குதிரைகள் லாயத்தில் கூடும்-ஒரு
கணத்திலே நரியாக மாறும்
புதிரைப் போட்டவன் சிவனே -இதன்
பதிலும் தெரிந்தவன் அவனே

வித்துகள் நடுவோம் வயலில் -அவை
வளர்வதும் சிதைவதும் மழையில்
எத்தனை எத்தனை பார்த்தோம்-அட
இருந்தும் வாழ்ந்திடக் கேட்டோம்

மணநாள் வேள்வியும் புகைதான் -அந்த
மயான வேள்வியும் புகைதான்
குணமும் பணமும் பொய்யே-அட
கண்கள் கசக்குதல் மெய்யே

எத்தனை உயிர்கள் படைப்பான் -அவன்
எத்தனை ஓலைகள் கிழிப்பான்
பித்தன் என்றதும் சரிதான் -அவன்
பிழைகள் எல்லாமே சரிதான்

கூட்டல்தெரியும் நமக்கு-அதில்
கழித்தல் அவனது கணக்கு
ஏட்டில் எழுதி மறைத்தான்- அதை
மறைத்ததில் தானவன் ஜெயித்தான்

வருவதும் போவதும் கனவு-இதில்
விதம்விதமாய் பல நினைவு
தருவதும் பறிப்பதும் அவனே-இந்த
தர்க்கத்தின் பதிலும் சிவனே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *