கைரேகை படிந்த கல் கவிதை நூலின் ஆசிரியர் யாழி,அவ்வப்போது குறுஞ்செய்திகளாய் சில கவிதைகள் அனுப்புவார். பெரும்பாலும் அவருடைய கவிதைகள்.மற்றபடி அவர் ரசித்த வரிகள்-யார் எழுதினார் என்ற குறிப்புடன். எனவே அவர் அனுப்பும் குறுஞ்செய்திகளை, “இது யார் கவிதை”என்று அறிந்து கொள்ள முதலில் கீழே பார்ப்பேன். இன்று காலை அவர் அனுப்பிய குறுஞ்செய்தியில் க.முருகனுக்கு கண்ணீர் அஞ்சலி என்ற குறிப்பும் இருந்தது.யாழியை அழைத்து , க.முருகன்  யாரென்று கேட்டேன். திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞராம். குறுஞ்செய்தியில் கவிதை அனுப்பும் வட்டத்தைச் சேர்ந்தவராம். அந்தஇளைஞரின் தொழில் ஆடுமேய்த்தல். அவர் நேற்று (ஏப்ரல் 30) திண்டுக்கல்லில்இடிதாக்கி இறந்ததாக யாழி தெரிவித்தார். க.முருகனுக்கு அஞ்சலியாக யாழி எழுதியிருந்த வரிகள்….

“திக்கற்றுத் தவிக்கின்றன
நல்மேய்ப்பனைத் தொலைத்த
ஆடுகளும்….”

யாழியின் குறுஞ்செய்தி வந்தடைந்தபோது, தஞ்சாவூரிலிருந்து திரும்பும் வழியில் கரூரில் நின்றிருந்தேன். முதுபெரும் புலவர் திரு. லியோ இராமலிங்கம் மறைவுக்காக தஞ்சாவூர் சென்றிருந்தேன்.என் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் வெற்றித் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளருமான தஞ்சை செழியன் அவர்களின் தந்தையார் புலவர் லியோ ராமலிங்கம். நாவலர் நெடுஞ்செழியன் மீதுள்ள மாறாப்பற்றால்,தன் மூத்த மகனுக்கு நெடுஞ்செழியன் என்றும், இளைய மகனுக்கு செழியன் என்றும் பெயர் வைத்தவர் அவர். எழுத்து பேச்சு விழாக்கள்அமைப்பு என்று இறுதி வரையில் இயங்கிய அவரின் பெயர் இராமலிங்கம்தான். பெயருக்கு முன்னால் லியோ என்று அவர் போட்டுக்கொள்ளத் தொடங்கியதற்குக் காரணம்,அவர் ஒருதலையாய்க் காதலித்த பெண்ணின் பெயர் லியோ. அவருடன் தமிழ்படித்த காலத்திலேயே  தன் காதலை வெளிப்படுத்தியபோதும் லியோ மறுத்துவிட்டார். காரணம்,லியோ ஒரு கன்னியாஸ்திரி!!

துறவு வேண்டாம் உறவு வேண்டும் என்று வலியுறுத்தி,இலக்கிய மேற்கோள்களுடன் பக்கம் பக்கமாய் இராமலிங்கம் லியோ அவர்களுக்குஎழுதிய கடிதங்களும், அவரது காதல் போராட்ட அனுபவங்களும் நூலாகவெளிவந்துள்ளன.தன் மார்க்கத்தில் தீராப் பிடிப்புள்ள லியோ, தாயன்புடன் இந்தக் காதலை மறுக்க, மனந்தளராமல் நெடுக முயன்று பல இன்னல்களுக்குப் பின் அந்த முயற்சியை வருத்தத்துடன் கைவிட்டார் இரமலிங்கம் அவர்கள். லியோ அவர்கள் பெயருக்குப் பின்னால் தன் பெயர் அமையவேண்டும் என்ற ஆசை கை நழுவிப்போனதில் தன் பெயருக்கு முன்னால் லியோ என்று போட்டு மன அமைதி கொண்டார் திரு.லியோ இராமலிங்கம். அவருடைய காதல் கள்ளங்கபடமற்ற அன்பில் முகிழ்த்தது என்பதற்கு அடையாளமாய் எத்தனையோ நிகழ்வுகள். தன் பெயர்த்திகளை. லியோ அம்மையார் பணிபுரிந்தசமய நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று ஆசி பெறச் செய்வார் அவர்.

கண்ணதாசன், தமிழ்வாணன் போன்றோருடன் நெருங்கிப்பழகி,ஆன்மீக ஈடுபாட்டுடன் எழுபத்தைந்தாவது வயதில் மறைந்த அந்தப் பெரியவருக்குஅஞ்சலி செலுத்தித்திரும்பும்போதுதான் இந்தச் செய்தி.

இயக்குநர் திரு.பாண்டியராஜனின் தாயார் திருமதி சுலோச்சனா அம்மையார் சமீபத்தில் மறைந்தார்.ஏப்ரல் 27ல் திரு.பாண்டியராஜன் அவர்களிடம் துக்கம் கேட்கப் போனபோது அவர் சுமைதாள மாட்டாமல் பகிர்ந்து கொண்ட நினைவுகள் அருமையானவை.

திரைப்படம் ஒன்றிற்காக ஒப்பந்தம் செய்ய வந்த மேஜர் சுந்தர்ராஜன், புதுமையாக இருக்கட்டும் என்று மூன்றரை இலட்சம் ரூபாய்களை இரண்டு ரூபாய். ஐந்து ரூபாய் நோட்டுக்களாக மாற்றி ஒரு பிளாஸ்டிக் மூட்டையில் கட்டி பாண்டியராஜனிடம் தந்தாராம். அந்தபிளாஸ்டிக் மூட்டையை தன் தாயின் காலடிகளில் வைத்து வணங்கி எழுந்த பாண்டியராஜனிடம் அம்மா சொன்ன வார்த்தைகள்,”பார்த்துடா கண்ணு!போலீஸ் பிடிசுக்கப் போவுது!”

பல்லவன் பேருந்து ஓட்டுநர் திரு.ரத்தினம் அவர்களின் மனைவியாக வாழ்ந்து விடலைப்பையனையும், குஞ்சு குளுவான்களாக இருந்த பெண் குழந்தைகளையும்  விட்டு கணவர் மறைய அவர்களை ஆளாக்கிய சுலோச்சனா அம்மையார், ஆயுசு முழுக்க தன் அப்பாவித்தனத்தையும் வளர்த்திருந்தார். சில உறவினர்களின் வீடுகளுக்குப் போகும்போதெல்லாம் சில திரைப்பட ஷீல்டுகள் அவர்கள் வீடுகளில் இருப்பதை கவனித்திருக்கிறார் பாண்டியராஜன். அவர்கள் இந்தப் படதில் நடித்தார்களா என்று ஆச்சரியமாகக் கேட்டபோதுதான் விஷயம் புரிந்தது. தன்னைக் காண வரும் உறவினர்களுக்கு வேஷ்டி புடவை கொடுத்து மரியாதை செய்யும்போது தன் மகன் நடித்தபடங்களின் வெற்றிவிழா ஷீல்டுகளையும் தந்தனுப்புவாராம் அம்மா.

பல அயல்நாடுகளுக்கு அம்மாவை அழைத்துச்சென்ற பாண்டியராஜனின்மனதில் நீங்காத நினைவுகளில் ஒன்று, தன் இரண்டாவது படமே படுதோல்விஅடைந்தபோது நடந்த சம்பவம்.மனைவிரெடி படம் வெளிவந்த காலத்தில், எண்பதுகளில்,13,40,000 ரூபாய் நஷ்டமாகி முட்டி மோதி கதறி அழுது புரண்டபாண்டியராஜன் அருகே அமர்ந்து தன் பிரார்த்தனை
உண்டியலை உடைத்து முவாயிரம் ரூபாய்களை நோட்டும் சில்லறையுமாய் எண்ணி,கைகளில் தந்து,”இந்தா கண்ணு ! இத வச்சுக்க”என்று தந்த நடுங்கும் கரங்கள் இன்றும் அவர் கண்முன்னே வந்து போகின்றன.

எளிய மனிதர்களாகிய இவர்கள் தங்கள் அன்பால் காதலால் கவிதையால் இந்த பூமியை இன்னும் அழகாக்கிவிட்டு புறப்பட்டு விட்டார்கள். இந்த மூவருக்கும் இதய அஞ்சலி

Comments

  1. உங்களோடு சேர்ந்து நாங்களும் அஞ்சலி செலுத்துகிறோம் அம்மூவருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *