குணச்சித்திர வேடம் என்று சொன்ன மாத்திரத்தில் நம் நினைவுக்கு வருகிற முகங்களில் நடிகை சுஜாதாவின் முகமும் ஒன்று. தளும்பாத உணர்ச்சிகளும் தரமான நடிப்பும் அவருடைய பலங்கள். அளந்து ஊற்றின மாதிரி அளவான முகபாவங்களைக் காட்டக்கூடியவர் சுஜாதா.
காதல் காட்சிகளில் கூட நாணமோ, மோகமோ பொங்கி வழிந்ததில்லை. அதீத  முகபாவனைகளால் சில  நடிகைகள் படுத்தியெடுப்பார்கள். அப்படியொரு
நடிகை பற்றி ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் திரு கிருஷ்ணன்
 ஒருமுறை   சொன்னார், “அந்த அம்மா பாட்டுப் பாடி நடிச்சா கண்ணை
மூடீட்டு பார்க்கலாம் சார்”. மிகையம்சம் இல்லாத மிதமான நடிப்பு சுஜாதாவின் சிறப்பம்சம்.
நிறைய பாடல்களை வானொலியில் கேட்டு நமக்குள் சில கற்பனைகள்
வரும். அந்தக் கற்பனைகளுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத காட்சி
அமைப்பைக் கண்டால்  “சப்” பென்று ஆகிவிடும். அத்தகைய பாடல்களுக்கு
உதாரணம், “உன்னையறிந்தால்-நீ உன்னையறிந்தால்”
.அதேபோல வானொலியில் பலமுறை கேட்டுவிட்டு காட்சியாகப் பார்த்தபோது சுஜாதா நடித்த பல பாடல்காட்சிகள் நம் கற்பனையை விடவும் பலமடங்கு பலம் பொருந்தியவையாக அமைந்திருந்தது பெரிய  ஆறுதல். சிவாஜி- சுஜாதா ஜோடியாக நடித்த பாடல் ஒன்று. காதலும் காமமும் ஒருசேர வெளிப்படும் காட்சியமைப்பு  படத்தின் பெயர் நினைவிலில்லை. “அந்தப்புரத்தில் ஒரு மகராணி.அவள் அன்புக்கரத்தில் ஒரு மஹராஹன். கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள் காமன் திருச்சபைக்கு வழிகேட்டாள்” என்பது பல்லவி.இது வரையில் ஆண்குரல்.
காமம் மீதூறி கண்சிவந்த நிலையில் காதலி இருப்பாள் என்று வர்ணனை வந்த பிறகு நாயகி பாட வேண்டும். “சாமந்திப் பூக்கள் மலர்ந்தன-இருசந்தனத் தேர்கள் அசைந்தன” என்ற வரிகளில்  “சாமந்திப் பூக்கள் மலர்ந்தன” என்ற வரிதான்  நாயகியினுடையது.. நிலைகுத்திய  பார்வையில், காமமும்  காதலும் மின்னிப் போகும்  அற்புதமான முகபாவனையை வெளிப்படுத்தியிருப்பார் சுஜாதா.”ஆசை கனிந்துவர அவன் பார்த்தான், அன்னம் தலைகுனிந்து நிலம் பார்த்தாள்” என்ற வரியில் மூன்றாவது  மின்னலாய்  நாணமும் சேர்ந்து கொள்ளும்.
ஏறக்குறைய இதேபோல காதலும் காமமும் கலந்த பாடல்காட்சி, கடல்
மீன்கள் படத்தில் வரும் “தாலாட்டுதே வானம்” என்ற பாடல். அதிலேயும்
உணர்ச்சியின் உக்கிரத்தை தளும்பாத முகபாவனைகளில் உணர்த்தியிருப்பார்  சுஜாதா. “மேல்வானத்தில் ஒரு நட்சத் திரம்-கீழ்வானத்தில் ஒரு பெண்சித்திரம்” போன்ற கச்சிதமான வரிகள் அதில்அமைந்திருக்கும்.
விஜயகுமாருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருப்பார். அந்தப் படத்தின் பெயரும் நினைவிலில்லை. எல்லோரும் சேர்ந்து தம்பதிகளின்  மணநாளைக்  கொண்டாடும் காட்சியில் நாயகி பாடுவதாக ஒரு பாடல்.”ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள் பூமியில் பிறந்திட வேண்டுகிறேன். அத்தனை பிறப்பிலும் இத்தனை உறவும் அருகினில் இருந்திட வேண்டுகிறேன்” என்பது பல்லவி.
இந்தப் படத்தில் மனநிலை குன்றிய மைத்துனனாக ஒய்.ஜி.மகேந்திரன்
இயல்பாக நடித்திருப்பார். அவரைப்பற்றிய வரிகள், “மைத்துனன் நம்பி
மதுசூதன் பைத்தியம் அல்ல பாலகன்தான்”. இதில் “பாலகன்தான்” என்ற
சொல்வரும்போது கண்களில் கனிவும் தாய்மையும் பளிச்சிட்டுப்
போகும் . கதையைக் கண்களால் சொன்னவர் சுஜாதா.
முதல் படத்திலேயே முழுத்திறமையையும் நிரூபிக்கிற வாய்ப்பு மிகச்சில நடிகைகளுக்குத்தான் அமையும்.அப்படி சுஜாதாவுக்கு அமைந்த படம்,அவள் ஒரு தொடர்கதை. விதம்விதமான் வாழ்க்கைச் சூழல்களை எதிர்கொள்ளும் அருமையான  பாத்திரம் அது.எம்.எஸ்.பெருமாள் அவர்களின் கதை. அதன்பிறகு நாயகியை மையப்படுத்தி வெளிவந்த பாத்திரங்கள் பலவற்றிலும் ஒளிவீசினார் சுஜாதா.
அகலின் அடியில் படரும் இருட்டாய் அவருடைய ஆரம்பகால வாழ்வில்
ஆயிரம் சோதனைகள். அவருடைய இளமை நாட்கள் வலியிலும் வேதனையிலும் கழிந்திருக்கின்றன. அவருடைய மிக நெருங்கிய உறவினர்
ஒருவர், மாற்றுத் திறனாளி. அடுத்த அறையில் இளம்பெண்ணாகிய
சுஜாதா இருப்பதையும் பொருட்படுத்தாமல் முறைகேடான
 நடவடிக்கைகளில்  ஈடுபடுவாராம். தன் நம்பிக்கைக்குரிய சக நடிகர்
ஒருவரிடம், “கைவண்டி இழுக்கிற ஒருவருக்குக் கூட என்னைக் கல்யாணம்
செய்து வைத்துவிடுங்கள்” என்று சுஜாதா பலமுறை கண்ணீர் வடித்ததாக
அந்த நடிகர் என்னிடம் சொல்லியிருக்கிறார்.
 ஆயிரம் வலிகளுக்கு நடுவிலும் ஒளிவீசிய சுஜாதா ,ஒரு துருவ நட்சத்திரம். நோயுற்ற நிலையில் கடந்த ஐந்தாண்டுகளாய் திரையுலகிலிருந்து விலகியே இருந்தார். 58 வயதில் மரணமடைந்தாலும் ரசிகர்களின் மனத்திரையில் அவர் ஒருதொடர்கதை.என் அபிமான நடிகை திருமதி சுஜாதா அவர்களுக்கு என் அஞ்சலி.

Comments

  1. இன்று (8-4-2011) நீங்கள் ISHA வில் இருந்திர்களே. எதோ புதிய PROJECT என்று நினைகிறேன்

  2. project எதுவுமில்லை.நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் வர விரும்புகிற நேரம் ஏற்படுத்திக் கொண்டாவது வர விரும்புகிற
    இடம் அது

  3. சுஜாதாவின் முகத்தினை கண்முன்னே நிறுத்தும் விதமாக இருக்கின்றது.
    இதில் விதியையும் சேர்த்திருக்கலாம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *