புகழ்பூத்த வெற்றியாளர்கள் பலர் தங்கள் ஆசிரியர்களை எப்படியெல்லாம் கொண்டாடினார்கள் என்பதைக் கடந்த அத்தியாயத்தில் சிந்தித்தோம். வெற்றியின் ரேகையே விழாத வறுமைப் பிரதேசத்தில் வாழ்ந்தவர்களின் வாழ்விலும் ஆசிரியர்கள் வெற்றிப் பூக்களை மலர்த்தியமை குறித்து விரிவான சான்றுகள் எத்தனையோ உள்ளன.

மேன்மையான நிகழ்வுகள் மேலைநாடுகளில் அவ்வப்போது ஆவணப்படுத்தப்பட்டு விடுவதால் அங்கே நடக்கும் சின்னச் சின்ன சம்பவங்கள்கூட சரித்திரங்களாகிவிடுகின்றன. நம்மவர்களோ வதந்திக்குத் தரும் முக்கியத்துவத்தை வாழ்க்கைக்குத் தருவதில்லை. பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள்மேல் தாக்கத்தை ஏற்படுத்திய ஆசிரியர்கள் பற்றி அவரவர் அனுபவங்களை எண்பது பக்க நோட்டொன்றில் எழுதியிருந்தால்கூட அவற்றைத் தொகுத்திருந்தால் கல்வித்துறைக்கான கலைக்களஞ்சியம் கண் மலர்ந்திருக்கும்.

அமெரிக்காவில் அப்படியோர் ஆவணம். நகரின் ஒதுக்கப்பட்ட பகுதியில் மிகுந்த ஏழ்மை நிலையில் ஒரே மாதிரியான சூழலில் வளரும் 50 குழந்தைகளை இனம் கண்டது அமெரிக்காவின் தொண்டு நிறுவனம். இரண்டு ஆசிரியைகளைக் கண்டறிந்து ஒவ்வொருவரிடமும் 25 குழந்தைகளை ஒப்புவித்தது.

இரண்டு ஆசிரியைகளும் மாணவர்களைப் பயிற்றுவித்து ஆளாக்கினர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மாணவர்களின் தற்போதைய வாழ்க்கை நிலையைக் கண்டறிய அந்தத் தொண்டு நிறுவனம் முற்பட்டது. இரு தரப்பு மாணவர்களுமே வாழ்வில் முன்னேறியிருந்தனர். குறிப்பாக ஓர் ஆசிரியையிடம் பயின்ற மாணவர்கள் வியக்கத்தக்க நிலைமாற்றம், வளர்ச்சி, வெற்றி ஆகியன கண்டிருந்தனர். அவர்களிடம் கேட்ட போது தங்கள் வெற்றிக்குக் காரணம் தங்கள் ஆசிரியைதான் என ஒரே குரலில் உரக்கக் கூறினர்.

இப்போது கற்பித்தல் முறையின் சூட்சுமங்களை அவரிடம் கற்க அந்தத் தொண்டு நிறுவனம் தலைப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்னரே பணி ஓய்வு கண்டிருந்த அந்த ஆசிரியை, அமெரிக்காவின் மாநிலமொன்றில் ஒதுக்குப்புறமான பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்தார். அவரைக் கண்டறிந்து பேச கல்விக் குழுவொன்று அமைக்கப்பட்டது. அவர் பயன்படுத்தும் உத்திகளைப் பதிவு செய்து பெருமளவில் ஆசிரியர்களிடம் ஒரு பாடத்திட்டமாகக் கொண்டு சேர்க்க முடிவு செய்திருந்தனர்.

அந்த ஆசிரியை முன் இந்தக் குழுவினர் சென்றமர்ந்து அந்த மாணவர்கள் பற்றி நினைவுபடுத்தினர் குழுவினர். அந்த அம்மையாருக்கு அவர்களை நன்றாக நினைவிருந்தது. அந்த மாணவர்களை நெறிப்படுத்திய உத்திகளைக் கேட்டதும் அந்த அம்மையாருக்கு சொல்வதற்கென ஒரே ஒரு வரிதான் இருந்தது. “அந்தப் பிள்ளைகளை நான் பெரிதும் நேசித்தேன்” (I just loved those boys)  என்றார்.

ஆசிரியர்களைப் பொறுத்தவரை அன்பு என்பது உத்தியல்ல, தகுதி. நிபந்தனையற்ற அன்பின் நிகரற்ற வீச்சுகள் உத்திகள் அனைத்தையும் விட உயர்ந்தவை. ஒரு குழந்தை முரடாக இருந்தாலும் சாதுவாக இருந்தாலும் படபடப்பாய் இருந்தாலும் படிப்பில் கவனம் செலுத்தினாலும் அந்த இயல்பை உணர்ந்து அதனை வசப்படுத்தி நெறிப்படுத்தும் வித்தை அன்பான அணுகுமுறையில் உள்ளது. இன்று நமக்கு நினைவிருப்பவர்களெல்லாம் அறிவான ஆசிரியர்களைக் காட்டிலும் அன்பான ஆசிரியர்கள்தான்.

இதற்கொரு முக்கியமான காரணம் உண்டு. ஒரு மாணவன் தன் ஆரம்பப் பள்ளி ஆசிரியரை அறிவின் சிகரமாகக் காண்கிறான். அதுவரை வீட்டுக்குள் வரையறுக்கப்பட்ட சூழலில் வளர்ந்தவனுக்கு திடீரென தன் வயதுள்ள பலரின் மத்தியில் அமர்ந்து பயில்கிற வாய்ப்பு வருகிறது. தான் மதிக்கும் ஆசிரியரின் அரவணைப்பு தனக்கு உண்டா என்பதை அந்தப் பிஞ்சு மனம் எதிர்பார்க்கிறது.

அது கிடைப்பதை அறிந்ததும் அதற்காக தன்னை மாற்றிக் கொள்ளவும் புதிய அம்சங்களைக் கற்றுக் கொள்ளவும் தயாராகிறது அந்தக் குழந்தை. கல்வி, ஒழுக்கம், அனைத்தையும் உள்வாங்க இந்த அடிப்படை பலமாக அமைவதே அவசியம்.

இதே அமெரிக்காவில் இன்னோர் ஆசிரியரின் அனுபவத்தை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் இணையத்தில் வாசித்தேன். அந்த ஆசிரியையின் பெயர் மார்கரெட். அவர் நான்காம் நிலை வகுப்பின் ஆசிரியை. அவர் வகுப்பில் பீட்டர் எனும் சிறுவனின் இயல்புகள் கவலையளிப்பதாக இருந்தன. வகுப்பில் கவனமின்றி இருப்பதும் சக மாணவர்களுடன் சண்டையிடுவதுமாக இருந்த இந்தப் போக்கு மார்கரெட்டுக்கு பிடிபடவில்லை. முடிந்தவரை சொல்லிப் பார்த்தார். பீட்டர் கேட்பதாயில்லை.

பீட்டரின் முந்தைய வகுப்பு ஆவணங்களைத் தேடிப்பார்த்தார் மார்கரெட். இரண்டாம் நிலையில் படிக்கையில் உருவான ஆவணத்தில் பீட்டர் மிக அருமையான பண்புகளும் கீழ்ப் படிதலும் உள்ள மாணவனென அந்த வகுப்பின் ஆசிரியை முதல் பருவத்தில் சான்றளித்திருந்தார். இரண்டாம் பருவத்தில் “பீட்டர் மிகவும் அருமையான குழந்தை. ஆனால் அவனுடைய தாயாரின் உடல்நலக்குறைவு அவன் மனநிலையை கொஞ்சம் பாதித்திருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

மூன்றாம் நிலை ஆசிரியை, “பீட்டர் மிகவும் அன்பான மாணவன். ஆனால் அவன் தாயாரின் மரணம் அவனை மிகவும் பாதித்திருக்கிறது” என்று முதல் பருவத்தில் குறிப்பிட்டிருந்தார். இரண்டாம் பருவத்திலோ, “பீட்டர் மிகவும் சோர்வாக காணப்படுகிறான். அவ்வப்போது முரட்டுத்தனம் தலை தூக்குகிறது. அவன் தந்தையின் இரண்டாம் திருமணம் அவனை தனிமைப்பட்டவனாக உணரச் செய்திருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒருவாறாக அந்த மாணவனின் சூழலை மார்கரெட் உணர்ந்தார். இதனை சரி செய்யும் விதங்கள் குறித்து யோசித்துக் கொண்டிருந்தார். அமெரிக்காவின் “நன்றி அறிவிப்பு தினம்” வந்தது. மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தங்கள் நன்றியறிதலை வெளிப்படுத்தும் விதமாக பரிசுப் பொருட்கள் தருவார்கள். பல்வகையான பரிசுப் பொட்டலங்கள் நடுவே பீட்டர் தயங்கித் தயங்கி தன் பரிசுப் பொட்டலத்தை வைத்தான். முதலில் அதை எடுத்துப் பிரித்தார் மார்கரெட். அதில் கற்கள் உடைந்த பிரேஸ்லெட் ஒன்றும் முன்னரே பயன்படுத்தப்பட்ட வாசனைத் திரவிய குடுவை ஒன்றும் இருந்தன.

மார்கரெட் முகமலர்ச்சியுடன் அந்த பிரேஸ்லெட்டை, “அருமையான டிஸைன்” என்று பாராட்டி உடனே வலக்கரத்தில் அணிந்து கொண்டார். வாசனைத் திரவியத்தை முகர்ந்து பார்த்தவர், “இதைத்தான் நான் தேடிக் கொண்டிருந்தேன். ரொம்ப நன்றி பீட்டர்” என்று உடனே தன் ஆடையில் பூசிக்கொண்டார். பின்னரே மற்ற பெட்டிகளைத் திறந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு பீட்டரின் முகம் மலர்வதைக் கண்டார்.

வகுப்பு முடிந்து மற்ற மாணவர்கள் வெளியேறும் வரை காத்திருந்த பீட்டர் தன் ஆசிரியை பக்கத்தில் வந்து, அவரை இறுக அணைத்து, “உங்களிடம் இன்று என் அம்மாவின் வாசம் வீசுகிறது” என்று சொல்லிவிட்டு வெளியேறினான். விஷயம் என்னவென்றால் அவனிட்ம் பரிசுகள் வாங்கப் பணமில்லை. அப்பாவிடம் கேட்கவும் பயம். எனவே அவன் அம்மா பயன்படுத்திய பிரேஸ்லெட்டையும் வாசனைத் திரவியத்தையுமே கொண்டு வந்திருந்தான்.

அவன் வெளியேறிய பின் மார்கரெட் அந்த அறையிலேயே தரையில் மண்டியிட்டு கதறிக் கதறி அழுதார். பள்ளியில் உள்ள அத்தனை ஆசிரியர்களின் உதவியையும் கேட்டுப் பெற்றார். மொத்தப் பள்ளியும் அந்தச் சிறுவனை உள்ளங்கையில் வைத்துத் தாங்கியது. மிகச்சிறந்த மாணவனாய் உருவாகி, மெருகேறி வெற்றிகரமாக பள்ளிப்படிப்பை முடித்தான்.

ஆண்டுகள் உருண்டோடின. ஆசிரியை மார்கரெட்டுக்கு ஓர் அழைப்பிதழ் வந்தது. அது பீட்டரின் திருமண அழைப்பிதழ். இப்போது ஒரு நல்ல நிலையில் இருந்தான். அமெரிக்காவில் திருமணங்களுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே விருந்தினர்கள் அழைக்கப்படுவர். முதல் நாள் ஒத்திகையெல்லாம் நடக்கும். ஒவ்வொருவரும் அமர வேண்டிய இடம் எழுதி ஒட்டப்பட்டிருக்கும்.

திருமணத்திற்கு மார்கரெட் சென்றார். மணமகனின் அன்னை அமர வேண்டிய இருக்கையில் திருமதி மார்கரெட் என எழுதி ஒட்டப்பட்டிருந்தது. எதேச்சையாக எதிர்ப்படும் சொந்தம் நிலையான பந்தமாய் மாறுவதற்கு அடித்தளம், ஆசிரியர்களின் நிபந்தனையில்லாத நல்லன்பு.

பெற்றோரால் தங்கள் பிள்ளைகளுக்கு ஆசிரியராக எப்போதாவது இருக்க முடியும். ஆனால் ஓர் ஆசிரியரால் தன் மாணவர்களின் பெற்றோராக எப்போதும் இருக்க முடியும்.

மிதிலையில் சீதையின் சுயம்வரத்திற்கு சென்ற இராமன், தசரதனின் மகனென்று தெரிந்ததும் ஜனகன் கொஞ்சம் மிரண்டானாம். ஏனெனில் தசரதனுக்கு 60,003 மனைவியர். ஆனால் இராமனின் ஆசிரியர் வசிட்டர் என்றதுமே அவன் மனம் சமாதானம் ஆகிவிட்டதாம். ஏனெனில் வசிட்டர் ஏகபத்தினி விரதர். அவர் மனைவி அருந்ததி. இந்த உளவியலை உணர்ந்து தான் விசுவாமித்திரர் ஜனகருக்கு இராமனை அறிமுகம் செய்கையில், “பெயருக்குத்தான் இவன் தசரதனின் மகன். ஆனால் மறை ஓதுவித்து இவனை வளர்த்தவர் வசிட்டர்” என்கிறார்.

“திறையோடும் அரசிறைஞ்சும் செறிகழற்கால் தயரதனாம்
பொறையோடும் தொடர்மனத்தான் புதல்வரெனும் பெயரேகாண்
மறை ஓதுவித்து இவரை வளர்த்தானும் வசிட்டன் காண்”

கடவுளே மனிதனாக வந்தாலும் அவர்பால் ஆசிரியரின் தாக்கம் அதிகமென்கையில் மனிதக் குழந்தைகளை மாற்றுவதும் தேற்றுவதும் ஆளாக்குவதும் சிரமமா என்ன?

மரபின் மைந்தன் முத்தையா

                                                                                                                                                    (தொடர்வோம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *