15.10.2009 திருக்கடையூர்

அதே முகம்……அதேசுகம்…..
அன்று தொலைந்ததே அதே இதம்
நெஞ்சில் நிறைந்ததே அவள் பதம்

பிறவி பலவாகப் பார்த்த முகம் -என்
கனவில் பலநேரம் பூத்த முகம்
மறந்து கிடந்தாலும் தேடும் முகம்-ஒரு
மறுமை இல்லாமல் சாடும் முகம்

தீப ஒளியோடு தெரிந்த முகம் -என்
திசைகள் எல்லாமே அறிந்தமுகம்
நாபிக்கமலத்தில் எழுந்தமுகம் – என்
நாடி நரம்பெங்கும் நிறைந்த முகம்

அமிர்தலிங்கத்தில் லயித்த முகம்- அவன்
அருந்தும் நஞ்சோடித் தடுத்த கரம்
குமுத மலர்போலக் குளிர்ந்த முகம்-திருக்
கடவூர் தலம்காக்கக் கனிந்த முகம்

திறந்தும் திறவாத விழியழகும்-அருள்
துலங்கும் இதழோடும் நகையழகும்
நிறைந்த ஒளிபோன்ற நிறத்தழகும்-நின்று
நாளும் கதைபேசும் தேவிமுகம்

இருளில் நிலவொன்றை எழச்செய்தவள்- நான்
ஏந்தும் சுமையாவும் விழச்செய்தவள்
சுருளும் குழலாலே மழைசெய்தவள்-ஒரு
சுகத்தில் தினம்நானும் அழச் செய்தவள்

குருவின் திசைகாட்டிக் குளிர்வித்தவள்-என்
கனவு பலநூறும் மலர்வித்தவள்
கருவில் அன்றென்னை வருவித்தவள்- நான்
கேட்ட பொருள்யாவும் தருவித்தவள்

கோயில் வரும்போது கதிர்காட்டினாள்-உள்ளே
கிளம்பும் சுடர்தூண்டிக் கொடியேற்றினாள்
வாயில் வரும்முன்னர் வெளிகாட்டினாள்-என்
விழிகள் இமைமூட ஒளிகாட்டினாள்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *