வெற்றியை அளந்தால் விபரம் புரியும்! – 2

வெற்றியின் இன்னோர் அளவுகோல் வெற்றிகளைத் தொடர்கதையாக்குதல். ஒரு வெற்றி வந்த மாத்திரத்திலேயே, தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கிற வேகம் வரவேண்டும். முதல் வெற்றி வந்தபிறகு, அடுத்த கட்டமாக முயற்சிகள் செய்து, தோல்வி ஏற்பட்டால் என்ன செய்வது என்கிற அச்சம் ஏற்பட்டுவிடுமென்றால், சிலர் முயற்சிகளைத் தொடர மாட்டார்கள்.

வெற்றியை நிகழ்த்திக் காட்டிய யாருக்கும், அந்த வெற்றியை உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது. தொடர்ந்து வெற்றிகளை நிகழ்த்திக் காட்டிக்கொண்டே இருக்கிறபோதுதான் ஒருவர் வெற்றியாளர் என்கிற அங்கீகாரத்தைப் பெறுகிறார்.

வெற்றிக்கு இன்னுமோர் அளவுகோல், அந்த வெற்றியைப் பெற்ற வழி. உழைப்பு, திட்டமிடுதல், சமயோசிதம், துணிவு, முடிவெடுக்கும் ஆற்றல் ஆகிய அடித்தளங்கள்மீது கட்டப்படுகிற வெற்றியின் கட்டிடம்தான் உங்களுடைய வெற்றி என்று கொண்டாடத் தக்கது.

மற்றவர்கள் மூலம் கிடைக்கும் வெற்றி, யானை மாலை போட்டு ராஜா ஆன கதையாகத் தான் இருக்கும்.

வெற்றியின் மற்றோர் அளவுகோல் மேம்பாடு. முதல் வெற்றிக்குப் பிறகு உங்கள் உழைப்பின் தரம் மேம்பட்டிருக்கிறதா? உங்கள் தயாரிப்பின் தரம் மேம்பட்டிருக்கிறதா? உங்கள் நம்பிக்கையின் தரம் மேம்பட்டிருக்கிறதா? நீங்கள் பழகும் இயல்புகளில் மேம்பாடு தெரிகிறதா? என்றெல்லாம் இந்தச் சமூகம் கவனிக்கும்.

ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும், நீங்கள் விளையாடும் களம் மாறிக்கொண்டேயிருக்க வேண்டும். தொடங்கும்போது யாரைப் போட்டியாளர் என்று நீங்கள் கருதினீர்களோ அவரைத் தாண்டி வெகுதூரம் நீங்கள் வந்திருக்க வேண்டும். எட்டவே முடியாத உயரத்தில் இருக்கிறார் என்று யாரை நீங்கள் அண்ணாந்து பார்த்தீர்களோ, அவர் உங்கள் அடுத்த போட்டியாளராக இருக்க வேண்டும். அவரையும் வென்றுவிட்டு, “மளமள”வென்று அடுத்த கட்டம் நோக்கி நகர வேண்டும்.

வெற்றியை உறுதிப்படுத்தும் இன்னோர் உன்னதமான அளவுகோல் எது தெரியுமா? நீங்கள் பெற்ற வெற்றிகள் பற்றியும் அதற்குக் கையாண்ட வழிமுறைகள், தாண்டி வந்த தடைகள் பற்றியும் உங்களுக்கு ஒரு தெளிவு இருப்பதுதான். இந்த இடத்திற்கு எப்படி வந்தீர்கள் என்று யாராவது கேட்டால், துல்லியமாக சொல்லத் தெரியும் என்றால்தான் உங்கள் வெற்றி நீங்களே முயன்று பெற்றது என்பதை ஏற்பார்கள்.

உலகத்திற்காக வாழ வேண்டும் என்ற கேள்வியைப் புறந்தள்ளுங்கள் – மிக நிச்சயமாக உலகம் ஒவ்வொரு மனிதனையும் உன்னிப்பாக கவனிக்கிறது. உண்மையாக உழைத்து ஜெயிப்பவனை மற்றவர்களுக்கு சுட்டிகாட்டுகிறது. அவனைப் பற்றிய விஷயங்களை சேகரிக்கிறது. உங்கள் வெற்றியின் போக்கை நீங்களே அளந்து பாருங்கள்! மேலும் மேலும் வெற்றிகள் வசப்பட்டே தீரும்!!

– மரபின் மைந்தன் ம.முத்தையா

நினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து…

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *