என்ன வேடிக்கை இது!

அம்பிகையின் திருநாமங்களைப் பயன் கருதியே சொல்கின்ற நிலையைத் தாண்டி நிபந்தனையற்ற ஈடுபாடும், பக்தியும் யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு எல்லாவற்றையும் தருகிறாள் என்பதற்கு அபிராமி பட்டரின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு.

அம்பிகையுடைய திருவுருவத்தை எழுதிகாட்டிக்கொண்டு வருகிற பட்டர், இந்த இடத்தில் நிறுத்தி ஒரு நிமிடம் யோசிக்கிறார். அவளுடைய உருவத்தை நாம் உள்ளத்தில் பதிப்பதெல்லாம் இருக்கட்டும்.

உள்ளபடியே இந்த உருவம்தானா அம்பிகை என்றொரு கேள்வியைக் கேட்கிறார். அவள்தான் இந்தப் பிரபஞ்சத்தையே படைத்தாள். அவளுடைய தனங்கள் தாமரை மொட்டுக்கள் போல் இருக்கின்றன என்று நாம் உவமை சொல்கிறோம். அவளுடைய கண்கள் மானினுடைய அம்கண்கள்போல் இருக்கின்றன என்று உவமை சொல்கிறோம்.

தாமரை, மான், மனிதன், பூமி, நிலவு எல்லாவற்றையும் அவள்தான் படைத்தாள். அவள் படைத்ததையே அவளுக்கே உவமையாகச் சொல்கிறோமே, இது நமக்கே வேடிக்கையாக இல்லையா என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறார்.

உருவ நிலையில் தெய்வத்தை உணரும் அதே தீவிரத்தோடு அருவ நிலையிலும் உள்ளே அவர் அம்பிகையை உணர்ந்திருக்கிறார் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு அடையாளம்.

மற்றவர்களைப் பொறுத்தவரை அமாவாசை பவுர்ணமியாவதில் அவர்கள் அம்பிகையை உணர்ந்தார்கள். ஆனால் ஒரு வடிவத்திலே தோன்றக் கூடிய தெய்வம் எல்லா வெளியிலும் விரவி நிற்கிறாள் என்பது அபிராமி பட்டர் பெற்ற பயன்.

சிவபெருமானுக்கு பிறப்பு இறப்பு கிடையாது. அவருடைய துணையாக அவரோடு நிற்கக்கூடியவள் அம்பிகை, பராசக்தி. ஓரிடத்தில் அவளை இமவான் பெற்ற மகள் என்கிறோம்.

ஓரிடத்தில் மதங்க மாமுனிவர் பெற்ற மகள் என்கிறோம். ஓரிடத்தில் தகசன் பெற்ற மகள் என்கிறோம் இதெல்லாம் சும்மா கற்பனை என்கிறார் அபிராமி பட்டர். எப்படி அவளுக்கு அந்தத் கிடையாது கிடையாதோ அது போல் ஆதி என்பதும் கிடையாது. எப்படி எல்லையே இல்லாதவளாக இருக்கிறாளோ அதுபோல் பிறவி என்பதும் கிடையாது.

இமயமலை என்பது சிவபெருமானே தவம் செய்கிற இடம். அங்கே தவம் புரிவதனால் முனிவர்களுக்கு எல்லை இல்லாத சக்தி கிடைக்கிறது. அவளே அங்கு சக்தி. இமவானுடைய மகள் என்று சொல்வது இதற்காகத்தான்.

கடவுளைப் புரிந்துகொள்கிறேன் என்று பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்கிறேன் என்றும் புறப்பட்டால் அது நம்முடைய எல்லையை மீறிய காரியம்.

அவளைப் பற்றிய வர்ணனைகள் அவளுடைய உயரத்திற்கு முன்பாக ஒரு தூசு. அவளுக்கு பிறவிகள் இருப்பதாக நாம் கட்டுகிற புராணங்கள் வேடிக்கைக் குரியவை. அவள் புரிந்து கொள்ளக்கூடிய எல்லையைத் தாண்டிய மகா சொரூபிணி என்பது உள்நிலையில் புலப்படும். என்பதை இந்தப் பாடல் மூலமாக பட்டர் நமக்கு அருளியிருக்கிறார்.

நகையே இஃதிந்த ஞாலமெல்லாம்பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ்முலைமானே முதுகண்முடிவில் அந்த
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பதுநாம்
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.

அபிராமியை நோக்கி நம்மை உந்தித் தள்ளுவது விருப்பம் நிறைந்த பக்தி.

பல பேர் கண்ணீர் என்றாலே வருத்தத்திலோ, வலியிலோ, மகிழ்ச்சியிலோ வருவது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போது உங்கள் மனம் நிரம்புகிறதோ, அந்த நிரம்புகிற நிலையை கண்கள் வெளிப்படுத்துகின்றன. அது ஆனந்தமாக இருக்கலாம். துயரமாக இருக்கலாம், துன்பமாக இருக்கலாம், பரிவுணர்ச்சியாக இருக்கலாம், இரக்க உணர்ச்சியாக இருக்கலாம்.

மனம் உணர்வினாலே நிரம்புகின்ற போது கண்கள் ததும்புகின்றன. அதற்கு அடுத்த அடையாளம் உடம்பிலே ஒரு சிலிர்ப்பு ஓடுகிறது. இவற்றையெல்லாம் நீங்கள் உற்பத்தி செய்யமுடியாது. ஒருவரைப் பார்த்து வணங்குவது போல் நடிக்கலாம். சிரிப்பதுபோல் நடிக்கலாம். உடல் சிலிர்ப்பதுபோல் நீங்கள் நடிக்கவே முடியாது.

“விரும்பித்தொழும் அடியார் விழிநீர் மல்கி மெய்புளகம் அரும்பி”

தெய்வத்தை அடைவதற்கு நமக்குப் பெரிய தடையாக இருப்பது அறிவு. உலகியல் அறிவைக் கடந்த நிலைக்கு உங்கள் அறிவு செல்கிறது என்பது அர்த்தம்.
ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள என்கிறார் சேக்கிழார் ஆன்மீகத்தில் ஆழங்கால்பட்டிருக்கிற ஓர் அவதூதரைப் பார்த்தால் அவர்கள் செய்யும் காரியம் அறிவுக்கு உட்பட்டது போல் தெரியாது. ஆனால் அறிவு நிலையைக் கடந்திருப்பார்கள்.

சதாசிவப் பிரம்மேந்திரர் ஒரு திகம்பரர், ஆடை அணியாதவர், இஸ்லாமிய அரசர்களின் அந்தப்புரத்திற்குள் போகிறார். எங்கே போகிறோம் என்பது தெரியாமல் அந்தப்புரத்தைத் தாண்டி நந்தவனத்தை நோக்கிப் போகிறார். அரசன் வந்து அவர் கைகளை வெட்டுகிறான். அவருக்கு கைகள் வெட்டுப்பட்டதும் தெரியவில்லை. அவர் பாட்டக்கு போகிறார். இவ்வளவு பெரிய ஞானியாக இருக்கிறாரே என்று அவர் கால்களில் விழுந்து அந்தக் கைகளைத் திருப்பிக் கொடுத்தால், கொடுங்க என்று வாங்கி ஒட்ட வைத்துக் கொண்டு போய்விட்டார்.

அவருடைய ஸ்தூல சமாதி கரூரிலிருந்து 10 கி.மீ தொலைவில் நெரூரில் இருக்கிறது. அவரைப் பார்த்து அரசன் கேட்ட முதல் வார்த்தை அறிவிருக்கிறதா என்பது தான். அவரைப் பார்த்தால் அறிவை இழந்தவர் போல் தோன்றுகிறார். அவர் அறிவைக் கடந்தவராக இருக்கிறார்.

கரும்பு என்றால் வண்டு. தேனை அருந்திய வண்டு எப்படியெல்லாம் களிக்கிறதோ அவ்வளவு களிப்பை இந்த பக்தர்கள் வெளிப்படுத்துகிறார்கள். தெய்வ சந்நிதியில் உண்மையான அடியார்கள் நிற்கிறபோது நமக்கு தெய்வத்தைப் பார்ப்பதா இவர்களைப் பார்ப்பதா என்பது தெரியாது. அந்தப் பரம்பொருளின் பூரண கடாட்சம் இவர்களுடைய முகத்திலே பொங்கிப் பிரவாகிக்கும். வண்டுக்கு ஒரு தனித்தன்மை உண்டு.

ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு ஆத்ம சாதகருக்கு உதாரணமாக வண்டைத்தான் சொல்லுகிறார். வண்டானது தேன் கிடைக்கிற வரையில் ஓசை எழுப்பிக் கொண்டே போகிறது. வண்டு முரல்கிற ஓசை சத்தம் என்று அதைச் சொல்வார்கள். அம்பிகைக்கு அதுவே ஒரு மந்திரம். அந்த ஓசையை எழுப்பிக்கொண்டே போய் மலரில் அமர்ந்து தேனைத் தேடுகிறது. தேன் கிடைத்து தேனை உண்டபிறகு அதனிடமிருந்து ஓசை வருவதில்லை. அதுவரைக்கும் அவ்வளவு ஆரவாரம். தேன் பருகியபிறகு சத்தமே இல்ல கிடையாது.

ஆத்ம சாதகர்களும் அப்படிதான். எங்கே ஆண்டவன், எங்கே ஆண்டவன் என்று தேடிக்கொண்டு போவார்கள். தெய்வ அனுபவத்தைப் பருகியபிறகு அந்த ஆனந்தத்தில் தடுமாறுவார்களே தவிர அவர்களுக்கு அந்த உணர்வை வெளிப்படுத்த முடியாது.

அலைபுனல் சேர் செஞ்சடைஎம் ஆதி என்றும்
ஆரூரா என்றென்றும் அரற்றா நில்லே

என்பார் திருநாவுக்கரசர். உங்கள் அனுபவத்தைச் சொல்லுங்கள் என்றால் என்னால் அரற்றத்தான் முடியும். வாயிலிருந்து வார்த்தைகள் வராது என்கிறார். அதையே, திருப்புலம்பல் என்கிறார் மாணிக்கவாசகர்.

தெய்வ அனுபவம் என்ன செய்கிறது?

இன்றைக்கு என்ன திதி என்று கேட்டார் அரசர். அமாவாசையை பௌர்ணமி என்று சொன்னபோது மற்றவர்கள் மொழி தடுமாறிச் சொல்லிவிட்டார் என்று நினைத்தார்கள். அல்ல, அடியார்கள் சொன்னதுதான் மொழி. அவர்கள் என்ன செல்கிறார்களோ அது நடக்கும். இரவை அவர்கள் பகல் என்றால் தெய்வம் அதைப் பகலாக மாற்றித் தரும். நாளை இரவு என்றார்கள் என்றால் நாளை இரவாக மாற்றித் தரும். வெளியே பார்த்தால் அறிவிழந்தவர்களாக, மொழி தடுமாறியவர்களாக அடியவர்கள் திகழ்கிறார்கள்.

அபிராமி சமயம் என்பது பக்தி, தன்னை மறக்கிற பக்தி, தன்னை இழக்கிற பக்தி, தன்னைக் கடக்கிற பக்தி, பித்தர்கள் போல் தோன்றுவார்கள், சதா சர்வகாலமும் தெய்வ சிந்தனையில் இருப்பார்கள், இவர்கள் சொல்லும் எந்தச் சொல்லும் பலிக்கும். இதுதான் அபிராமியின் சமயம். அபிராமி என்ற சொல்லிற்கே பேரழகி என்று பொருள். பேரழகான சமயம் இந்தச் சமயம்.

விரும்பித் தொழும்அடி யார்விழிநீர்மல்கி மெய்புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தமாகி அறிவிழந்து
சுரும்பிற் களித்து மொழிதடுமாறிமுன் சொன்ன எல்லாம்
தரும்பித்தர் ஆவரென றால்அபிராமி சமயம்நன்றே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *