கூடு திரும்பிய பறவையின் மனதில் நிரம்பிக்கிடக்கும் ஆகாயம்போல் நிர்மலமாய் இருந்தது இராமனின் திருமுகம். சிரசை அலங்கரித்த மகுடமும் திசைகளை அதிரச்செய்த எக்காளமும் அன்னையர் தூவிய அட்சதைகளும் அந்த நிர்க்குணனைச் சலனப்படுத்தவில்லை. வசிட்ட மகான் வாழ்த்திய மொழிகள் எந்தக் கிளர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. தார்கள் அலங்கரித்த தடந்தோள்களில் மீதமிருந்தது அனுமனின் அணைப்பில் விளைந்த சிலிர்ப்பு. ஒரு குழந்தையின் தீண்டல் மென்மையும் தந்தையின் பரிவும் பக்தனின் பணிவும் கலந்த கலவையாய் அமைந்திருந்தது அனுமனின் தொடுகை. “பொருந்துறப்புல்லுக” என்று தான் அழைத்தபோது இராம நாமத்தை ஓயாது உச்சரித்த அனுமனின் இதழ்கள் ஒரு கணம் உறைந்ததை மனத்திரையில் மீண்டும் கண்ட காகுத்தனின் கண்களில் சின்னதாய் ஒரு மின்னல். தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும்பதம் என்ற இலக்கணத்திற்கு இலக்கியமாய் எழுந்தது. அந்தச் சம்பவம். எல்லோருக்கும் மன நிறைவோடு விடைபெற்றார்கள் என்ற எண்ணமே சொல்ல முடியாத நிறைவையும் நிம்மதியையும் தந்தது இராமனுக்கு.

ஆனந்தவாரிதியில் அமிழ்த்து கிடந்த அயோத்தி, இரவென்னும் தேவதையின் அரவணைப்பில் உறங்கிகொண்டிருந்தது. கார்வண்ண மேனியன் ஆளுகையின் கீழ் அச்சமின்றி வாழும் அதே பாதுகாப்புணர்வை அந்த நீளிருள் பொழுதினிலும் உணர்ந்து குழந்தைகள்போல் தூங்கிக் கொண்டிருந்தார்கள் அயோத்தி மாநகரத்து மக்கள். அந்தபுரம் நோக்கி மிக நிதானமாய் அடியெடுத்து வைத்த அண்ணலின் செவிகளில் இராமபாணமாய்ப் பாய்ந்தது விரக்தியின் பெருமூச்சு. தன் தோளுக்கு மிக அருகில் காதுகளில் உரசி கந்தகமாய்க் காயும் இந்த விரக்திப் பெருமூச்சு யாருடையது? துணுக்குற்றுக் திரும்பினான் இராமன். அருகில் ஆளரவம் இல்லை. அப்பொழுதுதான் மாடத்து விளக்கை அமர்த்தியிருந்தனர் தாதிகள். இருளில் எதுவும் புலப்படவில்லை. சில விநாடிகள்தான். பெருமூச்சின் நதிமூலம் பிடிப்பட்டது இராமனுக்கு. தன் தோள்களை அலங்கரிக்கும் கோதண்டத்திலிருந்தும் அம்பறாத் தூணியிலிருந்துமே அந்தப் பெருமூச்சு கிளம்பியதை உணர்ந்துகொண்டான்.

பரிவும் தயையும் பொங்கப் பொங்க பச்சிளங்குழந்தையைக் கைகளில் ஏந்தும் தாயின் கனிவோடு அவற்றை வருடிக் கொடுத்தான் தசரத புத்திரன். “என்ன குறை உங்களுக்கு? ஏன் இந்தப் பெருமூச்சு?” வாஞ்சையோடு வெளிப்பட்டது அவன் குரல். கோதண்டம் குமுறலோடு பேசத் தொடங்கிற்று. “எல்லோருக்கும் எல்லாம் கொடுத்தீர்கள். எங்களுக்கு என்ன கொடுத்தீர்கள்?” இராமன் பதில் சொல்ல எத்தனிக்கும் முன்பாக வார்த்தைக் கணை  வெடித்து கிளம்பியது. அம்பறாத் தூணியிடமிருந்து.  “சொல்லின் செல்வனை அடிமைகொண்ட செம்மலல்லவா! இவருக்குப் பேசக் கற்றுக் கொடுக்கவா வேண்டும்? சீதைக்குக் கொடுக்கும் முன்னரே என் தோள்களை உங்களுக்கல்லவா தந்தேன் என்று சமத்காரமாகச் சொல்லிவிடுவார்” அம்பின் எள்ளல் வலித்தது அண்ணலுக்கு.

“ஏதேது! என் கரங்களில் மட்டுமே கூட்டணி அமைக்கும் நீங்கள் இப்போது எனக்கெதிராக ஒன்று சேர்ந்துவிட்டீர்கள் போலிருக்கிறதே…” இள நகையோடு பேசி இறுக்கத்தைத் தளர்த்த முயன்றான் இராமன்.

“இராவண வதத்திற்க்குத் துணை நின்ற எல்லோருக்கும் அள்ளியள்ளிக் கொடுத்த நீ, எங்களுக்கு என்ன கொடுத்தாய்? அரக்கர்தம் குருதியையும்
அவச்சொற்களையும் சேர்த்துச் சுமக்கும் சாபம் அல்லவா கொடுத்தாய்.” குளிர்
நிலவாய் கனிந்திருந்த அண்ணலின் திருமுகத்தில் கவலைக் குறிகள். “என்ன
சொல்கிறீர்கள்? வாலிவதம் குறித்து வழக்காடப் போகிறீர்களா? அல்லது
இராவணனைக் கொன்றது உங்களுக்குச் சம்மதமில்லையா?” சீறலில் நனைந்து வந்தது வள்ளலின் வினா.

“இறைவனே, இராவண வதம் உன் அவதார நோக்கம் மட்டும்தானா? எங்கள்
இருப்புக்கும் அதுவே நோக்கம். வாலி வதம் குறித்த வழக்குதான் காலகாலமும்
நிகழபோகிறதே… எங்கள் வருத்தம் அவை குறித்தல்ல. சொல்லப்போனால்
கிட்கிந்தையில் நீ கொடுத்த காயம், ஆராண்ய வாசம் முடிந்து அயோத்தி வந்த
பிறகும் ஆறாத இரணமாய் எங்களை அல்லல்படுத்துகிறது.”

சிவதனுசு போல் ‘சடசட’ வென்று நெறிபட்டன சீதை கேள்வனின் புருவங்கள்.
“கிட்கிந்தையில் விளைந்த காயமா? வாலி வதமும் அல்ல என்கிறீர்கள்  . . . வேறென்ன?”

“நீ மறந்திருப்பாய் என்று எங்களுக்கு தெரியும். வாலி வதத்திற்கு நீ புறப்படும் முன்பாக எதேச்சையாக நிகழ்வதுபோல் ஒரு நாடகத்தை அனுமனும்
சுக்ரீவனும் அரங்கேற்றினார்களே… நினைவிருக்கிறதா ? அறிந்தும்
அறியாததுபோல் நீ இருக்க சூழ்நிலைக் கைதிகளாய் நானும் உன் கணைகளும் அந்தநாடகத்தில் பங்கேற்றோமே… மறந்து விட்டாயா? உன் வில்வன்மை விளங்காத சுக்ரவன் தன் னுடைய ஆறுதலுக்காக மராமரங்களை எய்யச் சொன்னானே இராமா?”

அடுத்தவினாடி இராமனின் மனக்கண்ணில் தெரிந்தன மலைபோல் எழுந்த அந்தமரங்கள்;ஆகாயம் முட்டி அதற்கு அப்பாலும் சென்ற அதன் கிளைகள்வேதங்களைப்போல விரிந்து கிடந்தன. கோள்களும் விண்மீன்களும் அந்த மரங்களின் கிளைகளில் தொங்கும் மலர்களாகவும் கனிகளாகவும் கண்களுக்கு தெரிந்தன. ஊழி பெயர்ந்தாலும் குலையாதவையாய் உலகைத் தாங்கும் ஏழு மலைகளான கயிலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், கந்தமாதனம், ஆகியவைபோல் அல்லவா அவை நின்றன! அந்த மரங்களின் காய் கனிகள் விழ நேர்ந்தால் ஒருபோதும்  அவை பூமியில்
விழுந்ததில்லை. உதிர்ந்த மறுகணமே தம் கிளைகளை உரசிக்கொண்டிருக்கும் ஆகாய கங்கையில் கலந்து சமுத்திரத்தில் சேர்ந்துவிடும். அந்த மராமரங்களின் கிளைகளில் இளைப்பாறுவதால் சூரியனின் புரவிகள் சோர்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன என்றும் அந்த மரக்கிளைகள் உரசித்தான் வெண்ணிலாவில் தழும்பு விளைந்ததென்றும் மராமரங்களின் மகத்துவததைக் கேள்வியுற்றிருக்கிறான் இராமன்.

விசுவரூபம் எடுத்த வாமனனின் ஏழு வடிவங்களாய் எழுந்த நின்றனவே அந்த
மரங்கள். வாலிக்கும் சுக்ரீவனுக்கும் விளைந்த பகையுணர்ச்சிபோல் முற்றிச்
செழித்த அந்த மராமரங்களின் வேர்கள் ஒவ்வொன்றும் ஐந்து தலைகளையும்
உயர்த்திய ஆதிசேடனை நினைவுறுத்தி நின்றன. இந்த ஏழு மரங்களில் ஏதேனும் ஒன்றை எய்தால் போதும் என்று சுக்ரீவன் வேண்டியது இராமனைச் சீண்டியது. கோதண்டத்தை வளைத்த மாத்திரத்தில் எழுந்த பேரோசை கேட்டு, கால் பிடரிபட கதறி ஓடின வானரங்கள். எண்திசை யானைகளும் மயங்கின. கல்ப காலத்தின்  இறுதி நேர்ந்ததென அமரர்கள் அஞ்சினர கோதண்டத்திலிருந்து  கிளம்பிய கணை ஒற்றை மரத்தையா ஊடுருவியது? ஏழு மரங்களையும் துளைத்து ஏழு உலகங்களையும் துளைத்து மீண்டது. எழு என்னும் எண்ணிக்கை மேல் இராமன் கடும் சினம்கொண்டானோ என்று ஏழு கடல்களும் ஏழு மலைகளும் ஏழு ரிஷிமார்களும் ஏழுகன்னியரும் சூரியனின் தேரில் பூட்டிய ஏழு புரவிகளும் கலங்கி நிற்க இராகவன் பகழி மீண்டது.

பழைய நினைவுகளில் லயித்துக் கிடந்த இராமன் சட்டென்று மீண்டான்.”எப்போதும் நீ இப்படித்தான்! மிதிலையில் மன்னன் பெற்ற வரமாய்க் கிடந்தசிவதனுசை வளைக்கத்தான் சொன்னார்கள். நீயோ அதனை முறித்தாய். உன் வரம்பிலா ஆற்றலை விளங்கிக்கொள்ளும் விவரமில்லாத சுக்ரீவனின் வேண்டுகோளுக்காக அத்தனை பெரிய மரங்களைக் கணைகொண்டு துளைத்தாயே… இது என்ன அறம்?வாலியையும் சேர்த்து நீ அம்பு தொடுத்த நிராயுதபாணிகளின்  எண்ணிக்கைஎவ்வளவு தெரியுமா? எட்டு!”

நிலைகுலைந்து போனான் இராமன். நினைத்தும் பார்க்காத தாக்குதல்.
கருதியேபாராத குற்றச்சாட்டு. அம்பறாத்தூணியின் அடுத்த பொறுமல்
பாய்ந்த்தது. “எத்தனை கம்பீரமான மரங்கள் இராமா! என்ன ஒரு பிரம்மாண்டம்!  தாடகையின் மீது அம்பெய்யச் சொன்ன தவமுனிவனோடு தர்க்கம் செய்த நீ, தாவரங்கள் மேல் கணை தொடுக்கத் தயங்கவேயில்லையே! இது என்ன நியாயம்? எங்களை எய்ததென்னவோ நீதான்! எய்தாப் பழி எய்தியவர்கள் நாங்கள் அல்லவோ?

ஒன்று தெரியுமா இராமா? நீ இட்ட கட்டளையை சட்டென்று முடித்தே பழகிய
கணைக்கு எழாவது மரத்தை துளைத்து வெளிவந்தபோதுதான் நடந்த சம்பவத்தின் விபரீதம் புரிந்த்து. வாலி மேல் எய்தபோது வேலை நிறுத்தத்தின் அடையாளமாய் அவன் மார்பைத் துளைக்காமல் மையத்திலேயே இருந்து எங்கள் எதிர்ப்பைக் காட்டினோமே அது மராமரங்களை எய்ததற்கும் சேர்த்துதான்.”

கண்கள் இருண்டன இராமனுக்கு, கால்கள் தள்ளாடின. பிடிமானத்துக்குப்
பரபரத்தன கரங்கள். வியர்வையில் குளித்தது வண்ணத் திருமேனி. எவ்வளவு பெரிய பாவமது. என் வலிமையை ஓர் எளிய குரங்குக்கு நிரூபிக்க மராமரங்களா இலக்கு! மனம் குமைந்து மறுகினான் கோசலை மைந்தன்.

கோதண்டம் கூறிற்று: “இறைவனே எம்மை ஆளுடைய தலைவனே! உம் திருஉள்ளத்தைக் காயம் செய்தமைக்கு மன்னித்தருள்க. ஆயினும் இது எங்கள் கடமை. மராமரங்கள் மீது நீ தொடுத்த அம்பு சப்தஜாதி. அந்த ஏழு துளைகளே நாதஸ்வரம் என்னும் இசைக்கருவியாய் இனி தோன்றும். அந்தக் கருவியில் எழும் இன்னிசை மராமரங்களின் காயங்களுக்கு மருந்தாகும். அவற்றுக்குத் துணை வாத்தியமாய் அதிரும் மத்தளத்தின் “தத்திமிதோம் தத்திமிதோம்” என்கிற ஓசை “மன்னித்தோம் மன்னித்தோம்” என்று மரங்கள் சொல்வதாய் உனக்குக் கேட்கும். மற்றவர்களுக்கு அது மங்கல வாத்தியம். உனக்கோ அந்த மராமரங்களின் மன்னிப்பு கீதம். தம்மைப் படைத்த கடவுளே தம்மை துளைத்தபோதிலும் மராமரங்கள் உனக்கு அந்த வாத்தியங்கள் வழியே தங்களை மீண்டும் அர்ப்பணிக்கும்.” பேசி முடித்தன,வில்லும் அம்பும். உள்மனக் காயம் ஆறாது மலர் தூவிய மஞ்சத்தில் இரவெல்லாம் தவித்தான் இரகு குலத்திலகன். பொழுது புலர்வதற்காக நிமித்தங்கள் தோன்றின. உறக்கம்  துறந்த உத்தமனின் கண்களைப்போல் செக்கச் சிவந்த பிழம்பாக
கிழக்கேஉதித்தான் கதிரவன்.

(ரிஷபாரூடன் என்ற புனைபெயரில், 2011 மார்ச் ரசனை இதழில் எழுதியது)

Comments

  1. மிக அற்புதம் ……..
    என்ன அமர்க்கள போர்க்கள சிந்தனை
    கர்ணனை பற்றிய படங்களை தேடும் போது பார்த்த படைப்புகள்
    பாக்கியவான் ஆனேன் உங்களின் படைப்புகளை படித்ததினால்
    அன்பன்
    ராஜகோபாலன் ரெகுபதி

  2. அருமையான ஒரு சிந்தனை.
    மயிர் கூச்செறியும் எழுத்து லாவகம்.
    மிகவும் ருசித்து ரசித்துப் படித்து மகிழ்ந்தேன் ஐயா.
    நன்றி.
    வணங்கி மகிழ்கிறேன்.
    வாழ்க வளமுடன்.
    ஸ்ரீனிவாசன்.
    பெர்த்
    ஆஸ்திரேலியா.

  3. அன்புள்ள மரபின் மைந்தன், இராமன் ஏவிய கனை திரும்பிவந்து கடைசியில் அவன் மனதையே குத்திக் காண்பிப்பதான கற்பனை நன்றாக இருந்தது.

  4. மராமரங்களை துளைத்த கதையை நீங்கள் சொன்னவிதம் என் மனத்தையும் துளைத்து நினைவின் மாடத்தில் ஒரு நீங்கா இடம் பெற்றுவிட்டது. ஜெ.மோ குழுமத்தில் இதைப் பகிர்ந்ததற்கு நன்றி! ஏழு வருடங்களுக்கு முன் நாம் கோவையில் சந்தித்திருக்கிறோம் முத்தையா சார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *