ஆகாயத்தைக் குறிவைப்பவர்களில் அற்புதரும் ஒருவர். ஆனால் அவர் குறிவைப்பது, தான் ஏற்கெனவே வென்றுவிட்ட ஆகாயத்தை. நெற்றிப் புருவங்கள் நடுவே வந்து நின்ற வெட்டவெளியின் விரிவை வெளியிலும் காண்பதால் அவர்பார்க்கும் ஆகாயம், அவருடைய ஆகாயம்.

ஆனால் ஆகாயத்தைக் குறிவைத்து அவர் எய்யும் அம்புகள் எதையும் கிழிக்கும் அம்புகளல்ல.கிழிந்த ஆகாயத்தைத் தைக்கும் அம்புகள்.பூமியை நாணாக்கி மேல்நோக்கி மெல்ல மெல்ல எழும் அம்புகளை அவர் எய்த வண்ணம் இருக்கிறார்.

அற்புதரின் படைவீரர்கள் அல்லும்பகலும் அந்த அம்புகளை எய்தவண்ணம் இருக்கிறார்கள். அகஆகாயத்தின் ஆனந்தம் உணர்ந்த அற்புதர் புற ஆகாயத்தின்காயங்களை ஆற்றப் பச்சைப் பசுங்கணைகளை விண்நோக்கி விடுத்தவண்ணம் இருக்கிறார்.

“அம்பு காயத்தை ஆற்றுமா?”என்றொரு விமர்சகர் எழுப்பிய கேள்விக்கு அற்புதரின் படையிலிருந்தொருவர் பதில்சொன்னார். “அன்பு காயத்தை ஆக்குமென்றால் அம்பு காயத்தை ஆற்றாதா என்ன?”

“ஆகாயம் நோக்கிய ஆன்மீகத்தவம், வான்கருணையை வரவழைப்பது போல் ஆகாயம் நோக்கிய தாவரத்தவம், வான்மழையை வரவழைக்கும்” என்றார் அற்புதர். விரல் சொடுக்கியதும் பல இலட்சம் பசிய அம்புகள் வான்நோக்கி எழுந்ததை உலகின் வெற்றி ஆவணங்கள் சாதனை என்று சொன்ன போதுஅற்புதர் சொன்னார்,

“இது சாதனையா என்று தெரியவில்லை. அப்படியிருந்தால் ஒரு வேண்டுகோள். யாரேனும் ஒருவர் இந்த சாதனையை முறியடித்து இந்தசாதனையிலிருந்து மீண்டுவர எனக்கு உதவுங்கள்”.

“அப்படியானால் இது சாதனையில்லையா?” அதிர்ச்சியுடன் கேட்டவர்களுக்குஅற்புதர் தந்த பதில் இது. “இந்த அம்புகள் நம் அகிம்சைச் சகோதரர்கள். நம்வெளிமூச்சு இவர்களின் சுவாசம். அவர்களின் வெளிமூச்சு நம் சுவாசம். இவர்களுடன் நமக்கிருப்பது இரத்த பந்தமல்ல. சுவாச பந்தம்”

அற்புதரின் அமைதிப்படை தொடுக்கும் பசிய அம்புகளின் பாய்ச்சலைப் பார்த்த உலகம் ஆகாயம் நோக்கிய இந்த ஆக்கபூர்வமான அம்புகள், கந்தலாகிவிட்ட ஆகாயத்தின் ஆடையைத் தைக்கும் ஊசிகள் என்பதை உணர்ந்தார்கள்.

அற்புதர்பால் கொண்ட அன்பால், அவரை “மரம் நடும் சாமி’என்று மற்றவர்கள்சொன்னபோது, ஆகாயத்தைக் குறிவைத்துக் கொண்டிருந்த அற்புதர்அவசரமாய்ச் சொன்னார், “நான் வந்தது மரங்களை வளர்க்க அல்ல..உயிர்களை மலர்த்த.. இது காலத்தின் தேவைக்குக் கைகொடுக்கும் வேலை. உலகைக்காக்க ஆகாயத்தின் ஓசோனை உறுதிசெய்ய என்னில் அங்கமாய் இருக்கும் பசுமைக்கரங்களால் மரங்கள் வளரும். ஆனால் என் சொந்த நந்தவனத்தில் காற்றின் அமுதத்தை உள்வாங்கி உயிரென்னும் பூக்கள் மலரும். உயிர்கள் மலர்த்துவதே என் வேலை. மரங்கள் வளர்ப்பது என் லீலை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *