தகுதிகளைச் சொல்லித்தான் பதவிகளையோ சலுகைகளையோ பெறமுடியும்.மணமகள் தேவை விளம்பரங்களில் கூட மாப்பிள்ளையின் மெய்கீர்த்திகளைப் பட்டியலிட்டால்தான் கல்யாண யோகம் கைகூடுகிறது.

ஆனால் தன் தகுதியின்மைகளைப் பட்டியலிடுகிறார் மாணிக்கவாசகர். அவருக்கு சிவபெருமான் வேண்டுமாம்.

“யானே பொய், என் நெஞ்சும் பொய்,என் அன்பும் பொய்”
(இத்தனை தகுதியின்மைகளை வைத்துக் கொண்டு எந்த நம்பிக்கையில் சிவனைப் பெற சிந்திக்கிறேன் தெரியுமா)

“ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே” என்கிறார் மாணிக்கவாசகர்.

திருமுறைச் செல்வர். மு.கணபதி அவர்கள் அருகில் ஒரு கூட்டத்தில் அமர்ந்திருந்தேன்.அவர் திருமுறைகளில் தோய்ந்த அறிஞர்.மேடையில் திருவாசகம் பேசிக் கொண்டிருந்த அறிஞரும் சைவத்தில் மிகத் தேர்ந்தவர். கூட்டம் முடிந்ததும் மு.கணபதி  அவர்களிடம் பேசிய அந்த அறிஞரைப் பற்றி பாராட்டிச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு,கணபதி அய்யா என்னிடம் சொன்னார், “சார்! நான் சொல்றேன்னு வருத்தப்படாதீங்க. ரொம்ப நல்லாத்தான் பேசினார்.ஆனா, திருவாசகம் பேசறபோது ஒருத்தனுக்கு கண்ணீர் வரலைன்னா அவன் அயோக்கியன் னு அர்த்தம்”

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் ஆண்டு தோறும் ஜனவரி 1 முதல் நிகழும் “எப்போ வருவாரோ” தொடர் உரைகள் வரிசையில் இன்று மாலை 6 மணிக்கு “மாணிக்கவாசகர்” குறித்து உரை நிகழ்த்துகிறேன்.
கோவை ராம்நகரில் உள்ள கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் கலையரங்கில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

நான் அயோக்கியனா இல்லையா என்று அறிந்து கொள்ள உங்களைப்போலவே நானும் ஆவலாய் இருக்கிறேன்…..அவசியம் வாருங்கள் நண்பர்களே!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *