எங்கே நிலவு உருவாகும்?

அம்பிகையின் திருவுருவத்தை வரைந்து காட்டுகிற பாடல்கள் ஏராளம். அந்த வரிசையில் இன்னொரு பாடல் அம்பிகையினுடைய திரு முலைகளின் வர்ணனையோடு தொடங்குகிறது.

செப்புப் போன்ற திருமுலைகளில் அம்பிகை சந்தனத்தைப் பூசியிருக்கிறாள். அந்தத் தோற்றத்தில் அவள் எப்படியிருக்கிறாள்? நேராக அவள் திருச்செவியை நோக்கி பட்டருடைய வர்ணனை போகிறது. கொப்பு என்பது மேலே அணிகிற தோடு, வைரக்குழை என்பது கீழே அணிவது, தரளக் கொப்பு என்றால் முத்தில் ஆன தோடு என்று அர்த்தம்.

அம்பிகையின் திருமுலைகளில் இருந்து நிமிர்ந்தவுடனேயே கண்களில் படுவது, முத்துக் கொப்பும், வைரக் குழையும் அணிந்த திருச் செவிகள், அந்த செவிகள் வரைக்கும் ஓடிய கண்கள், அதனுடைய கடைவிழி. கொப்பு என்பது பராசக்தி விரும்பி அணியக்கூடிய அணிகலன். காரைக்குடியில் எழுந்தருளியிருக்கிற அம்பிகைக்கு கொப்புடைய நாயகி என்று பெயர்.

பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம். காரைக்குடியில் தேனப்ப செட்டியார் என்று ஒரு பெரியவர். அவர் கந்த சஷ்டி விழாவை விடாமல் நடத்துவார். தீபாவளி முடிந்தவுடன் தொடங்கிவிடும். காரைக்குடியில் இருக்கும் நகர சிவன் கோவில்தான் வருடா வருடம் நடக்கும். ஒருமுறை அவருக்கும் கோவில் நிர்வாகத்துக்கும் ஏதோ பிரச்சனையாகி கந்த சஷ்டி விழா நடத்தக்கூடாது என்று சொல்லி விட்டார்கள்.

நான் கவியரங்கத்தில் பாடப்போயிருந்தேன். அவருடைய மனம் மகிழும்படியாக ஏதாவது சொல்லுங்கள் என்றார்கள்.

கொப்புடைய நாயகி தன் பொற்புடைய சந்நிதியில்
கந்தன்விழா கூட்டுகின்றாள்
பிள்ளை புகழ் கேட்பதிலே
எல்லையில்லா வேட்கையினை
பெண்ணரசி காட்டுகின்றாள்

என்று சொன்னேன்.

அவருடைய வருத்தமெல்லாம் நீங்கி மகிழ்ந்து விட்டார். எத்தனை நாள்தான் தந்தையின் சக்தியிலேயே வைத்து பிள்ளையின் பெருமையைப் பேசுவீர்கள். என் சந்நிதியில் பேச மாட்டீர்கள் என்று கொப்புடையாளே உங்களுக்கு ஆணை பிறப்பித்திருக்கிறாள்.

ஈன்றபொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோன் எனக் கேட்ட தாய்
என்றேன்.

அதைச் சொன்னவுடனேயே அவருடைய மன வருத்தம் மாறிவிட்டது. ஒவ்வொரு சின்ன நிகழ்ச்சியிலும் அவளுடைய திருவுள்ளம் செயல்படுகிறது என்று எடுத்துக் கொண்டால் எதிலும் நமக்கு வருத்தம் வராது.

கண்கள் செவி வரைக்கும் நீள்கின்றன. செவிகள் வரைக்கும் ஓடிய விழிகள் தெரிகிறது. துப்பு என்றால் இதழ் என்று அர்த்தம். அவளுடைய இதழிலிருந்து வருகிற புன்னகையே நிலவு போன்றது என்று ஒரு பொருள். அவளின் கண்கள் திருச்செவியைப் பார்த்தவுடனேயே அதிலிருக்கும் தோடு நிலவாகி விட்டது என்றும் ஒரு பொருள்.

“எழுதிவைத்தேன் என் துணை விழிக்கே” என்றால் இரண்டு கண்களைக் சொல்வதாக ஒரு பொருள் சொல்வார்கள். ஆனால் துணை விழி என்று ஒருமையில் சொல்வதால் அந்தச் சொல் புறக்கண்களைக் குறிக்காது. அடுத்த சில நிமிடங்களில் எழப்போகிற நிலவை முன்கூட்டியே தரிசித்த அவருடைய அகக்கண்ணைக் குறிக்கும். இந்த இரண்டு கண்களுக்கும் துணையாக அவருக்கு உள்ளே அகக்கண் திறக்கிறது. அம்பிகை அந்தக் கண்களை மலர்த்துகிறாள். உனக்கான நிலவை எழுப்பப் போகிறேன் என்று காட்டுகிறாள். அந்தத் துணை விழி முன்கூட்டியே அதை தரிசிக்கிறது.

செப்பும் கனக கலசமும்போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராமவல்லி அணிதரளக்
கொப்பும் வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத் தேன்என் துணைவிழிக்கே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *