மாற்றம் ஒன்றே முன்னேற்றம்!
அந்த முதல் குரங்கு மட்டும் மனிதனாய் மாற மறுத்திருந்தால், இத்தனை முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்குமா என்ன?

பழைய அணுகுமுறைகளையும், நம்பிக்கைகளையும் குரங்குப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேளுங்கள். அப்புறம் அவர்களுக்குச் சொல்லுங்கள்…

மாற்றம் ஒன்றே முன்னேற்றம்!
புறாக்களில் கட்டி அனுப்பிய கடிதம் ஃபேக்ஸில் பறப்பது முதல், கல்லில் எழுதிய மனிதன் கணிப்பொறியில் எழுதுவது வரை, எல்லா முன்னேற்றங்களுமே முதல் மாற்றத்தை அனுமதித்ததால்தான் ஆரம்பமானது.

இன்று வந்திருக்கும் நவீன கருவிகள் எல்லாம் அதிசய மாற்றத்தைக் கொண்டு வந்திருப்பதாய்ச் சொல்கிறோமே, அப்படி அவற்றில் என்னதான் இருக்கிறது? சுருங்கச் சொல்லிவிடலாம்.

1. எளிமை 2. வேகம் 3. வசதி
உங்கள் வாழ்விலும் சரி, தொழிலிலும் சரி, இந்த மூன்று அம்சங்களைக் கொண்டு வரக் கூடிய எந்த மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனென்றால் அவற்றின் மூலமாக முன்னேற்றம் நிச்சயம்.

மாற்றங்களை யார் எதிர்ப்பார்கள்?
வாழ்வின் யதார்த்தங்களை எதிர்கொள்ள மறுப்பவர்களும், வெற்றிக்கான விலையைக் கொடுக்கத் தயங்குபவர்களும், தங்கள்மேல் நம்பிக்கை இல்லாதவர்களும் மாற்றங்களை எதிர்ப்பார்கள்.
பஞ்சாயத்துத் தலைவர் பதவியிலேயே இருந்து பழகியவர், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தயங்குவார். பஞ்சாயத்தைவிடவும் பாராளுமன்றம் பெரிது என்பது அவருக்குப் புரியாது. ஒன்றைப் புதிதாய் முயன்று பார்க்கப் பெரும்பாலானவர்களால் முடியாது.

கூட்டுப்புழுவாய் இருப்பதே குதூகலம் என்று நின்றுவிட்டால், வண்ணத்துப்பூச்சியாய் சிறகு விரிப்பது சாத்தியமில்லை. பரிணாமத்தின் அவஸ்தைகளுக்குப் பயந்தால் வானம் அளந்து பறந்துவர வாய்ப்பில்லை.

யாரெல்லாம் மாற்றங்களை ஏற்பார்கள்?
திறந்த மனம், காலத்தின் போக்கை ஏற்கிற பக்குவம், வளர வேண்டுமென்ற ஆர்வம் இவையெல்லாம் மாற்றங்களை ஏற்பவர்களின் மனப்பான்மைகள். பல முதிர்ந்த அரசியல் தலைவர்கள் கடந்த சில ஆண்டுகளாகக் கம்ப்யூட்டர் பயிலத் தொடங்கியிருக்கிறார்கள். இது ஓர் உதாரணம்.

வணிகத்தில் போட்டி அதிகரிக்கும்போது எத்தனையோ மாற்றங்களை ஏற்க வேண்டியிருக்கும். கிரெடிட் கார்டுகளை ஏற்பது என்கிற சிறிய மாற்றத்திற்குக்கூடத் தயாரில்லாமல் சில நிறுவனங்கள் சிரமப்படுகின்றன.

வாடிக்கையாளர்களுக்கேற்ப மாறுதல்கள்!
வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன தேவையோ அதற்கேற்ப நிறுவனம் மாற வேண்டும். துவரம்பருப்பு இருக்கிறதா என்று கேட்டால், கடலைப்பருப்பு இருக்கிறது என்று சொல்வதெல்லாம் மறைந்துபோன மளிகைக் கலாச்சாரம்.

எல்லாமே இப்போது வாடிக்கையாளர்கள் வாசலில் இறங்குகிற காலத்தில் இருக்கிறோம். உங்கள் வாடிக்கையாளரைக் கொத்திக்கொண்டு போக சில வணிகர்கள் காத்திருக்கிறார்கள். எனவே நிர்வாகத்திலும், வணிக அணுகுமுறையிலும் தேவையான மாற்றங்களை ஏற்படுத்துங்கள்.

புகார்கள் வருகின்றனவா? சந்தோஷப்படுங்கள்!
பல ஆரோக்கியமான மாற்றங்களின் ஆரம்பப்புள்ளியே வாடிக்கையாளர்களின் புகார்கள்தான். உங்கள் மேல் அக்கறையுள்ள வாடிக்கையாளர்கள் மட்டும்தான் உங்களிடம் புகார்களைக் கொண்டுவருவார்கள். மற்றவர்கள், உங்களிடம் குறை கண்டால் உங்களிடம் வருவதை நிறுத்திவிடுவார்கள். எனவே புகார்களைக் காதுகொடுத்துக் கேளுங்கள். புகாரின் அடிப்படையில் நீங்கள் செய்திருக்கும் மாற்றங்களைக் கடிதம் வழியாகவோ தொலைபேசி மூலமாகவோ தெரிவியுங்கள்.

அலுவலர்களுக்கு அதிகாரம் கொடுங்கள்
வாடிக்கையாளர் மனநிறைவே முக்கியம் என்பதை உங்கள் ஊழியர்களுக்குத் தெளிவுபடுத்துங்கள். புகார்களை மென்மையாகக் கையாண்டு, வாடிக்கையாளர் மன நிறைவுக்கேற்ற மாற்றங்களைச் செய்ய அலுவலர்களுக்கு அதிகாரம் கொடுங்கள்.

மாற்றங்களின் ஆரம்பமே முன்னேற்றத்தின் ஆரம்பம்
இதுதான் ஆதிகாலம் தொட்டே மனிதகுலத்தின் வாழ்க்கை முறையாக இருந்திருக்கிறது. மாற்றங்களை ஓர் அந்நியமான வாழ்க்கை முறையின் அறிமுகம் என்று கருதுபவர்கள் ஜெயித்ததில்லை. தங்கள் வாழ்க்கை முறையின் அடுத்தகட்ட படிநிலை என்று அடையாளம் கண்டுகொண்டவர்களே வெல்கிறார்கள்.
எனவே உங்கள் இப்போதைய நிலையை மூன்றாகப் பிரித்துக் கொள்ளுங்கள்.

தனிமனித நிலை,
தொழில்,
சமூகத் தொடர்புகள்
மூன்றிலும் எந்த நிலையில் இருக்கிறீர்கள் – என்னென்ன மாற்றங்கள் தேவை என்பதைப் பட்டியலிடுங்கள். மாறத் தொடங்குங்கள். அதாவது முன்னேறத் தொடங்குங்கள்!

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *