சமீபத்தில் இளம் ஆசிரியர் ஒருவரை சந்தித்தேன். அவர் ஓர் ஆசிரியராக இருப்பதன் பலங்களை உணர்ந்திருக்கிறார். ஆனாலும் அவருக்கொரு சந்தேகம். “சார்! எங்களுக்கு பிள்ளை குட்டி குடும்பம் எல்லாம் உண்டே, அதற்கு நேரம் ஒதுக்க வேண்டாமா?” என்றார்.

உண்மைதான். சாதாரண மனிதர்களில் இருந்து சாதனையாளர்கள் வரை எல்லோருக்கும் குடும்பம் உண்டு. ஆனால் தங்கள் பங்களிப்பு குடும்பம் என்னும் எல்லையையும் கடந்தது என்பதை உணர்ந்தவர்கள்தான் அவரவர் துறைகளில் வெற்றிமுத்திரை பதிக்கிறார்கள்.

வகுப்புக்கு தயார்செய்வது, படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்காக பிரத்யேக வகுப்புகளுக்கு நேரம் ஒதுக்குவது, கல்வி நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஈடுபாடு காட்டுவது மாணவ மாணவியரை போட்டிகளுக்குத் தயார் செய்வது உள்ளிட்ட எத்தனையோ துறைகளில் ஓர் ஆசிரியர் விரிந்து விஸ்வரூபம் எடுக்கிறார். மாணவர்களைத் தயார் செய்வதன் மூலம் தானும் தயாராகிறார்.

இன்று உலகந் தழுவிய அளவில் ஆசிரியத் துறையில் வெற்றிகரமாக விளங்குபவர்களின் பொதுப்பண்புகள் சிலவற்றை அடையாளம் கண்டிருக்கிறார்கள்.

பொதுவாக மாணவர்கள் தங்களை சரியாக மதிப்பதில்லை என்கிற மனத்தாங்கல் ஒரு சில ஆசிரியர்களுக்கு இருக்கக்கூடும். ஆனால் வெற்றி பெற்ற ஆசிரியர்களின் மனப் பான்மையே வேறு.மதிக்கப்படுகிற மாணவர்களே மதிக்கப் பழகுகிறார்கள் என்கிறார்கள் அவர்கள். எந்தவொரு சூழலிலும் ஆசிரியர் தன்னை அவமதிக்க மாட்டார் என்று நம்புகிற மாணவர்கள் அந்த ஆசிரியரை முழுமையாக நம்புகிறார்கள்; மதித்து நடக்கிறார்கள்.

வகுப்பிற்கான பொது விதிகளில் ஒன்றாக பரஸ்பர மரியாதை திகழ்கிறபோது அது ஆசிரியர்- மாணவர் இடையில் மட்டுமின்றி மொத்த வகுப்புக்குமான பொதுக்குணமாக மாறுகிறது.

எளிதில் அணுகக் கூடியவராக இருக்கக்கூடிய ஆசிரியர் மாணவர்களின் முழு நம்பிக்கைக்கு உகந்தவராகிறார். இதில் அணுகுதலென்பது, பரிவு, எளிமை, கனிவாகப் பேசுதல் தன் துறையில் நுட்பமான அறிவு ஆகிய அம்சங்களின் கூட்டுக்கலவை ஆகும். தன்னிடம் உரையாடும் மாணவர் சொல்வதைக் கூர்ந்து கவனிப்பவராகவும், சொல்ல வருவதை யூகித்து உணரக் கூடியவராகவும் அந்த ஆசிரியர் அமைகிறார்.

பொதுவாக ஆசிரியர்கள் மாணவர்களிடம் ஏகமாக எதிர்பார்ப்பதன் மூலமே மாணவர்களை வளர்த்தெடுக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை தன் மேல் ஆசிரியர் வைத்திருக்கும் நம்பிக்கை என்பதாக மாணவர் புரிந்து கொண்டால் உற்சாகமாகிறார். மாறாக ஆசிரியர் தனக்கு வைக்கும் சோதனையென்று கருதினால் தளர்ச்சியும் தடுமாற்றமும் அடைகிறார். தம் திறமைமேல் ஆசிரியருக்கு நம்பிக்கை இருப்பதை மாணவர்கள் உணர்வார்களேயானால் அதைவிட அவர்களுக்கு மகிழ்ச்சி தருகிற விஷயம் கிடையாது.

அதேபோல ஓர் ஆசிரியர் கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். பாரத நாட்டில் கல்விக்குரிய கடவுளாக கருதப்படும் கலைவாணி கையில் ஏட்டுச் சுவடியுடன் இருக்கிறாள். கல்விக்குரிய கடவுளே இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறாள் என்பதற்கான குறியீடு அது. “படித்து முடித்தவர்கள்” ஆசிரியராக முடியாது. படித்துக் கொண்டேயிருப்பவர்கள்தான் ஆசிரியர்கள்.

சின்னக் குழந்தைகளுக்கு கதை சொல்லும் அனுபவத்தை ஏறக்குறைய நாம் எல்லோருமே பெற்றிருப்போம். எந்தக் குழந்தையிடமும் நாம் ஏனோ தானோ என உற்சாகமில்லாமல் கதை சொல்ல முடியாது. உற்சாகத்தோடு கதை சொல்கையில் எந்தக் குழந்தையும் அதைக் கேட்காமல் போகாது. இது எந்த வயது மாணவர்களுக்கும் பொருந்தும்.

இதில் கவனிக்க வேண்டிய இன்னோர் அம்சம், ஓர் ஆசிரியர் தான் அறிந்த செய்தியைப் பகிர்ந்து கொள்ளும் பரவசத்தோடும் ஆர்வத்தோடும் விவரிக்கத் தொடங்குகையில் அந்த ஆக்கபூர்வமான அறிவுச்சுடர் மாணவர்களையும் பற்றிக் கொள்வதைத் தவிர்க்க முடியாது. புதிய புதிய உத்திகளால் பட்டை தீட்டப்படும் கற்பிக்கும் திறன் வைரம்போல ஒளிவிடும்.

ஓர் ஆசிரியரின் இயல்பான பண்புகளில் தலைமைப் பண்பும் ஒன்று. தலைமைப் பண்பு என்பதில் ஈர்க்கும் சக்தி, சிந்தனை ஆற்றல் சூழல்களைக் கையாளுதல், பிறருக்கு முன்னுதாரணமாக இருத்தல் என எத்தனையோ அம்சங்கள் இணைந்தே இருக்கின்றன. தகுதி மிக்க தலைவர்களின் நிழலில்தான் புதிய தலைவர்கள் பூத்து வர முடியும் என்பதால் மாணவர்களின் தகுதிகளை வளர்த்தெடுப்பதிலும் பொறுப்புமிக்க ஆசிரியர்கள் பங்கு வகிக்கிறார்கள்.

மாணவர்கள் ஆசிரியர்கள் நடுவிலான தலைமுறை இடைவெளி, ஆசிரியர்கள் மத்தியிலான தகவல் இடைவெளி நிர்வாகத்திற்கும் ஆசிரியர்களுக்கும் நடுவிலான அதிகார இடைவெளி ஆகியவற்றை திறன் மிக்கவோர் ஆசிரியர் திறம்பட நிரப்புகிறார். சமயோசிதம், சொல்லாட்சி, விநயம் கலந்த விஷய ஞானம் ஆகிய அம்சங்களைக் கொண்டு தன் கல்வி நிறுவனத்தில் மேற்கூறிய இடைவெளிகளை திறம்பட நிரப்புகிற ஆசிரியர் மிகவேகமாக வளர்கிறார்.

உரியவர்களுக்கு உதவுவது போலவே பிறரிடம் உதவி கேட்கத் தயங்காத தன்மையும் சக ஆசிரியர்கள் நடுவில் சகஜ பாவத்தை உருவாக்கிவிடும். எப்போதும் கண்ணுக்குத் தெரியாத கிரீடத்தை தலையில் சுமந்துகொண்டே திரிவது தலைமைப் பண்பு ஆகாது.

கல்வித் துறையின் உயர் அதிகாரி ஒருவரை சந்திக்கச் சமீபத்தில் காத்திருந்தேன். விருந்தினர்களை அமர வைத்து அவர்கள் வருகை பற்றிய குறிப்புகளை உள்ளே அனுப்பும் உதவியாளர் ஒருவர் இருந்தார். மிக எளிய மனிதராய் ஒரு குறிப்பேட்டில் பார்வையாளர்களின் விபரங்களைக் குறித்துக் கொண்டிருந்த அந்த மனிதர், கல்வித்துறை சார்ந்த புதிய விதிகள் வழக்கமான நடைமுறைகள் என அனைத்தையுமே நுணுக்கமாகக் கற்று வைத்திருந்தார்.

உயர் அதிகாரியை சந்திக்கக் காத்திருந்த இளம் அலுவலர்கள் பலரும் அந்த மனிதரை அணுகி தங்கள் ஐயங்களைத் தீர்த்துக் கொண்டார்கள். அந்த அலுவலர்களில் மாவட்டக் கல்வி அலுவலர்களும் அடக்கம். கற்றுக் கொள்ளத் தயங்காத குணநலன் அந்த அலுவலர்களை மேலும் உயர்த்தும் என்று நினைத்துக் கொண்டேன்.

நிகழ்கால மாணவர்களே எதிர்கால பாரதம். அவர்கள் தங்களின் ஆதர்சங்களாய் ஆசிரியர்களை எப்போதும் எண்ணக்கூடிய தாக்கத்தை ஆசிரியர்கள் நினைத்தால் இப்போதே ஏற்படுத்தலாம்.

தோற்றத்திலும் உடை உடுத்துவதிலும் நேர்த்தி, கனிவும் உறுதியும் கலந்து உரையாடும் உன்னதம், சூழல்களைக் கையாளும் சாமர்த்தியம், முன்வந்து உதவுகிற மனிதநேயம், தன் துறையில் கூரிய அறிவு, சிந்தனையில் சிறந்த தெளிவு ஆகிய நிறைகுணங்கள் நிகரற்ற ஆசிரியரை வடிவமைக்க வல்லவை.

இந்த குணங்கள் சிலருக்கு பிறவிக் குணங்களாக அமைந்திருக்கும் என்பது உண்மைதான். ஆனால் அப்படி அமையாதவர்கள் முயற்சியாலும் முனைப்பாலும் பயிற்சியாலும் இந்த குணங்களைத் தருவித்துக் கொள்ள முடியும். ஏற்றுக் கொண்ட துறைகளில் எல்லை தொடுபவர்கள் தங்களின் சாதாரண முத்திரை களைந்து சாதனை முத்திரையைப் பெறுகிறார்கள். காலகாலங்களுக்கும் மாணவர்கள் மனங்களில் வெற்றிச் சித்திரமாய் வாழ்கிறார்கள்.

மரபின் மைந்தன் முத்தையா

                                                                                                                                                    (தொடர்வோம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *