவ்வொன்றுமே ஒவ்வொருவிதமான தனித்தன்மையோடும், தனித்திறமையோடும்தான் பிறக்கின்றன. உங்கள் மனதில் உருவான கனவுகளை உங்கள் குழந்தையின்மீது திணிக்க முயலாதீர்கள். மாறாக, உங்கள் குழந்தைக்குள் நிறைந்திருக்கும் திறமை என்ன என்று கண்டறியுங்கள். உங்களைப் பொறுத்தவரை, உங்கள் குழந்தை ஒரு மருத்துவராக வேண்டும். ஆனால், உங்கள் குழந்தையின் விருப்பமோ இசையில் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். உடனே அதன் இசைச் சிறகுகளைக் கத்திரித்து மருத்துவராக மாற்றத்தான் எண்ணம் வரும்.

ஏனென்றால், நம்மைப் பொறுத்தவரை, இசை போன்ற நுண்கலைகள் வாழ்க்கைக்கு உதவாது. உண்மையில், உரிய ஊக்கமும் பயிற்சியும் இருந்தால், மற்ற துறைகளில் பத்தாண்டுகளில் முயன்றாலும் பெற முடியாத வருமானம், இசைத் துறையில் ஓராண்டிலேயே கிடைக்கும்.

இடதுகை பழக்கமுள்ள குழந்தைகளை வலது கையில் எழுத வைக்க முயலும் பெற்றோரிடம் சில மருத்துவர்கள் சொல்வதுண்டு. “இதன் மூலம் உங்கள் குழந்தையின் இயல்பான திறமை பாதிக்கப்படும். எனவே மாற்ற முயலாதீர்கள்” என்று.

இது, இடதுகை பழக்கத்திற்கு மட்டுமல்ல. தேர்ந்தெடுக்கும் துறைக்கும் பொருந்தும். அதேபோல் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும்போது, சுயமான திறமையை நாமே மழுங்கடிக்கிறோம். மற்றவர்களோடு அடிக்கடி ஒப்பிடப்படும் குழந்தை, சின்னச் சின்ன விஷயங்களைக்கூட மற்றவர்களைப் பார்த்தே செய்ய வேண்டிய பழக்கத்திற்கு ஆளாகிறது.

தாழ்வு மனப்பான்மை வளர்வதும், எதிலும் பிறர் என்ன நினைப்பார்களோ என்ற தடுமாற்றங்கள் பெருகுவதும் இத்தகைய குழந்தைகளிடம்தான்.

எனவே, கூடுமானவரை குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தும்போது பெருமையாக நான்கு வார்த்தைகள் சொல்லுங்கள்.

கனிவு கலந்த கண்டிப்பைக் காட்டுங்கள். பரிவுக்கு ஆட்படட்டும் பிள்ளைகள். பயத்திற்கல்ல. அன்புக்கும் ஒழுக்கத்துக்கும் கட்டுப்படட்டும். ஒடுக்குமுறைக்கும் அதிகாரத்திற்கும் அல்ல.

சிறிய வயதில் தன்னைப் பற்றிய நம்பிக்கை உணர்வு உங்கள் குழந்தைக்கு ஏற்பட்டுவிட்டால், வாழ்க்கை முழுவதும் வெற்றிதான்.

விரல்பிடித்து அழைத்துச் செல்லுங்கள். அதீத அக்கறையால் அது விரும்பாத திசைக்கு அழைத்துச் செல்லாதீர்கள்.

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *