“அலோ!’ மரபின்மைந்தருங்களா?”

“ஆமாங்க!வணக்கம்”

வணக்கம்யா! நீங்க ஏடு படிப்பீகளா?”

காலை ஆறரை மணிக்கு இந்த அழைப்பு வந்தபோது தஞ்சாவூர் ஞானம் ஹோட்டல் அறையில் பயணக்களைப்பு நீங்க படுத்துக் கிடந்த   எனக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்னங்க கேட்டீங்க?”

“அதாம்யா! ஏடு படிப்பீகளான்னு கேட்டேன்.எங்கூட்ல எங்க முப்பாட்டன் காலத்து ஏடுகள்லாம் கெடக்கு. நீங்க படிச்சுச் சொல்லுவீகளா?”

“அதெல்லாம் நமக்கு பழக்கமில்லையே”

“அப்படியா?பின்ன  நீங்க என்னமோ கவிஞ்சருன்னு போட்டிருக்கு!!”

“எதிலீங்க போட்டிருக்கு?”
“இன்னைக்கு தினமலருல ஒங்க போட்டா போட்டு நம்பரப் போட்டு கவிஞ்சருன்னு போட்டிருந்தது.நீங்க எழுதப் படிக்கத் தெரியாதுங்கறீய!”

“அய்யா! ஏடு படிக்கத் தெரியாதுன்னுதான் சொன்னேன்”

“அதாங்க நானுஞ் சொன்னேன்! வச்சுரவா”

சில வாரங்களுக்கு முன்னால் மதுரையில் இன்றைய  நெல்லை ஆட்சியரின் துணைவியும் கோவை மாநகரக் காவல்துறை துணை ஆணையருமான அமரர் திருமதி ஹேமா கருணாகரனின் படத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசினேன்.அப்போது தினமலர் நாளிதழ் சார்பாக சந்தித்துப் பேசிவிட்டு தொலைபேசி எண்ணுடன் வெளியிடப் போவதாக சொன்னார்கள் .
அடுத்தடுத்து அழைப்புகள்.”கவிதை எழுதி தமிழ் வளர்க்கும் ஆர்வம் இருந்தும் நேரம் கிடைக்கவில்லை.என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்கும் குரல்கள்,சினிமா பாடலாசிரியராக குறைந்தது எத்தனை கவிதை தொகுப்புகள் எழுதியிருக்க வேண்டும் என்ற சந்தேகம்.

“கண்ணதாசந்தான் ஒங்க கவிதை குரு ன்னு சொல்லியிருக்கீங்களே! நீங்களும் நாட்டுக்கோட்டை செட்டியாரா?”என்று கேட்ட ஒருவர் ‘இல்லை’ என்றதும் “அதனாலென்ன பரவாயில்லை” என்று போனை வைத்து விட்டார்.
அவரே சிறிது நேரத்துக்குப் பின் அழைத்து,”சார்! தப்பா நெனச்சுக்காதீங்க! நீங்க என்ன ஆளுங்க?” என்றார். “பிள்ளைமார்”என்றதும், “நெனச்சேன்! ஜெயகாந்தனை யாரும் தாண்ட முடியாதுன்னு சொல்லியிருக்கீங்களே!” என்றார்.

காலை தஞ்சாவூர் சித்த ஆஸ்ரம விழாவில் கலந்து கொண்டதால் போனை ஒலியெழுப்பா நிலையில் வைத்திருந்தேன்.பலர் அழைத்திருந்தார்கள்.
அந்தப் பட்டியலைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே ஒருவர் அழைத்தார். எடுக்கும் முன் துண்டித்தார். சாப்பிட்டு வருவதற்குள் அவரிடமிருந்தே நான்கைந்து அழைப்புகள்,வந்த வேகத்திலேயே துண்டிக்கப்பட்டன. திரும்ப அழைத்தேன். அவர் சற்று எரிச்சலுடன் பேசினார்.’சார்! ஒங்க தினமலர் பேட்டியை பார்த்துட்டு பாராட்டறதுக்காக ரொம்ப நேரமா மிஸ்டு கால் விட்டுகிட்டே இருக்கேன்..கூப்பிட மாட்டேங்கறீங்களே சார்!! ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *