சராசரி குடும்ப வாழ்வில் கூட,பெண்கள் வகிக்கும் பொறுப்புகளின்
நிலைமாற்றம் பிரமிக்கத்தக்கது. ஒருபுறம் பார்த்தால் அவள்
கணவனைச் சார்ந்திருப்பவள் போல் தென்படுகிறாள். இன்னொருபுறம்
பார்த்தால் கணவனைத் தாங்கும் ஆதாரசக்தியாகவும் இருக்கிறாள்.
கணவனைப் பற்றிப் படரும் கொடியும் அவளே.குடும்பம் என்னும்
கொடியைத் தாங்கும் கொம்பும் அவளே.

இல்லத்தரசிகளுக்கே இது பொருந்துமென்றால் பதினான்கு லோகங்களைப் பராமரிக்கும்
இருப்பதில் ஆச்சர்யமென்ன?

“கொடியே! இளவஞ்சிக் கொம்பே!” என்கிறார் அபிராமிபட்டர்.

ஆன்மீகத்தில் இருக்கும் வசதியே சில நேரங்களில் தகுதிக் குறைவும்
தகுதியாகி விடுவதுதான்.ஒரு மாணவர் எவ்வளவுதான்
ஆசிரியர்களின் அன்பைப் பெற்றவராக இருந்தாலும் அவருடைய
மதிப்பெண்களின் பெரும்பகுதி அவருடைய தகுதிகளைப் பொறுத்தே
இருக்கிறது.

ஆனால் ஓர் ஆத்மசாதகரைப் பொறுத்தவரை அவருடைய தகுதிக்
குறைவுகளே தகுதிகளாவதுண்டு.உயிரி
ல் ததும்பும் பக்திப் பெருக்கே
அடிப்படைத் தகுதியாய் அம்பிகை கொள்கிறாள்.எனவே ஓர்
ஆத்மசாதகனுக்கு அவன்மீது கவியும் கருணை தன் தகுதிக்கு
மீறியதாகவே தோன்றுகிறது.

இதைத்தான்,”எனக்கு வம்பே பழுத்த படியே” என்கிறார் அபிராமி
பட்டர். மறையை ஒரு மலராக உருவகித்தால் அதன் மொத்த
நறுமணமாகவும் அம்பிகையே திகழ்கிறாள்.

பனிபடர்ந்த இமயமலைச் சிகரங்களில் உலவும் பெண்யானையாக
அம்பிகையை உருவகிக்கிறார் அபிராமிபட்டர்.அம்பிகை
பெண்யானையாகிய பிடியின் வடிவம் கொள்ள,சிவபெருமான்
ஆண்யானை வடிவெடுத்து விநாயகப்பெருமான் திருவுரு தோன்ற
அருளியதாக திருஞானசம்பந்தர் பாடுவது இங்கே நினைவுகொள்ளத்தக்கது.

“பிடியதன் உரு உமை கொள மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே”

என்னுந் திருஞானசம்பந்தர் தேவாரமும்,

“காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர்திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்”

என்னுந் திருநாவுக்கரசர் தேவாரமும் நம் நினைவுக்கு வருகின்றன

அம்பிகையைப் பெண்யானையாக உருவகப்படுத்துவதில் அவள்
ஓங்கார சொரூபமாக இருக்கிறாள் என்பதும் உணர்த்தப்படுகிறது.

“பிரமன் முதலாய தேவரைப்பெற்ற அம்மே” என்கிறார் அபிராமி
பட்டர். பிரமன் முதலாய மும்மூர்த்திகளையும் இது குறிக்கும்.
திருமாலின் நாபிக்கமலத்தில் பிரம்மா பிறந்தார். திருமால்
சக்தியின் அம்சம் என்னும் விதத்திலும் இது பொருந்தும்.

அடியேன் இறந்து இங்கினிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே
என்று விண்ணப்பிக்கிறார். அபிராமி அந்தாதி தரும் ரகசியங்களில்
முக்கியமானது இறப்பையும் பிறப்பையும் வெல்லும் இரகசியம்.
இறப்பு நிகழ்ந்தால் பிறப்பு நிச்சயம். முக்தி நிகழ்ந்தால் மட்டுமே
மரணம் பிறவி இரண்டும் தவிர்க்கப்படுகிறது. அதற்கு ஒரே வழி
ஆயுள் முடியும் வேளையில் அம்பிகையால் ஆட்கொள்ளப்படுவதுதான்.
எனவே பிறப்பில்லாமல் போக வேண்டுமென்றால் இறப்பில்லாமல்
போக வேண்டும்.அதற்கு அம்பிகை வந்து ஆட்கொள்ள வேண்டும்.

கொடியே!இளவஞ்சிக் கொம்பே!எனக்கு வம்பே பழுத்த
படியே!மறையின் பரிமளமே!பனிமால் இமயப்
பிடியே!பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே!
அடியேன் இறந்து இங்கினிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *