ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர் சுகா இல்லம் வந்திருந்தார்.சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு அவர்  தங்கியிருந்த விடுதியில் இறக்கிவிடப் புறப்பட்டேன். அப்பாவும் உடன் வந்தார். அவர் வந்ததன் நோக்கம், வழியிலிருக்கும் பிரிட்ஜ் கிளப்பில் இறங்கிக் கொள்ள. அறுபது அறுபத்தைந்து வயது வரை ஆஃபீசர்ஸ் கிளப்பில் மாலைநேரங்களில் டென்னிசும் பிரிட்ஜும் விளையாடி வந்தார்.

பின்னர் காஸ்மாபாலிடன் கிளப்பிற்கு மாறிக்கொண்டார். 73 வயதான பின்னர் டென்னிஸ் நின்றது. பிரிட்ஜ் மட்டும் விடவில்லை.முன்னிருக்கையில் அவரிருக்க சுகாவும் நானும் பின்னிருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டே வந்தோம்.
குப்புசாமி மருத்துவமனை எதிரில் மணிமேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பிரிட்ஜ் கிளப் வந்ததும் இறங்கிக் கொண்டவர், பின்னிருக்கையில் இருந்த என்னைப் பார்த்து சொன்ன சொல் கேட்டு சுகா அதிர்ந்து போனார்.

“தாங்க்யூ” என்று சொல்லிவிட்டு நிதானமாய் சாலை கடந்து போனவரை மலைப்புடன் பார்த்துக் கொண்டிருந்த  சுகா அதிர்ச்சி மாறாமல் என்னிடம் கேட்டார்,” என்னண்ணேன் இது”?
” அவர் அப்படித்தான் சுகா” என்றேன்.

பொதுவிலோ என் பணி வெளிகளிலோ அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. எப்போதாவது என்னை அலைபேசியில் அழைக்க நேர்ந்தால்,  ” நான் மருதவாணன் பேசறேம்ப்பா! கேன் ஐ டாக் டு யூ நவ்” என்றுதான் தொடங்குவார்.

இதைவிட சுவாரசியமாய் ஒரு சம்பவம். ராகவேந்திரா விளம்பர நிறுவனத்தில் நான் படைப்பாக்க ஆலோசகராக இருந்த வேளையில் நாளின் பெரும்பகுதியை  அந்த அலுவலகத்தில்தான் கழிப்பேன். ஒருநாள் நான் இல்லாத போது தொலைபேசி அழைப்பொன்று வந்திருந்தது.அங்கு பணியிலிருந்த கௌசல்யா என்ற பெண் எடுத்திருக்கிறார்.

“முத்தையா இருக்காரா?” என்றது எதிர்க்குரல்.
“இல்லை சார்.நீங்க ?”
” நான் மருதவாணன்னு பேசறேன்.அவர் வந்தாகூப்பிட சொல்றீங்களா?
“சொல்றேன் சார்,, உங்க நம்பர்?”
நிறுத்தி நிதானமாய் அவர் சொன்ன தொலைபேசி எண்ணைக் குறித்துக் கொண்ட கௌசல்யாவிற்கு சற்றே பொறிதட்டியிருக்கிறது.” இது  சாருடைய வீட்டு நம்பர்தானே” என்று யோசிப்பதற்குள் “தாங்க்யூ” என்று சொல்லித் தொலைபேசியை வைத்துவிட்டார்.

அவர் பிறந்த ஊர் பூம்புகார் அருகிலிருந்த கீழப்பெரும்பள்ளம். ஆக்கூர் பண்ணை அதிபர் ஏ.ஆர்.முத்தையா பிள்ளைக்கும் அவருடைய மூன்றாவது மனைவியாகிய தனுஷ்கோடி அம்மாளுக்கும் 1933 ஜனவரி 9ல் மகனாகப் பிறந்தார். ஒரு மூத்த சகோதரர், ஓர் இளைய சகோதரர். ஒரு மூத்த சகோதரி,இரு இளைய சகோதரிகள்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து ஒரு சில கல்லூரிகளில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்தார். ஆறடி உயரம்,சிவந்த நிறம்,சுருள்கேசம்.விரல்களுக்கிடையே வெண்சுருட்டு.

20170113034711_00005

அந்தப் பகுதியில் பெரும் தனவந்தராகவும் செல்வாக்கு மிக்க பிரமுகராகவும் விளங்கிய திருக்கடவூர்பிச்சைக்கட்டளை எஸ்டேட் அதிபர் கை.கனகசபைப்பிள்ளையின் கடைசி மகள் அலமேலுவை மணந்தார்.

சின்ன மாப்பிள்ளை வருகிறார் என்றாலே திருக்கடவூர் பண்ணை வீடு எல்லாவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தும். “சுர்” என்று கோபப்படும் துர்வாசர் என்பதால் எச்சரிக்கையாயிருக்கும்.

தன் திருமணம் பற்றி சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களிடம்  தனி உரையாடலில் அப்பா சொன்னதை, அவர் மறைவுக்கு துக்கம் கேட்க வந்த போது சுகிசிவம் சொன்னார். ” நான் காலேஜ் போக பஸ்சுக்கு நிப்பேன் சார். கே.கே.பிள்ளையோட பெரிய கார் போகும்.இந்த வீட்டுக்கு மாப்பிள்ளையாகி இதே கார் ல போகணும் னு அப்போ நினைச்சுக்குவேன்.அதுமாதிரியே நடந்தது”என்றாராம்.
தன்னைப்பற்றி உயர்வாக சொல்ல நேரும் போதெல்லாம் “அது கடவுள் செயல்” என்று அழுத்திச் சொல்லி அது கடவுளின் காதில் விழுந்ததையும் உறுதி செய்து கொள்வார்.
உடற்கல்வி ஆசிரியராக கல்லூரிகளில் பணிபுரிந்த காலகட்டத்தில் அவர் இலங்கைக்குப் போன அனுபவத்தை அடிக்கடி நினைவு கூர்வார்.” சிலோன்ல போய் இறங்கறோம்..பண்டாரநாயகா வாஸ் ஷாட் டெட்” என்ற முன்னுரையுடன் அவருடைய விவரிப்புகள் தொடங்கும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடுவில் மட்டுமே பயன்படக்கூடிய கடவுச்சீட்டு ஒன்று அவரிடம் இருந்தது.20170113034711_00001 20170113034711_00002 (1)
பின்னர் சென்னையில் சிம்சனில் பணிக்குச் சேர்ந்தார். அவரை   எங்கள் தாத்தா கோவையில் குடியேற்ற விரும்பினார். நெருங்கிய நண்பர்களிடம் அவர் சொன்னதும் கோத்தாரி நிறுவனம் கோவையில் புதிதாகத் திறக்கப்போகும் கிளைக்கு முதன்மை மேலாளராக அமர்த்திக் கொள்ள சம்மதித்தது.
20170113034711_00006

சென்னை ராஜாஅண்ணாமலைபுரம்கேசவபெருமாள் புரத்தில் வாங்கியிருந்த இரண்டு கிரவுண்டு நிலத்தை விற்றுவிட்டு கோவையில் குடியேறினார். என் மூத்த சகோதரரும் நானும் கோவையில்தான் பிறந்தோம்.எதற்கும் கவலைப்படாத இயல்பு. வேலையில் வேறு வித வருமானங்களுக்கு வாய்ப்பிருந்தும் கைநீட்டாதநேர்மை. தலை தாழாத தோரணைக்கு நடுவிலும் சிரித்த முகம். மெல்லிய நகைச்சுவை உணர்வு. சொந்த வேலையை கிடப்பில் போட்டு விட்டு பிறருக்கு உதவும் குணம். இவையெல்லாம் அவர் தனக்கென வகுத்த வாழ்வியல் நெறிகள்.

யாராவது வீதியில் போகிற வழிப்போக்கர் அவரிடம் முகம் கொடுத்துப் பேசிவிட்டால் ஐந்தாவது நிமிடம் எங்கள் வீட்டு சாப்பாட்டு மேசையில் அமர்த்தப்பட்டிருப்பார்.கர்நாடக சங்கீதத்தில் அப்பாவுக்கு நல்ல ஞானம் உண்டு.திருமுறைகளில் ஆழமான ஈடுபாடு.தேவாரங்களை அவற்றுக்குரிய பண்ணோடு தான் பாடவேண்டும் என்பதில் அதீத கண்டிப்பாக இருந்தவர் அவர்.

நுனிநாக்கு ஆங்கிலமும் நாகரீக நடைஉடைகளுமாய் வலம் வந்தாலும் சில விஷயங்களில் பழமைவாதி.தஞ்சாவூர் பக்கத்துப் பிளைமார்களின் இயல்புப்படி காலையிலேயே முழுச்சாப்பாடு சாப்பிட்டு விட்டு அலுவலகம் கிளம்புவார்.

திங்கட்கிழமை காலையில் மட்டும் அவர் குளித்துவிட்டு வரும்போது சாப்பாட்டு மேசையின் மேல் ஒரு வட்ட மேசை போடப்பட்டிருக்கும். ராகுகாலம் நடக்கும் போது இடையிலேயே கிளம்ப வேண்டும் என்பதால் நின்று கொண்டே சாப்பிடுவார். நின்று கொண்டிருந்தால் “பிரஸ்தானப்”பட்டு விட்டதாக அர்த்தமாம்.அதாவது ராகுகாலத்திற்கு முன்பே  புறப்பட்டு விட்டாராம்.

என் சகோதரரும் நானும் பள்ளி மாணவர்களாயிருந்த நாட்களில் ஒருநாள் இரவு வீட்டிற்கு வந்தவர், இரவு உணவுக்குப் பிறகு புகைபிடித்துக் கொண்டே அம்மாவிடம் தான் கோத்தாரி வேலையை விட்டுவிட்ட செய்தியைச் சொன்னார்.
20170113034711_00004

அதன்பிறகு தாத்தாவின் நண்பர்களில் ஒருவரான நஞ்சுண்டராவ் பெங்களூருவில் இருந்த தன் கோதுமை ஆலையில் பொது மேலாளராக நியமித்து வீடும் கொடுத்து வேலைக்கமர்த்த முன்வந்தார். நாங்களும் பெங்களூர் வாசத்திற்கு மானசீகமாகத் தயாராகிக் கொண்டிருந்தோம்.

ஆபீசர்ஸ் கிளப்பில் உடன் விளையாடும் தோழர்களான ஆலை அதிபர்கள்சிலர், ” இதுக்கு ஏன் மருதவாணன் பெங்களூர் போய்கிட்டு? பேசாம பஞ்சு பிசினஸ் பண்ணுங்க.நாங்க ஆர்டர் தரோம்” என்று சொன்னதுமே  நஞ்சுண்டராவை தொலைபேசியில் அழைத்து வரவில்லையென்று தெரிவித்ததோடு மறக்காமல் ‘தாங்க்யூ” சொல்லிவிட்டு வந்துவிட்டார்.

அதன்பிறகு கொஞ்ச காலம் பஞ்சுக்கும் நோகாமல் அவர் பஞ்சு வணிகம் செய்ய அதற்குள் தாத்தா இறந்திருக்க தாத்தாவின் நெருங்கிய நண்பரும் கோவையின் பெருந்தொழிலதிபருமான திரு .ஜி.கே.தேவராஜுலு  அவருடைய புதல்வரின் நிர்வாகத்தில் இருந்த டைட்டன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தில் பணிக்கு அமர்த்தினார்.
20170113034711_00009
பணிஓய்வுக்கு முன்னரே அவர் ஓய்வுக்கானஒத்திகைகள் பார்த்திருந்ததால், தினசரி பூஜை,சங்கீதம், தொலைக்காட்சி ஓரளவு வாசிப்பென்றுபொழுது கழிந்தது.பெயர்த்திகள் இருவர் பிறந்து வளர்ந்து ஆளாயினர்.
எப்போதும் யாரேனும் விருந்தினர்கள் வந்து கொண்டேயிருக்க வேண்டும் அவருக்கு. வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் ” பிரதர்” என்றுதான் அழைப்பார்.
நான் நிறைய புத்தகங்கள் எழுதியிருப்பினும் சில புத்தகங்களைத்தான் பதிப்பித்திருக்கிறேன். அப்பாவும் ஒரு புத்தகம் பதிப்பித்திருக்கிறார். ஆனால் அவரைப் பொறுத்தவரை,புத்தகம் என்பது இலவச விநியோகத்திற்குரியது!! எனவே தன் கைக்கு வந்த ஆறுமுக நாவலரின் கந்தபுராண வசன நூலை தன் நெருங்கிய நண்பரும் தேர்ந்த தமிழறிஞருமான பேராசிரியர் இராம.இருசுப்பிள்ளை அவர்களின் துணை கொண்டு பலரின் உதவியுடன் இலவசப் பதிப்பாகக் கொண்டு வந்து அதற்காக  திருவாவடுதுறை ஆதீனம் மகாசந்நிதானத்தின் பாராட்டுப் பெற்றார்.
20170113034711_00008
75 வயதில் தனக்கு நீரிழிவு வந்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அதற்கு முக்கியக் காரணம்,தனக்கு 75 வயது ஆகிவிட்டதையே அவரால் ஜீரணிக்க முடியவில்லை. பொதுவாழ்விலும் இலக்கிய வாழ்விலும் எனக்குப் பழக்கமானவர்கள் பலரும் அவருடன் மிக நெருங்கியிருந்தார்கள்.அதற்கு முக்கியக் காரணம் அவருடைய விருந்தோம்பல் பண்பும் பேதம் பாராமல் பழகும் இயல்பும்தான்.
 என்னைத்தேடி யார் வந்தாலும் அவர்களுடன் உற்சாகமாக உரையாடி ஓர் உறவையே உருவாக்கி விடுவார். ஒரேயொரு நிபந்தனை..நான் அப்போது வீட்டில் இருக்கக் கூடாது.
திருக்கடவூரில் அவருடைய சதாபிஷேகம் நிகழ்ந்தது. அதுவும் எங்கள் தாத்தாவின் வீட்டில். அதே வீட்டில்தான் அவருடைய திருமணமும் நடந்தது.
SRI MARUTHAVANAN_ALAMLU - SATHABISHEKAM - 070
 SRI MARUTHAVANAN_ALAMLU - SATHABISHEKAM - 115
16 வயது முதல் புகை பிடித்து வந்த அவருக்கு நுரையீரல் புற்று நோய் இருப்பது,2016 நவம்பர் இறுதியில்  கண்டறியப்பட்டது.அவரிடம் விஷயத்தை சொல்வதில்லையென்று குடும்பத்தினர் அனைவரும் முடிவெடுத்தோம்.அவர் உண்மையிலேயே நலமாக இருந்த போதும் சரி,கடுமையாக நோய்வாய்ப் பட்டிருந்த போதும் சரி, ” எப்படி இருக்கிறீர்கள்” என யாராவது கேட்டால் ” கோயிங் ஸ்ட்ராங்” என்றுதான் பதிலளிப்பார்.
பெயர்த்திகள் ஒரு குவளை தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாலும் “தாங்க்யூ” என்பார். யோசித்துப் பார்க்கையில் அவர் வாழ்வில் அதிகம் உச்சரித்த வாசகம் ” தாங்க்யூ வெரிமச்” என்பதாகத்தான் இருக்க வேண்டும்.
அவருக்கு திருமுறைகள் பாராயணம், ஶ்ரீசக்ரபூஜை,தினசரி புஜைகள் இருந்தன. எனினும் சிலஆன்மீகப் பயிற்சிகள் இருந்தால் நல்லதென்று கருதி இருக்கையில் அமர்ந்தபடி செய்யக் கூடிய ஈஷாவின் சில ஆன்மீகப் பயிற்சிகளை அவருக்கு அறிமுகம் செய்திருந்தேன்.
ஆனால் அவர் அவற்றைத் தொடர்ந்து செய்து நான் பார்த்ததில்லை.அவர் இறுதியில் அடிக்கடி மூச்சுத் திணறலால் சிரமப்படும் போது ஓர் எளிய பயிற்சியை நினைவுபடுத்தி,”இதை நீங்கள் செய்யலாமே” என்று மெல்லப் பரிந்துரைத்தேன்.
சிரமத்துடன் மெல்லப் புன்னகைத்து,”I agree with You”  என்றார்.
புற்று நோய்க்குரிய கொடும் வலிகளை அவர் பெரும்பாலும் அனுபவிக்கவேயில்லை என்று சொல்லலாம்.இறையருளும் குருவருளும்
அதற்குரிய சூழலை உருவாக்கியிருந்தன. இதனை மேலும் விவரிப்பது பொருந்தாது.
மூச்சுத் திணறலால் அவதிப்பட்டவரை 2016 டிசம்பர் 23ம் நாள்  மருத்துவமனையில் சேர்த்தோம். அறையில் ஓயாமல் திருமுறைகள் ஒலித்தன. சத்குருவின் திருவுருவப் படமும் வைக்கப்பட்டது. 25ஆம் தேதி தன் இரு மருமகள்களையும் பெயர்த்தியரையும் அழைத்தவர், ” இது எனக்கு ஜோரான வேளை! இனி எனக்கு பிறவி கிடையாது. இந்த ஆன்மா வந்த வேலை முடிந்தது.எல்லோரும் நன்றாக இருங்கள்” என்றதுடன் எங்கள் தாயாரிடம் ” These are my last words” என்றும் சொல்லி இருக்கிறார். பெயர்த்திகளிடம் “நான் போயிட்டு வரேன்டா கண்ணு” என வாஞ்சையுடன் விடைகேட்டவர்  28 ஆம் நாள் அதிகாலை ஒன்றரை மணியளவில் உயிர் நீத்தார்.
அன்று மாலை கோவை நஞ்சுண்டாபுரம் சாலையில் அமைந்திருந்த ஈஷா காயந்த ஸ்தானத்தில் அவரின் பூதவுடலுக்கு இறுதிச் சுடரேற்ற என் சகோதரரும் நானும் குனிந்த போது அப்பா ஏதோ சொல்வது போல் இருந்தது. அநேகமாக ” தாங்க்யூ” என்றுதான் சொல்லியிருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *