“உள்ளுணர்வின் குரல்” . இந்தக் குரல் எந்த மூலையிலிருந்து எழும்? இந்தக் கேள்விக்குப் பதில், “மூளை”யிலிருந்து எழும் என்பதுதான். மனித மூளை இடது வலதாக தனித்தனியே செயல்படுகிறது. இடதுசாரி, வலதுசாரி இரண்டின் ஆதரவும் இருந்தால்தான் மனிதனின் “மேல் சபையில்” நிலையான ஆட்சி நடக்கும்.

இடதுமூளை தர்க்கரீதியான விஷயங்கள் தொடங்கி, பிசிறில்லாமல் ஒரு கடிதத்தை அழகான ஆங்கிலத்தில் “டிக்டேட்” செய்வதெல்லாம் இடதுபக்க மூளையின் இலாகா.

ஆனால் வலது மூளை வித்தியாசமானது. உள்ளுணர்வு “பளிச்”சிடும் சமயோசிதம். புதுமையான கண்ணோட்டங்கள், கவிதை, இசை, நாட்டியம் போன்ற திறமைகள், “கலகல”வெனச் சிரிக்கும் இயல்பு, முக்கிய முடிவுகள் எடுத்தல் இதற்கெல்லாம் வலதுபக்க மூளையே ஆதாரம்.

மூளையின் இந்த இடவல பாகங்கள் சமநிலையில் செயல்படும்போதுதான் எந்தச் செயலிலும் வெற்றி பிறக்கிறது.

முக்கியச் சிக்கல்கள் மத்தியில் ‘பளீ’ரென்று ஒரு தீர்வு உங்களுக்குள் தோன்றுகிறதா? அப்படியானால் உங்கள் மூளையின் வலப்பக்கம் நன்கு செயல்படுகிறது என்று அர்த்தம். மூளை தானாக ஒரு தீர்வை எடுத்துவைத்து உங்களுக்குத் தருவதில்லை. ஒரு விஷயம் பற்றி உங்கள் மூளையில் பதிந்திருக்கும் எல்லாத் தகவல்களையும் ஒன்றிணைத்து, ஆராய்ந்து, உருப்படியான தீர்வை உங்களுக்குத் தருகிறது.

உள்ளுணர்வின் குரலை நீங்கள் மதித்து, நம்பி, அதற்கு செவிமடுக்கத் தொடங்கிவிட்டீர்கள் என்றால், அது இன்னும் துல்லியமாக உங்களுக்கு ஒலிக்கத் தொடங்கும். மிகச் சரியான தீர்வுகளைத் தரத் தொடங்கும்.

ஊருலகத்தில் யாரை நம்புகிறீர்களோ இல்லையோ உள்ளுணர்வின் குரலை முழுமையாக நம்புங்கள். அது உங்களுக்கு சரியாகவே வழிகாட்டும். அந்தக் குரலை அலட்சியம் செய்தால் பின்னர் வருந்த வேண்டி வரும்.

உள்ளுணர்வை சரியாகப் பயன்படுத்தி அதன் வழிகாட்டுதலைப் பெற்று வெற்றியடையவேண்டுமா? அதற்கு நான்கே நான்கு எளிய மனப்பயிற்சிகள் போதும்.

முதல் பயிற்சி: முழுமையான நம்பிக்கை. உங்கள் உள்மனத்தின் வழிகாட்டுதலை எந்த எதிர்ப்புமில்லாமல் முழுமையாகப் பின்தொடர்ந்தாலே போதும். இந்த நம்பிக்கையை நாளுக்குநாள் வலுப்படுத்திக்கொண்டே வரவேண்டும்.

இரண்டாவது மனப்பயிற்சி: நேர்மறையான எண்ணங்கள். மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை போன்றவற்றுக்கு விடுதலை கொடுத்து, உற்சாகமான உணர்வுகளையே உள்ளுக்குள் ஊக்குவித்துக் கொண்டிருங்கள். நேர்மறையான எண்ணங்களெல்லாம் உள்ளுணர்வுக்கு உறவினர்கள்போல.

மூன்றாவது மனப்பயிற்சி: நம்பிக்கை மிகுந்த எதிர்பார்ப்புகள். உங்கள் ஒவ்வொரு செயலுக்கும் வரப்போகும் வெற்றிகளை முழுநம்பிக்கையுடன் எதிர்பாருங்கள். பிரச்சினைகள் வரும்போது பதற்றமில்லாமல், அதிலிருந்து என்ன பாடத்தை எடுத்துக்கொள்வது என்று பாருங்கள். உங்கள் சூழ்நிலையில் உங்களுக்குச் சாதகமான அம்சங்களிலேயே அதிகக் கவனம் செலுத்தும்போது இந்த மூன்றாவது மனப்பயிற்சி மிகவும் எளிதாகிவிடுகிறது.

நான்காவது மனப்பயிற்சி: உள்ளுணர்வின் குரலைக் கேட்பது. இதில் ஆண்களைவிடவும் பெண்களுக்கு அதிக ஆற்றல் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். வாலியை விடவும் பல மடங்கு பலவீனமானவன் சுக்ரீவன். அவன் ஆவேசமாய் வாலியை சண்டைக்கழைத்தபோது, வாலி சீறியெழுந்தான். அவன் மனைவி தாரைதான் தடுத்தாள். அவள் உள்ளுணர்வின் குரலைக்கேட்டு நடக்காமல் அலட்சியப்படுத்திய வாலி மரணமடைந்தான்.

உங்கள் உள்ளுணர்விடமிருந்து சரியான பதில்கள் வரவேண்டுமென்றால், நீங்கள் செய்ய வேண்டிய இன்னொரு விஷயம் உண்டு. உங்கள் சிக்கல் என்ன? எதிலிருந்து விடுபட விரும்புகிறீர்கள்? எதை எட்ட விரும்புகிறீர்கள்? என்பதையெல்லாம் மிகத்தெளிவாக உங்கள் மனதுக்குச் சொல்லுங்கள்.

பழங்காலத்தில் இதைத்தான் “பிரார்த்தனை” என்ற பெயரில் நம் கோவில்களில் செய்தார்கள். “கேளுங்கள் கொடுக்கப்படும்” என்று இயேசுநாதர் இதைத்தான் சொன்னார். இப்படி ஆழமாகவும் உண்மையாகவும் கேட்கும் போது உங்கள் உள்மனம் உங்களை வழிநடத்தும். எதிர்பாராத இடங்களில் தீர்வுகள் தென்படும்.

சுவிட்சர்லாந்தில் இரண்டு விஞ்ஞானிகள் ஐபிஎம் ஆய்வுக்கூடத்தில் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தார்கள். ‘சூப்பர் கன்டக்டிவிடி’ பற்றி அந்த ஆய்வில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் முன்னேற முடியவில்லை. மதிய உணவு இடைவேளையின்போது அவர்களில் ஒரு விஞ்ஞானி, உள்ளுணர்வின் உந்துதலால் நூலகம் சென்றார். செராமிக்ஸ் பற்றிய பிரெஞ்சு இதழ் ஒன்றை யதேச்சையாக எடுத்துப்புரட்டினார். அவர்கள் தேடிக்கொண்டிருந்த விஷயத்துக்கான விடை அந்தப் பக்கங்களில் இருந்தது. அந்த வழிகாட்டுதலைப் பயன்படுத்தினர். இந்த விஞ்ஞானிகளுக்கு இயற்பிலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *