அற்புதரின் இரவுகள் ஏகாந்தமானவை.அவரின் அறிதுயில் பொழுதுகளில் அகலத் திறந்த அவரின் ஆன்மவாசல்வழி தங்களுக்கானசொர்க்கவாசல் தென்படுகின்றதா என்று வடிவிலாத் துளிகள் வந்து நிற்பதுண்டு.

பெருவழிக்கான பாதை திறக்க நெடுங்காலமாய் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்கள் மீது அற்புதரின் கண்ணோக்கம் படும்போதே அவர்களின் பயணப் பொழுது முடிவாகிவிடும்.

கையிலிருக்கும் மூட்டை முடிச்சுகளைக் களவு கொடுப்பதே அந்தப்
பயணத்துக்கான அடிப்படைத் தகுதி என்றறிந்தவர்கள் அற்புதர் அவற்றைக் களவாடும் கணத்திற்கென்று ஆவலுடன் காத்திருப்பார்கள்.நெடுங்காலமாய் சுமக்கும் அந்த மூட்டை முடிச்சுகளை அவர்களிடமிருந்து தனியே பிரித்தறியும் அற்புதமே அற்புதருக்குத்தான் சாத்தியம். தங்கள் மூட்டைகளைத் தங்களிடமிருந்து பிரிக்கவும்,தங்கள் முன்னிலையிலேயே அவற்றை எரிக்கவும் அவர்கள் அற்புதரையே பெரிதும் நம்பியிருப்பார்கள்.

கைகளில் இருக்கும் மூட்டைகளை மட்டுமின்றி அவர்கள் பெயரில் பதிவான சரக்குகளையும் கைப்பற்றி எரிப்பதில் கைதேர்ந்தவர்அற்புதர். எனவே அவர்களின் பயணிகள் தங்களின் உடமைகள் பத்திரமாய் களவு போயிருக்கும் என்ற நிம்மதியுடன் காணாமல்போவார்கள்.

பலரும் பயணம் போவதாய் நினைத்துக் கொண்டு ரங்கராட்டினத்தில்
ஏறிவிட்டு தொடங்கிய இடத்திற்கே திரும்பத் திரும்ப வந்து கொண்டும் வழியெங்கும் கதறிக் கொண்டும் இருக்கும்போது, அற்புதரின் வாகனத்தில் ஏறியவர்களால் விரும்பிய இடத்திற்கு விரைந்து செல்ல முடிந்தது. ஒருபோதும் திரும்பத் தேவையில்லாதஉல்லாசப் பயணம் அது.

ஒருதிசைக்கும் மறுதிசைக்குமான பயணமா?ஒருகரைக்கும் மறுகரைக்குமான பயணமா? என்றெல்லாம் விசாரித்துக் கொண்டிருப்பவர்கள் வந்துசேரக் காலம் பிடிக்கும் என்பதை அற்புதர் அறிவார். விரும்பி வரும் பயணிகளே காத்திருப்போர் பட்டியலில்இருக்க ஒருசில பயணிகளுக்காக அற்புதர் காத்திருப்பதும் உண்டு.

செல்ல வேண்டிய பாதையாகவும் சென்று செலுத்தும் வாகனமாகவும் சேர வேண்டிய ஷேத்திரமாகவும் தானேயானதை ஒருபோதும் அற்புதர் அறிவித்ததேயில்லை.செல்பவர்கள் கண்டதில்லை.சென்றவர்கள் சொன்னதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *