எல்லோரின் மனவெளிகளிலும் விரிக்கப்பட்டிருந்த மானசீகக் கம்பளங்கள்,
அற்புதரின் பாதங்கள் பதியும் பொற்கணத்திற்காகக் காத்திருந்தன.பாதங்கள் பதியும் அந்தக் கணத்திலேயே அற்புதங்கள் நிகழுமென்ற எதிர்பார்ப்பும் சுடர்விட்டுக் கொண்டிருந்தது.வந்து சேர்ந்த அற்புதரின் பாதங்கள் பூமியின் ஸ்பரிசத்திற்குப் பழகியவை. உலகுக்குத் தர வேண்டிய வரங்கலையெல்லாம் தாவரங்களிலிருந்தும் செம்மண்ணிலிருந்துமே அவருடைய பாதங்கள் பெற்றுக் கொண்டிருந்தன.
மனவெளியில் மண்ணின் இயல்புத்தன்மையும் ஈரத்தன்மையும் பரவியிருக்கும் என்ற நம்பிக்கையில் பக்தர்களின் மானசீகக் கம்பளங்களை மடிக்கத் தொடங்கினார் அற்புதர். ஆங்காங்கே இருந்த
அவநம்பிக்கைப் பள்ளங்கள் வெளிப்பட்டதில் பக்தர்கள் அதிர்ந்து நிற்க
அந்தப் பள்ளங்களில் மண்ணள்ளிப் போட்டார் அற்புதர்.
மிகச்சாதாரணராய் இருப்பதைக் காட்டிலும் ஓர் அற்புதம்
கிடையாதெனபது அந்த அற்புதரின் கோட்பாடு.அவரின் கைபட்டு தண்ணீர்
அமுதமாகுமென்று தங்கள் கோப்பைகளை மக்கள் நிரப்பி வைத்திருந்தனர்..
அவருக்கு தண்ணீரைத் தண்ணீராகவே பார்க்கத் தெரிந்திருந்தது.”ஒன்றை அதன் தன்மையுடனே பார்க்கவும் ஏற்கவும் தெரிந்தால் அதனினும் அற்புதம் வேறில்லை” என்றார் அற்புதர்.
அந்த வாசகம் புரியாமலேயே பரவசப் பட்டுக் கொண்டனர் அவர்தம் பக்தர்கள்.  தான் உணர்ந்ததை பிறருக்கு உணர்விக்கும் ஒற்றை நிரலோடு பூமிப்பந்தை சுற்றிக்கொண்டிருக்கும் அற்புதர் எதிர்பார்த்ததெல்லாம் சாதாரண மனிதர்களின் சாதாரணப் புரிதல்களையே!!
ஓர் அற்புதர் சாதாரணராக இருந்தால் சாதாரணங்கள் எல்லாமே அற்புதங்கள்தான் என்னும் காற்றின் உபதேசத்திற்குத் தலையாட்டிய
மலர்களின் இதழ்களில் அரும்பியிருந்த புன்னகையைப் புரிந்து கொள்ளாமலேயே அற்புதரை அர்ச்சிக்க அவற்றைப் பறித்து வந்தனர்
பக்தர்கள்.
பறிக்கப்பட்ட மலர்களைப் பார்த்த மாத்திரத்தில் அற்புதரின் சந்தோஷம்
சருகானது.”காம்புகள் கிள்ளப்பட்ட மலர் செடியுடன் மட்டுமா தொடர்பற்றுப் போகிறது?வேரோடும் மண்ணோடும் தொடர்பற்றுப் போகிறது.செடியில் இருக்கும்வரை சிரிக்கிற மலர் கடவுளின் பாதங்களில் வைத்தாலும் களையிழந்து வதங்குகிறது. அப்பொதெல்லாம் கடவுள் குற்ற
உணர்வில் தலை கவிழ்கிறார்.கடவுள் அதிகம் காயப்படுவது அர்ச்சனைப் பூக்கள்ளால்தான் என்றார் அற்புதர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *